தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கடவுள் எங்கே எனக் கேட்கத் தோன்றுகிறது: விஜய் ஆண்டனி

3 mins read
e912a93f-8f91-4737-a1d2-1a87b11bce14
விஜய் ஆண்டனி. - படம்: ஊடகம்

தமிழில் ‘காந்தாரா’ போன்ற பிரம்மாண்டமான ஒரு படத்தைத் தயாரிக்கப் போவதாகக் கூறியுள்ளார் விஜய் ஆண்டனி.

தாம் அரசியலுக்கு வருவதற்கான வாய்ப்புகள் இல்லை என்றும் அதற்கான அறிவாற்றல் தம்மிடம் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ளது ‘மார்கன்’ திரைப்படம். மதுரையில் நடைபெற்ற இதன் விளம்பர நிகழ்ச்சியில் நடிகை ப்ரித்திகா, அஜய் திஷன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் பேசிய விஜய் ஆண்டனி, ‘மார்கன்’ திரைப்படம் ‘காந்தாரா’ போன்று பிரம்மாண்ட கிராமத்துக் கதை என்றார்.

“படத்தொகுப்பாளராக இருந்த லியோ ஜான்பால் இப்படத்தின் மூலம் இயக்குநராகி உள்ளார். அவர், இப்படத்தின் கதையை என்னிடம் விவரித்தபோது, ‘ஏன் இவரையே இயக்குநராக மாற்றக்கூடாது’ என்ற யோசனை வந்தது. நான் நினைத்தது போலவே ‘மார்கன்’ நல்ல படைப்பாக உருவாகி உள்ளது,” என்றார் விஜய் ஆண்டனி.

தாம் ஏன் கிராமம் சார்ந்த கதைகளில் நடிப்பதில்லை என்று பலரும் கேட்பதாகக் குறிப்பிட்ட அவர், மிக விரைவில் அப்படிப்பட்ட படத்தில் நடிக்க இருப்பதாகக் கூறினார்.

தாம் ஏற்கெனவே ‘அண்ணாதுரை’, ‘காளி’ போன்ற கிராமத்துப் பின்னணி கொண்ட படங்களில் நடித்திருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

“முன்பெல்லாம் நாள்தோறும் 20 ஆயிரம் பேர் படம் பார்ப்பார்கள், தற்போது 20 லட்சம் பேர் ஒரே நாளில் படம் பார்க்கிறார்கள்.

“அப்போது 100 நாள்கள் ஓடுகின்ற படங்கள் இருந்தன. இப்போது, அதிக எண்ணிக்கையிலான திரையரங்குகளில் படம் வெளியாவதால் 10 நாள்கள் ஓடினாலே பொருளியல் ரீதியாக வெற்றி என்று நிலைமை மாறிவிட்டது.

“மேலும், அப்போது திரையரங்குகள் மட்டும் இருந்தது, தற்போது செயற்கைக்கோள், மின்னிலக்க வாய்ப்புகளும் இருப்பதால் ஒருவாரம் ஓடினாலே வெற்றிதான்,” என்கிறார் ஆண்டனி.

திடீரென இஸ்‌ரேல், பாலஸ்தீன விவகாரம் குறித்தும் தனது கருத்தை அவர் பகிர்ந்துகொண்டார்.

“போர் என்பது யார் செய்தாலும் தவறுதான். உட்கார்ந்திருக்கும் இடத்திலிருந்து போர் என்று அறிவித்துவிடுகிறார்கள். ஆனால் இறப்பது பொதுமக்கள்தான்.

“காசா குழந்தைகளைப் பார்க்கும்போது மிகுந்த கவலையாக இருக்கிறது. இப்போதெல்லாம் கடவுள் எங்கே போனார் எனக் கேட்கும் மனநிலை வந்துவிடுகிறது. போர் நடக்க வேண்டாம் என்பதே என் ஆசை,” என்று அவர் வேதனையுடன் குறிப்பிட்டார்.

திரையுலகத்தினர் மத்தியில் போதைப்பொருள் புழக்கம் இருப்பதாக ஊடகங்களில் வெளியாகும் பல்வேறு தகவல்கள் குறித்தும் விஜய் ஆண்டனி பேசினார்.

“போதைப்பொருள் என்பது உலகம் உருவான காலத்திலிருந்தே உள்ளது. புகைபிடிப்பதின் அடுத்த கட்டம்தான் போதைப்பொருள்.

“நான் அரசியலுக்கு வருவதற்கான வாய்ப்புகள் இல்லை. அதற்கான அறிவு என்னிடம் இல்லை. 50 வயது ஆகிவிட்டது.

“வட்டம், மாவட்டம் என அரசியல் பற்றி எதுவும் தெரியாது. மக்களைச் சந்தித்துப் புரிந்துகொள்ள வேண்டும். புகழ் இருக்கிறது என்பதற்காக அரசியலில் குதிக்க முடியாது,” என்ற விஜய் ஆண்டனி, பத்து ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் திரைப்படங்களுக்கு இசையமைக்க முடிவு செய்துள்ளாராம்.

மற்ற நடிகர்களை வைத்து படம் தயாரிக்கவும் முடிவு செய்துள்ளதாகச் சொல்கிறார்.

“எனது படங்களின் தலைப்பு வித்தியாசமாக இருப்பதாகச் சொல்கிறார்கள். பணக்காரன் என்றுதான் அனைவரும் தலைப்பு வைக்கிறார்கள். யாசகம் கேட்பவர்களை யாரும் கண்டுகொள்வதில்ல. அதனால்தான் ‘பிச்சைக்காரன்’ என்ற தலைப்பு வைக்கப்பட்டது.

“எனக்கு ஜோதிடத்திலோ, நல்லது, கெட்டது ஆகியவற்றிலோ நம்பிக்கை கிடையாது. இவற்றை நம்பாததால்தான் என் படங்களுக்கு நல்ல தலைப்புகள் கிடைப்பதாக நினைக்கிறேன். ஒரு படத்தின் தலைப்பு பொருத்தமாக இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருப்பேன்,“ என்கிறார் விஜய் ஆண்டனி.

குறிப்புச் சொற்கள்