தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ரசிகர்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்: பிரதீப் ரங்கநாதன்

2 mins read
d477efb0-3919-4b57-a310-0b2cb163751d
பிரதீப் ரங்கநாதன். - படம்: ஊடகம்

‘டிராகன்’ படத்தின் நூறாவது நாள் விழா சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் அனைவருக்கும் சிறப்பு நினைவுப் பரிசு ஒன்று வழங்கப்பட்டது.

இன்றைய தேதியில் தமிழ்த் திரையுலகின் முன்னணி நாயகர்கள் வரிசையில் பிரதீப் ரங்கநாதனுக்கு நிச்சயம் இடமுண்டு என்று கண்ணை மூடிக்கொண்டு உறுதிபடக் கூறலாம்.

அஸ்வத் மாரிமுத்து - பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் உருவாகி கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி வெற்றிபெற்ற படம் ‘டிராகன்’. இந்தப் படம் செய்த வசூல் மாயாஜாலத்தால், பல இயக்குநர்கள் பிரதீப்பை வைத்துப் படம் எடுக்க வரிசையில் காத்திருக்கிறார்கள்.

தொடர் வெற்றிகள் தந்துள்ள உற்சாகத்துடன் வெற்றி விழாவில் பேசினார் பிரதீப்.

“முன்பு ‘ஓ மை கடவுளே’ படத்தை இயக்கியபோதே, அஸ்வத் அதில் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க அழைத்தார். ஆனால், நான் ஒரு நம்பிக்கையில், ‘நடித்தால் நாயகனாகத்தான் நடிப்பேன்’ என்று சொல்லிவிட்டேன்.

“பின்னர் ‘லவ் டுடே’ படம் முடித்த பிறகு அவரே என்னைத் தொடர்புகொண்டு பேசினார். நூறு நாள் ஓடக்கூடிய படத்தை உருவாக்கலாம் என்ற நம்பிக்கையை அளித்தார்.

“வாக்களித்தபடியே இன்று நூறாவது நாள் கொண்டாடுகிறோம். இந்த வெற்றி எனக்கு மிகவும் முக்கியமானது. இதற்காக ரசிகர்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்,” என்றார் பிரதீப் ரங்கநாதன்.

இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து பேசும்போது, தானும் பிரதீப்பும் மிக நெருக்கமான நண்பர்கள் எனக் குறிப்பிட்டார்.

இருவரும் சென்னையில் உள்ள மடிப்பாக்கம், குரோம்பேட்டை பகுதிகளில் முன்பு சுற்றி வந்ததாகவும் அப்போது ‘நான் கதாநாயகனாகப் போகிறேன்’ என்று பிரதீப் கூறியதாகவும் அஸ்வத் நினைவுகூர்ந்தார்.

அப்போதே ‘டிராகன்’ படத்தின் கதை குறித்து இருவரும் நிறைய பேசி இருக்கிறார்களாம்.

“இந்த நாள் வரும் என்று நாங்கள் அப்போதே நம்பிக்கையோடு நினைத்திருக்கிறோம். அதற்காக நாங்கள் உழைக்கவும் செய்தோம். அந்த உழைப்புக்குரிய பரிசுதான் இந்த மேடை.

“இன்று இப்படத்தின் அத்தனை கலைஞர்களுக்கும் விருது கிடைத்திருக்கிறது. அலுவலக உதவியாளர் வரை அனைவருக்கும் விருது கிடைத்ததில் மிகுந்த மகிழ்ச்சி. ‘லவ் டுடே’ படத்தைவிட ‘டிராகன்’ படத்துக்கும் பிரதீப்புக்கு அதிக ரசிகர்கள் கிடைத்திருக்கிறார்கள்.

“இதையெல்லாம் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. அப்படி பிரதீப்புக்காக ஒரு நாள் நேரு அரங்கம் நிரம்பும். அந்த நாளை நான் ஒரு நண்பனாக இருந்து பார்க்க வேண்டும்,” என்று வாழ்த்தினார் அஸ்வத்.

அடுத்து பேசிய ‘டிராகன்’ தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தியும் தன் பங்குக்கு பிரதீப்பைப் பாராட்டினார். இளம் இயக்குநர்கள் அஸ்வத் மாரிமுத்து, பிரதீப் ரங்கநாதன் இருவரையும் முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும் என அறிவுரையும் வழங்கினார்.

‘டிராகன்’ போன்ற அர்த்தமுள்ள, அழகான, வணிகப் படம் வருவது அரிது என்றும் அர்ச்சனா குறிப்பிட்டார்.

“அப்படியான ஒரு நல்ல படத்தைக் கொடுத்த அஸ்வத் மாரிமுத்துவுக்கும் பிரதீப்புக்கும் நன்றி. அடுத்த தலைமுறை இயக்குநர்கள் அஸ்வத் மாரிமுத்து போலவும் பிரதீப் ரங்கநாதன் போலவும் இருக்க வேண்டும்.

“இங்கு கதைதான் ராஜா. நல்ல கதைகளைச் சொன்னால், உலகமெங்கும் இருக்கும் தமிழ் மக்கள் அதை ஏற்றுக்கொள்வார்கள். இளம் இயக்குநர்களுக்கு எழுத்தாற்றல் மிக அவசியம்,” என்றார் அர்ச்சனா கல்பாத்தி.

குறிப்புச் சொற்கள்