முழுநீள நகைச்சுவைப் படத்தில் நடிக்க ஆசை: ஷிவாத்மிகா

3 mins read
3aca6060-ae7a-4d29-923d-74bc2e8edc4f
ஷிவாத்மிகா. - படம்: ஊடகம்
multi-img1 of 3

அண்மையில் தமிழில் வெளியான ‘பாம்’ படத்தின் மூலம் தாம் முக்கியப் பாடம் ஒன்றைக் கற்றுக்கொண்டதாகச் சொல்கிறார் நடிகை ஷிவாத்மிகா (படம்).

எவ்வளவு தாமதங்கள், சிரமங்கள் ஏற்பட்டாலும் நம்பிக்கையோடு முன்னேறினால் மட்டுமே வெற்றி சாத்தியமாகும் என்பதுதான் அந்தப் பாடமாம்.

காரணம், இப்படத்தின் படப்பிடிப்பின்போது பலவிதமான பிரச்சினைகள் குறுக்கிட்டன என்றும் ஆனால், இயக்குநர் விஷால் வெங்கட்டின் திட்டமிடுதலும் திறமையும் அனைவருக்கும் நம்பிக்கையூட்டியுள்ளது என்றும் பாராட்டுகிறார்.

இயக்குநர்கள் மணிரத்னம், வெற்றிமாறன் ஆகிய இருவரும் இவரது விருப்பப் பட்டியலில் உள்ளனர்.

“அதேசமயம் மற்ற அனைத்து இயக்குநர்களுடனும் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன். அந்தப் பட்டியல் பெரிதாக இருக்கும் என்பதால் இப்போது ஏதும் சொல்வதற்கில்லை.

“நான் குறிப்பிட்டுள்ள இரண்டு இயக்குநர்களின் படங்களில் பெண் கதாபாத்திரங்களுக்கான களம் சற்று பெரிதாக இருக்கும். கதைச் சொல்லும் விதமும் நேர்த்தியாக இருக்கும்.

“எதிர்காலத்தில் எனது கனவு நனவாகும் என நம்புகிறேன்,” என்று சொல்லும் ஷிவாத்மிகா, நட்சத்திரங்களின் வாரிசு, கவர்ச்சி ஆகியவைதான் திரையுலகில் முக்கியமானவை என்று கூறப்படுவதை ஏற்க மறுக்கிறார்.

உண்மையில் மக்கள் நல்ல கலைஞர்களை ஏற்றுக்கொள்வதற்குத் திறமைதான் முக்கியம் என்றும் கவர்ச்சி, வாரிசு ஆகியவற்றுக்கு அடுத்தடுத்த இடங்கள்தான் என்றும் உறுதியாகச் சொல்கிறார்.

“அப்போதுதான் நம்மிடம் ஏதோ ஒரு சிறப்பு இருக்கிறது என்பதை மக்கள் மட்டுமல்ல, நீங்களும் ஏற்பதாக அர்த்தம்.

“தற்போது அனைத்துவிதமான கதைகளும் தேடி வருகின்றன. ஐந்து படங்களில் நடித்து வருகிறேன். அனைத்துமே ஒன்றுக்கொன்று முற்றிலுமே வித்தியாசமானவை. ஐந்து தனித்தன்மை கொண்ட கதாபாத்திரங்களில் நடிக்கிறேன்.

“இதற்காக வாய்ப்பு அளித்த இயக்குநர்களுக்கு நன்றி. அவர்களிடம் நான் பெற்றுள்ள நம்பிக்கைதான் ஒரு நடிகையாக நான் சம்பாதித்துள்ள சொத்து என்பேன்.

“குறிப்பிட்ட வகை கதாபாத்திரங்களில்தான் நடிக்க வேண்டும் என்று இதுவரை எந்த எண்ணமும் இல்லை. எனினும், அண்மைக் காலமாக முழுநீள நகைச்சுவைக் கதையில் நடித்தால் எப்படி இருக்கும் என்ற எண்ணம் மனத்தில் அவ்வப்போது தோன்றி மறைகிறது.

“அதேபோல் முழு நீள அதிரடிப் படத்தில் நடிக்கும் விருப்பமும் உள்ளது,” என்று அண்மைய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் ஷிவாத்மிகா.

இவர், நட்சத்திர தம்பதியர் டாக்டர் ராஜசேகர், ஜீவிதா தம்பதியரின் மகள். பெற்றோர் வழியில் அல்லாமல் தனது பாணியில் தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்திச் சாதித்து வருகிறார்.

‘பாம்’ படத்தில் அர்ஜுன் தாசுடன் இணைந்து நடித்ததை நல்ல அனுபவம் என்று பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

“அனைவரிடமும் எளிமையாகப் பழகக்கூடியவர் அர்ஜுன் தாஸ். முதல் சந்திப்பில் இருந்தே சாதாரணமாக, இயல்பாகப் பழகினார். அவரது அணுகுமுறை மிகுந்த தன்னம்பிக்கையைத் தந்தது. அதனால்தான் எனது கதாபாத்திரத்தைச் சிறப்பாகச் செய்ய முடிந்தது. இப்போது அவர் எனது நெருங்கிய நண்பர் எனச் சொல்லும் அளவுக்கு, எங்களுக்குள் அழகான நட்பு உருவாகி உள்ளது.

“இதேபோல் ‘ரங்க மார்த்தாண்டா’ என்ற படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணனுடன் இணைந்து நடித்தேன். படப்பிடிப்பின்போது என்னைப் போன்ற வளர்ந்துவரும் கலைஞர்களைப் பாராட்டிக்கொண்டே இருப்பார் ரம்யா. ‘படையப்பா’, ‘பாகுபலி’ போன்ற படங்களில் நடித்த கம்பீரமான நடிகை. படப்பிடிப்புத் தளத்தில் இவ்வளவு ஜாலியாக இருப்பார் என எதிர்பார்க்கவே இல்லை,” என்கிறார் ஷிவாத்மிகா.

குறிப்புச் சொற்கள்