ரசிகர்கள் கொண்டாடியதை வாழ்நாள் முழுவதும் மறக்க இயலாது: வர்ஷினி

2 mins read
8907d201-77b0-41b7-91c4-276702ad8aaf
வர்ஷினி. - படம்: ஊடகம்
multi-img1 of 2

“திரையுலகில் நடிகையாக சாதிக்க வேண்டும் என்பதையே லட்சியமாகக் கொண்டிருந்தேன். எத்தனை ஆண்டுகளானாலும் அதற்கான முயற்சியைக் கைவிடக்கூடாது என்பதிலும் உறுதியாக இருந்தேன்,” என்கிறார் இளம் நாயகி வர்ஷினி.

தனது முயற்சியில் வெற்றிபெற்ற மகிழ்ச்சியை அவரது முகத்தில் காண முடிகிறது.

‘பிக்பாஸ்’ வர்ஷினி என்று குறிப்பிட்டால் ரசிகர்கள் இவரை எளிதில் அடையாளம் கண்டுகொள்கிறார்கள். ‘சொட்டச்சொட்ட நனையுது’ என்ற பெயரில் உருவாகும் படத்தில் வர்ஷினிதான் கதாநாயகி.

“எடுத்த எடுப்பிலேயே நாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்துவிடவில்லை. கல்லூரியில் படித்தபோது குடும்ப நண்பர் ஒருவர் மூலம் ‘சதுரங்க வேட்டை-2’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்தப்படம் வெளியாகவில்லை. எனினும், அந்தப் படம் மூலம் கிடைத்த தொடர்புகள் வீண்போகவில்லை. ‘வரமே சாபம்’, ‘லக்கி டிரிப்ஸ்’, ‘லாரா’ ஆகிய படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் தேடிவந்தன.

“திரைப்படங்களைக் கடந்து ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு வந்தபோது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. நிகழ்ச்சியில் பங்கேற்பதால் கிடைக்கும் வெற்றி, தோல்வியை மீறி எங்கு சென்றாலும் ‘பிக்பாஸ்’ வர்ஷினி என்று ரசிகர்கள் என்னை அழைப்பது உற்சாகம் தருகிறது. ரசிகர்களின் இந்த அன்புதான் சினிமாவில் என்னை கதாநாயகியாக உயர்த்தியுள்ளது,” என்று சொல்லும் வர்ஷினி, சென்னையைச் சேர்ந்தவர்.

மைலாப்பூரில் வசித்து வந்தவருக்கு சிறு வயதிலேயே சினிமா மீது மிகுந்த ஈர்ப்பு இருந்ததாம். மேல்நிலைப் பள்ளியில் படித்தபோது சில விளம்பர வாய்ப்புகள் தேடிவந்தாலும், முதலில் படிப்பு, பிறகுதான் நடிப்பு என்று இவரது தாயார் கண்டிப்புடன் கூறியுள்ளார். இப்போது மொத்த குடும்பமும் வர்ஷினிக்குப் பக்கபலமாக உள்ளதாம்.

கமல்ஹாசன், தனுஷ், நயன்தாரா ஆகிய மூவரும்தான் இவருக்கு மிகவும் பிடித்தமான கலைஞர்கள். தினமும் தவறாமல் உடற்பயிற்சி செய்வது, சரியான நேரத்துக்குச் சாப்பிடுவது, முடிந்தவரை பழரசங்கள் பருகுவது எனத் தம்மிடம் பல நல்ல குணங்கள் இருப்பதாகச் சொல்கிறார்.

“கமல் மிகப்பெரிய கலைஞர். அவரிடமிருந்து நிறைய கற்றுக்கொள்ள முடியும். அடுத்து தனுஷ் நடிப்பும் மிகவும் பிடிக்கும்.

“நயன்தாரா நடித்த படங்களைப் பார்க்கும் போதெல்லாம் அவரது கதாபாத்திரங்கள் என்னை ஏங்க வைக்கும். குண்டர் கும்பல் தொடர்பான கதைகள் அமைந்தால் ஒருகை பார்த்துவிடுவேன். அதற்கேற்ப எனது உடல்வாகு கச்சிதமாக இருப்பதாகப் பலரும் ஏற்கெனவே கூறியுள்ளனர்.

“அண்மையில் வெளியான ‘டிடி நெக்ஸ்ட்’ படத்தில் குறிப்பிட்ட சில காட்சிகளில் மட்டுமே நடித்துள்ளேன். ஆனால், திரையரங்கில் படம் பார்த்தபோது, ரசிகர்கள் என் பெயரை உரக்கச்சொல்லி கொண்டாடியது வாழ்நாள் முழுவதும் மறக்க இயலாத அனுபவம். இதுபோன்ற தருணங்களுக்காகத்தான் கலைஞர்கள் தவம் கிடைக்கிறார்கள். அதுபோன்ற தருணம் எனக்கும் அமைந்ததில் மகிழ்ச்சி.

“அதனால்தான் எனக்கு நெருக்கமானவர்களிடம், ‘வாழ்நாள் இறுதிவரை நடிகையாகவே வாழ்ந்துவிட வேண்டும். அதுவே என் விருப்பம்’ என அடிக்கடிச் சொல்வேன்.

“முதலிடத்தில் உள்ள நடிகை, விருதுகள் என்றெல்லாம் நான் ஆசைப்படவில்லை. மக்களுக்குப் பிடித்தமான நடிகை என்ற பெயர் கிடைத்தால் அதுவே போதும்,” என்று பக்குவமாகப் பேசுகிறார் பிக்பாஸ் வர்ஷினி.

குறிப்புச் சொற்கள்