எல்லா அனுபவங்களுக்கும் நாமே காரணம்: தேஜு அஸ்வினி

2 mins read
0f2c7375-d96a-4db2-b4b2-0523ffdbb922
 தேஜு அஸ்வினி. - படம்: ஊடகம்
multi-img1 of 2

‘பிளாக்மெயில்’ படத்தில் ஜிவி பிரகாஷுடன் நடித்துள்ளார் தேஜு அஸ்வினி.

பிறந்தது ஆந்திராவில் என்றாலும், நன்றாகத் தமிழ் பேசுகிறார்.

இதற்கு முன்பு, ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’, ‘என்ன செய்ய போகிறாய்’, ‘பாரிஸ் ஜெயராஜ்’ உள்ளிட்ட தமிழ்ப் படங்களில் தேஜு அஸ்வினியைப் பார்த்திருக்க முடியும். ஆனால், அந்தப் படங்களைவிட ‘பிளாக்மெயில்’ படத்தை மிகவும் எதிர்பார்க்கிறாராம்.

“எனக்குப் பூர்வீகம் மட்டுமே ஆந்திரா. மற்றபடி, கல்லூரிப் படிப்பை சென்னையில்தான் முடித்தேன்.

“எங்கள் குடும்பமே கலைக் குடும்பம்தான். அப்பா கிட்டார் கலைஞர். அம்மா குச்சிப்புடி நடனக் கலைஞர். என் அக்காவும் நானும் சிறு வயது முதல் வாய்ப்பாட்டு, நடனம் எனக் கற்றுக்கொள்ள ஆரம்பித்துவிட்டோம்,” என்று தன் குடும்பம் குறித்து பெருமிதத்துடன் குறிப்பிடுகிறார் தேஜு அஸ்வினி.

கல்லூரிப் படிப்பை முடித்ததும், ஒரு மாதம்கூட வீட்டில் இருந்து பொழுதை வீணடிக்கவில்லையாம். சொந்த நிறுவனத்தைத் தொடங்கி பள்ளி, கல்லூரிகளில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு நடன அமைப்பாளராக வேலை பார்த்தாராம்.

இவற்றுக்கு இடையே, கிடைத்த நேரத்தில் தனக்குப் பிடித்தமான பாடல்களுக்கு நடனமாடி, இன்ஸ்டகிராமில் பதிவிட, அவைதான் சினிமா வாய்ப்பைப் பெற்றுத் தந்திருக்கிறது.

தேஜு அஸ்வினி இதுவரை நடித்த படங்கள் எல்லாமே குறைந்த செலவில் உருவானவை. ஒருசிலர், ‘அதிக செலவில் தயாரான படத்தில் நடித்திருந்தால் இந்நேரம் முன்னணி நடிகையாக உருவாகி இருக்கலாமே’ என்று துக்கம் விசாரிப்பதுபோல் கேட்கிறார்களாம்.

“கடவுள் ஒரு விஷயத்தை நடத்த தீர்மானித்துவிட்டார். யார் தடுத்தாலும், எது தடுத்தாலும் அது நடந்தே தீரும். எனவே நமக்கு எது கிடைக்க வேண்டும் என விதியில் குறிப்பிடப்பட்டிருக்கிறதோ, அந்த வாய்ப்புதான் கிட்டும்.

“எனவே, பெரிய, பிரம்மாண்ட படங்களில் நடிக்கவில்லை என்பது குறித்து எந்தவித வருத்தமும் இல்லை,” என்று பக்குவமாகப் பேசும் தேஜு அஸ்வினிக்கு, கடவுள் நம்பிக்கை உண்டாம்.

சில மனிதர்கள் மீதும் அசைக்கமுடியாத நம்பிக்கை வைத்துள்ளதாகச் சொல்கிறார். அவர்கள் யார் என்று கேட்டால், தத்துவார்த்தமாக இன்னொரு பதில் வருகிறது.

.“நாம் பிறர்க்கு நன்மை செய்தால், நமக்கு நல்லது நடக்கும். கெட்டது செய்தால் நமக்கும் அதுதான் நடக்கும். எல்லா அனுபவங்களுக்கும் நாமே காரணம் என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது,” என்று கூறுகிறார் தேஜு.

தற்போது தமிழில் ‘பிளாக்மெயில்’ படத்தை முடித்திருப்பவர், அடுத்து, புதுப் படங்களில் நடிக்க கதை கேட்டு வருகிறாராம்.

ஜிவி பிரகாஷுடன் ஒரு படத்தில் நடித்து முடிப்பதற்குள், தெலுங்கில் இரண்டு படங்களில் ஒரே மூச்சில் நடித்து முடித்துவிட்டதாகச் சொல்கிறார்.

“தெலுங்கிலும் மேலும் இரண்டு படங்களில் ஒப்பந்தமாகி உள்ளேன். இப்போதுதான் அங்கு நான் எதிர்பார்த்த கதாபாத்திரங்கள் அமைகின்றன. தமிழிலும் இதேபோல் சொல்வதற்கு ஏற்ப வாய்ப்புகள் அமைந்தால் மகிழ்வேன்,” என்கிறார் தேஜு அஸ்வினி.

பிடித்த நடிகர்கள் யார் என்று கேட்டால், ரஜினி முதல் ஹரீஷ் கல்யாண் வரை அனைவரையும் பிடிக்கும் என்பதே அவரது பதிலாக வருகிறது.

குறிப்புச் சொற்கள்