உள்நாட்டு விமானச் சேவை மூலம் திருநெல்வேலி செல்ல கடப்பிதழ் இல்லையே என தாம் ஒரு காலத்தில் அழுது புலம்பிய அனுபவத்தை பகிர்ந்துகொண்டுள்ளார் இயக்குநர் மாரி செல்வராஜ்.
அண்மையில், ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பறந்து போ’ பட விழாவில் பேசிய அவர், இன்று தாம் வளர்ந்து ஆளாகி குடும்பத்துடன் ஜப்பான் வரை சென்று திரும்பியபோது இயக்குநர் ராமை நினைத்துக் கொண்டதாகக் குறிப்பிட்டார்.
“ராம் இயக்கிய ‘தங்க மீன்கள்’ படத்தின் படப்பிடிப்பில் இருந்தபோது திருநெல்வேலியில் இருந்த என் தந்தையைப் பாம்பு கடித்துவிட்டதாகத் தகவல் வந்தது. அதைக் கேட்டு நான் அழத்தொடங்கிவிட்டேன்.
“உடனே ராம் நெல்லை செல்ல விமானப் பயணச் சீட்டுக்கு ஏற்பாடு செய்தார். ஆனால் அவரிடம், ‘என்னிடம் கடப்பிதழ் இல்லையே’ என்று சொன்னபோது, உள்நாட்டுப் பயணத்துக்கு கடப்பிதழ் தேவையில்லை என்பதை விளக்கிச் சொன்னார்.
“இப்போது ஜப்பான் சென்றபோது என் மகன் தொலைந்துபோக, அப்போதும் ராம் நினைவுதான் வந்தது. என்னைப் போலவே அவருக்கும் என் மகன் மீது மிகுந்த பாசம் உண்டு,” என்று நினைவுகளைப் பகிர்ந்தார் மாரி செல்வராஜன்.