தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தமிழில் வாய்ப்புகளை அள்ளும் பிறமொழி நடிகைகள்

2 mins read
93535c02-9777-4640-baac-f99013ae46dc
மமிதா பைஜூ, ருக்மணி வசந்த், பூஜா ஹெக்டே. - படங்கள்: இன்ஸ்டகிராம்

தமிழ்த் திரையுலகில் அண்டை மாநில நாயகிகளின் ஆதிக்கம் அண்மைக் காலமாக அதிகரித்து வருகிறது.

தமிழ் மொழியல்லாது பிற மொழி பேசும் நாயகிகள் தமிழில் கோலோச்சுவது ஒன்றும் புதிதல்ல. கலைக்கும் கலைஞர்களுக்கும் மொழி ஒரு தடையன்று எனக் கூறினாலும் தமிழ்ப் படங்களில் பெரும்பாலும் தமிழ் பேசும் நாயகிகள் பயன்படுத்தப்படவில்லை என்பது வருத்தத்திற்குரியது தான்.

அரிதாகவே, தமிழ்நாட்டில் பிறந்த நடிகைகள் நாயகிகளாக நீண்ட நாள்கள் தாக்குப்பிடித்தனர்.

கடந்த பத்தாண்டுகளைப் பொறுத்தவரை, சென்னையைப் பூர்வீகமாகக் கொண்ட சமந்தா, நீலகிரி மாவட்டம் கோத்தகிரியைச் சேர்ந்த சாய் பல்லவி ஆகிய இரு நடிகைகள் மட்டுமே உச்சத்திற்குச் சென்றுள்ளனர்.

திரிஷா நீண்ட காலமாகத் தமிழ்த் திரையுலகில் இருந்தாலும், பான் இந்திய நடிகையாக அவர் ரசிகர்களைப் பெரியளவில் ஈர்க்கவில்லை. ஆனால், சாய் பல்லவிக்கு அந்த அங்கீகாரம் கிடைத்திருக்கிறது.

மலையாளத்திலிருந்து தமிழுக்கு வந்தவர் நயன்தாரா. 20 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழில் நடித்துக்கொண்டிருக்கிறார். தற்போது அவருக்குப் பட வாய்ப்புகள் சற்று குறைவுதான்.

உச்ச நடிகர்களான ரஜினி, கமல், அஜித் ஆகியோர் நாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடிப்பதில்லை.

விஜய்யும் நடிப்பைவிட்டு விலகி அரசியலில் கால்பதித்துள்ளார்.

இதனால், மூத்த நடிகைகள் இளம் நாயகர்களுடன் ஜோடி சேரும் நிலை உருவாகியுள்ளது.

வேறு வழியின்றி இளம் நாயகிகளை அண்டை மாநிலங்களிலிருந்து அழைத்து வருகின்றனர். அவர்களைத் தயாரிப்பாளர்கள் தமிழுக்கு அறிமுகப்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில், தமிழ்த் திரையுலகில் தற்போது முன்னணியில் இருக்கும் பூஜா ஹெக்டே, ருக்மணி வசந்த், மமிதா பைஜூ ஆகியோர் பிறமொழியிலிருந்து தமிழுக்கு வந்தவர்கள்.

அவர்கள் அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்படுகின்றனர்.

காரணம், அவர்கள் நடித்த படங்களுக்குத் தமிழ் ரசிகர்கள் கொடுத்த ஆதரவுதான்.

மமிதா தமிழில் அறிமுகமான ‘டியூட்’ நல்ல வெற்றியைப் பெற்றுள்ளது. அடுத்ததாக, சூர்யாவின் கருப்பு, விஜய்யின் ஜனநாயகன், தனுஷ் - 54 ஆகிய படங்களில் அவர் நடிக்கிறார்.

‘டியூட்’ படத்தில் நடிக்க அவருக்கு ரூபாய் 15 கோடி சம்பளம் வழங்கியதாக இணையத்தில் தகவல்கள் பரவின.

அவை அனைத்தும் வதந்தியே எனத் தமது சமூக ஊடகப் பதிவின்மூலம் அவர் விளக்கம் அளித்திருந்தார்.

‘ஏஸ்’ படத்தின் மூலம் தமிழுக்கு வந்தவர் ருக்மணி வசந்த். மதராஸியில் சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்ந்து தமிழ் ரசிகர்களின் கவனம் பெற்றார் இவர்.

அண்மையில், இவர் நடிப்பில் வெளியான ‘காந்தாரா சாப்டர் 1’ பான் இந்தியா அளவில் மாபெரும் வெற்றி பெற்றது.

‘ரெட்ரோ’, ‘ஜனநாயகன்’, ‘கூலி’ என உச்ச நடிகர்களின் படங்களில் பூஜா ஹொக்டேவின் பெயரைப் பரிந்துரைக்கும் அளவிற்கு இவரும் தமிழில் முக்கியமான நடிகையாகவே மாறிவிட்டார்.

மேலும், ‘லோகா’ படத்தால் கல்யாணி பிரியதர்ஷனுக்கும் வாய்ப்புகள் குவிகின்றதாம்.

சாய் பல்லவியும் பான் இந்திய படங்களில் கவனம் செலுத்துவதால் அண்டை மாநில நடிகைகளே தமிழில் முன்னணி நடிகைகளுக்கான இடத்தைப் பிடித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்