நல்ல கதாபாத்திரங்கள் அமைந்தால் தொடர்ந்து நடிக்கத் தயார் என்கிறார் நடிகை ஜெனிலியா.
அண்மையில் இவர் அமீர் கானுடன் இணைந்து நடித்த ‘சிதாரே ஜமீன் பர்’ என்ற இந்திப் படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இதையடுத்து, தெலுங்கு, கன்னடத்தில் உருவாகியுள்ள ‘ஜூனியர்’ படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இந்நிலையில், பெரிய கதாபாத்திரங்களிலும்கூட நடிக்கத் தயாராக இருப்பதாக கூறியுள்ளார் ஜெனிலியா.
“ஆனால், அந்தக் கதாபாத்திரம் படம் பார்ப்பவர்கள் மனத்தில் நிற்க வேண்டும். ரசிகர்களிடம் ஒருவிதத் தாக்கத்தை ஏற்படுத்தும் கதாபாத்திரம் என்று என்னால் அடையாளம் காண முடிந்தால் நிச்சயமாக நடிப்பேன்.
“எனவேதான், படம் முழுவதும் இடம்பெறும் கதாபாத்திரங்கள்தான் வேண்டும் என நான் இயக்குநரிடம் கேட்பதில்லை. சில நிமிடங்களே திரையில் தோன்றினாலும்கூட மக்கள் நம் நடிப்பை கவனித்துப் பாராட்டும்படி நடிக்க வேண்டும்,” எனக் கூறியுள்ளார் ஜெனிலியா.
இந்தி மட்டுமின்றி, எந்த மொழியில் நடிப்பதாக இருந்தாலும், இதுவே தமது ஒரே நிபந்தனை என்றும் சம்பளம் குறித்தெல்லாம் தாம் கவலைப்பட்டதே இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
‘பாய்ஸ்’ படம் மூலம் தமிழில் அறிமுகமான ஜெனிலியா, ‘சச்சின்’, ‘சந்தோஷ் சுப்பிரமணியம்’, ‘உத்தம புத்திரன்’, ‘வேலாயுதம்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
தெலுங்கிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ள இவர், 15 ஆண்டுகளுக்கு முன்பு இந்தி நடிகர் ரிதேஷ் தேஷ்முக்கைத் திருமணம் செய்துகொண்டு திரையுலகை விட்டு விலகினார்.
இப்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார்.

