நடிகை சவுந்தர்யாவைப் போல் தானும் விமான விபத்தில் இறந்திருக்கக்கூடும் என்று அண்மைய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார் நடிகை மீனா.
திரையுலகில் முன்னணி நாயகியாக வலம்வந்த வேளையில், பிரபல அரசியல் கட்சியில் சவுந்தர்யா இணைந்ததாகத் தகவல் வெளியானது. மேலும், அக்கட்சியின் தேர்தல் பிரசாரத்தில் கலந்துகொள்ள, தனது சகோதரருடன் தனி விமானத்தில் சென்றபோது, விமானம் விபத்துக்குள்ளாகி அவர் மரணமடைந்தார். தென்னிந்தியத் திரையுலகத்தினரை இந்தச் சம்பவம் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்நிலையில், விபத்துக்குள்ளான அதே விமானத்தில் தானும் பயணம் செய்யத் திட்டமிட்டிருந்ததாக நடிகை மீனா அண்மைய பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
“சவுந்தர்யா அற்புதமான பெண். நெருங்கிய தோழியும்கூட. விபத்து நிகழ்ந்த அன்று அவருடன் நானும் பயணம் செய்ய இருந்தேன்.
“எனக்கும் பிரசாரத்தில் பங்கேற்க அழைப்பு வந்தபோது, அரசியலில் இருந்து விலகி நிற்க விரும்பினேன். எப்படியோ, கடைசி நேரத்தில் அந்தப் பயணத்தை என்னால் தவிர்க்க முடிந்தது.
“ஆனால், அந்தப் பயணம் இப்படியோர் அதிர்ச்சி முடிவைச் சந்திக்கும் என நான் கனவிலும் நினைக்கவில்லை,” என்று கூறியுள்ளார் மீனா.

