இன்றைய தேதியில் பெரும்பாலான திரைப்படங்கள் சர்ச்சைகளை உருவாக்குவதற்காகவே தயாரிக்கப்படுவதாகச் சொல்கிறார் நடிகை சோனியா அகர்வால்.
அண்மைய பேட்டியில் பல ஆண்டுகளுக்கு முன்பு தாம் நாயகியாக நடித்த ‘7G ரெயின்போ காலனி’, ‘புதுப்பேட்டை’ படங்கள் குறித்து பல சுவாரசியத் தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
இயக்குநர் செல்வராகவனின் ‘காதல் கொண்டேன்’ படத்தில் சோனியா அகர்வால் அறிமுகமாகி, 22 ஆண்டுகள் ஆகிவிட்டன. இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும், சோனியா தனது மூன்று கொள்கைகளைப் பின்பற்றத் தவறுவதில்லை.
“எனக்கு மனநிறைவு தரும் படங்களில் மட்டுமே பணியாற்றுகிறேன். எனக்கான எல்லைகளை நானே தீர்மானிக்கிறேன். எந்தப் படமாக இருந்தாலும், நான் சிறு வேடத்தில் மட்டுமே நடித்திருந்தாலும் அதன் வெற்றிக்காக கடுமையாகப் பாடுபடுவேன்.
“ஆணாதிக்கம் நிறைந்த திரைத்துறையில், ரசிகர்களின் தொடர்ச்சியான அன்புதான் என்னை இந்த நிலைக்கு உயர்த்தியுள்ளது. தொடர்ந்து நல்ல கதைகள் அமைந்தது எனது பாக்கியம்.
“உண்மையைச் சொல்வதானால், என் திரை வாழ்க்கையின் முதல் நாளிலிருந்து ‘சாதாரண’ கதாபாத்திரத்தில் நடிக்க நான் ஒருபோதும் விரும்பியதில்லை. எப்போதும் வலுவான கதாநாயகியாக நடிப்பதே எனது விருப்பமாக இருந்தது.
“பெரிய கதாநாயகனுடன் நடித்தாலும், அந்த வெளிச்சத்தையும் மீறி திவ்யா, அனிதா அல்லது ஏஞ்சல் என யாராக இருந்தாலும், அத்தகைய பாத்திரங்களுக்கான தேடல் எப்போதும் எனக்குள் இருந்தது.
“வேறு விதமாகச் சொல்வதென்றால், ‘காதல் கொண்டேன்’ படத்தில் எனது நடிப்பு விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட அந்தத் தருணம் முதல் எனது தேடல் தொடங்கியது என்பேன்.
தொடர்புடைய செய்திகள்
“அர்த்தமுள்ள கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகையாக என்னை நிலைநிறுத்திக் கொண்டவுடன், ‘சாதாரண’ வேடங்களில் மீண்டும் நடிக்க முடியாது என்ற என் முடிவைத் தீவிரமாக கடைப்பிடிக்க வேண்டியிருந்தது,” என்கிறார் சோனியா அகர்வால்.
அடுத்து வெளியாகும் ‘வில்’ என்ற படத்தில் முதல் முறையாக நீதிபதி பாத்திரத்தில் நடித்துள்ளாராம். நீதிபதிக்கான ‘கோட்’ உடையை அணிந்தபோது பதற்றமாக உணர்ந்தாராம்.
நீதிபதிகள், வழக்கறிஞர்கள், மருத்துவர்கள் ஆகியோர் வலுவான ஆளுமைகள். எனவே அவர்களின் சீருடைகளை அணிந்திருக்கும்போது, அந்த பாத்திரங்களை நாம் மதிக்க வேண்டும் என்கிறார்.
தனது சகோதரரும் இசையமைப்பாளருமான சௌரப் அகர்வால் இந்தக் கருப்பொருள்களுக்கு ஏற்ற இசையை அளித்திருப்பதாக பாராட்டி உள்ளார்.
“புதுப்பேட்டை’ படத்தை உருவாக்கிய காலகட்டத்தில் இன்றுள்ள நவீன தொழில்நுட்பங்கள், மற்ற வசதிகள் இல்லை. அப்போதே அதுபோன்ற படைப்பை உருவாக்க முடிந்தது எனில் தமிழ்த் திரையுலகில் உள்ள ஆற்றல் குறித்து கற்பனை செய்து பாருங்கள். ‘புதுப்பேட்டை’யைப் போலவே , வலிமையான பெண் பாத்திரங்களை எப்போதும் தேடிக்கொண்டே இருப்பேன். ஓர் அப்பாவியாக இருக்கலாம். அதேசமயம், அவளுக்குள் அசைக்க முடியாத வலிமை இருக்க வேண்டும்.
“இதுபோன்ற படங்களை மீண்டும் உருவாக்கும் வாய்ப்புகள் அமைந்தால் எனது கதாபாத்திரங்களில் எந்தவிதமான மாற்றங்களையும் செய்ய மாட்டேன். அவ்வாறு செய்வதைப் பார்வையாளர்கள் மட்டுமல்ல, நானே ஏற்கமாட்டேன்.
“இன்று, பெரும்பாலான மக்கள் விளம்பரம் பெறுவதற்காக எந்த விவகாரம் என்றாலும் அதை வேண்டுமென்றே சர்ச்சைக்குரியதாக ஆக்குகிறார்கள். ரசிகர்கள் அதைத்தான் விரும்புவதாகக் கருதுகிறார்கள்,” என்று கூறியுள்ளார் சோனியா அகர்வால்.

