வழக்கத்தைவிட இருமடங்கு உற்சாகத்துடன் காணப்படுகிறார் துருவ் விக்ரம். காரணம், மாரி செல்வராஜ் இயக்கியுள்ள ‘பைசன்’ திரைப்படம்.
தீபாவளி வெளியீடாக திரைகாண உள்ள இந்தப் படம், தனது திரைப்பயணத்தில் நல்ல திருப்பங்களைக் காணும் என உறுதியாக நம்புகிறாராம்.
துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், பசுபதி எனப் பலரும் நடித்திருக்கும் இப்படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார். ஏற்கெனவே படத்தின் பாடல்கள் இணையத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.
அண்மையில் நடைபெற்ற படத்தின் அறிமுக நிகழ்வில் பேசியபோது, மாரி செல்வராஜை ‘எங்கள் இயக்குநர்’ என்று உரிமையோடும் பாசத்தோடும் குறிப்பிட்டார் துருவ்.
“இதுவரை நான் இரண்டு படங்கள்தான் நடித்திருக்கிறேன். அவை இரண்டையும் யாரும் பார்க்கவில்லை என்றாலும் பரவாயில்லை. ஆனால் ‘பைசன்’ படத்தை எல்லாரும் கண்டிப்பாகப் பார்க்க வேண்டும். காரணம், இதுதான் என்னுடைய முதல் படம் என்பேன். அப்படித்தான் நான் பார்க்கிறேன். நீங்களும் அப்படித்தான் பார்ப்பீர்கள் என நம்புகிறேன்.
“இந்தப் படத்துக்காக 100% உழைப்பைக் கொடுத்திருக்கிறேன் என உறுதியாகச் சொல்ல முடியும். திரையரங்கில் படத்தைப் பார்க்கும்போது அந்த உழைப்பு ரசிகர்கள் கண்களுக்குப் புலப்படுகிறதா என்பதுதான் முக்கியம்,” என்றார் துருவ்.
அனைத்தையும் கடந்து, படக்குழுவினரையும் கடந்து, இயக்குநர் மாரி செல்வராஜ் மிகவும் கஷ்டப்பட்டு ஒரு சிறந்த படைப்பை உருவாக்கி இருப்பதாக விகடன் ஊடகப் பேட்டியில் கூறியுள்ள துருவ், ‘பைசன்’ படம் தனக்கு மிக அற்புதமான அனுபவத்தை தந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
“நான் இப்போது ஒரு நடிகர் கிடையாது. மாறாக, கபடி வீரனாகவே நினைக்கத் தோன்றுகிறது. படத்துக்காக நான் கபடி கற்றுக்கொண்டபோது, மிக முக்கியமான ஒரு போட்டியில் விளையாடப் போகிறோம் என்ற உணர்வே மேலோங்கி நின்றது,” என்றார் துருவ்.
தொடர்புடைய செய்திகள்
முன்னதாகப் பேசிய படத்தின் நாயகி ரஜிஷா விஜயன், மாரி செல்வராஜுடன் தாம் பணியாற்றும் இரண்டாவது படம் ‘பைசன்’ என்றும் தமிழில் தன்னை அறிமுகப்படுத்தியது மாரிதான் என்றும் குறிப்பிட்டார்.
“இதற்கு முன்பு அவர் இயக்கிய ‘கர்ணன்’ படத்தில் நடித்திருந்தேன். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இது அழகான படம். சில சிறந்த மனிதர்களுடன், குறிப்பாக துருவ், அனுபமாவுடன் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது. இப்படத்தின் மூலம் இருவரும் எனக்கு நண்பர்களாகக் கிடைத்துள்ளனர்.
“மிக முக்கியமான கதையை மிக நேர்த்தியாக படமாக்கி உள்ளார் மாரி செல்வராஜ். இந்தப் படத்தின் சிறு பகுதியாக இருப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது என் அதிர்ஷ்டம்.
“ஒரு நடிகையாக நாம் மேற்கொள்ளும் பயணத்தின்போது பல விருதுகள் கிடைக்கக்கூடும். பாராட்டுகள் தேடிவரும். ஆனால் உண்மையான கலைஞர்களுக்கு ரசிகர்களின் அன்பு மிக முக்கியமானது. அடுத்து இயக்குநர்கள் தன் மீது வைத்துள்ள நம்பிக்கை. இவைதான் மற்ற அனைத்தையும்விட அதிக மகிழ்ச்சியைத் தரும்.
“அவ்வாறு என் மீது நம்பிக்கை வைத்து இந்த வாய்ப்பை எனக்கு அளித்துள்ளார் மாரி,” என்றார் ரஜிஷா விஜயன்.