யாரிடமும் பணம் வாங்கி நான் உதவி செய்யவில்லை: விமர்சனத்திற்கு பாலா பதில்

2 mins read
ca34f8c0-b447-4332-98d5-2672f1667988
தன்னிடம் உதவி கேட்ட உடற்குறையுள்ள பெண்ணுக்கு இருசக்கர வாகனம் வழங்கி அப்பெண்ணின் எட்டு ஆண்டுக் கனவை நிறைவேற்றிய பாலா. - படம்: ஊடகம்

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளான ‘கலக்கப் போவது யாரு’, ‘குக்கு வித் கோமாளி’ போன்றவை மூலம் தமிழக மக்கள் மத்தியில் பிரபலமானவர் ‘கேபிஒய்’ பாலா.

ஷெரீஃப் இயக்கத்தில் விவேக்-மெர்வின் இசையில் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியான ‘காந்தி கண்ணாடி’ படத்தில் கதாநாயகனாக அவர் நடித்திருக்கிறார்.

சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்துள்ள பாலா, தம்முடைய நடிப்பால் மட்டுமன்றி சமூகச் சேவை மூலமும் மக்களின் மனத்தில் இடம்பிடித்துள்ளார்.

பல கிராமங்களுக்கு ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்திக் கொடுப்பது, பொருளியல் ரீதியில் பின்தங்கிய நிலையில் உள்ள குழந்தைகளைப் படிக்க வைப்பது போன்ற செயல்களில் தம்மை அவர் ஈடுபடுத்தியுள்ளார்.

இந்நிலையில் சென்னையில் நேற்று முன்தினம் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பாலாவிடம், “நீங்கள் மற்றவர்களிடம் பணம் வாங்கி உதவுவதாக வரும் விமர்சனங்களை எப்படிப் பார்க்கிறீர்கள்?” என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவர், “இதுவரை நான் யாரிடமும் பணம் வாங்கி உதவி புரிந்ததில்லை. இரவு பகலாகப் பாடுபட்டு உழைத்த பணத்தில்தான் நான் மற்றவர்களுக்கு உதவி செய்கிறேன். இதற்குப் பிறகும் நான் யாரிடமும் பணம் பெற்று சமூகச் சேவை செய்யமாட்டேன்,” என அவர்மீது வைக்கப்பட்ட எதிர்மறை விமர்சனங்களுக்குப் பதிலளித்தார்.

மேலும், “ஒரு விழுக்காடு மக்கள் தன்னை விமர்சித்தாலும் 99 விழுக்காடு மக்கள் அந்த விமர்சனத்திற்கான பதிலை அளிக்கின்றனர். விமர்சிப்பவர்களுக்கு நான் தனிப்பட்ட முறையில் பதிலளிக்கத் தேவையில்லை,” என்றார் பாலா.

என்னுடைய முன்னேற்றத்திற்குத் தமிழக மக்களே காரணம் என்ற அவர், எப்போதுமே அவர்களுக்கு நன்றியுள்ளவனாக இருப்பேன் எனக் கூறினார்.

இதற்கிடையில், திரையரங்குகளில் சுவரெட்டிகள் ஒட்டுவதற்கும் பதாகைகள் வைப்பதற்கும் முடியவில்லை என அவர் குறிப்பிட்டார்.

இதனால், மக்கள் திரையரங்கிற்கு வந்துவிட்டு ‘காந்தி கண்ணாடி’ படம் வெளியாகவில்லை என நினைத்து படம் பார்க்காமல் சென்றுவிடுகின்றனர் என மிகவும் வேதனையுடன் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்