காலஞ்சென்ற நடிகர் முரளியின் மூத்த மகன் அதர்வா நடித்திருக்கும் புதிய படம் ‘டிஎன்ஏ’.
எதிர்வரும் 20ஆம் தேதி வெளியாகும் இப்படத்தை நெல்சன் வெங்கடேசன் இயக்கி உள்ளார். இவர் ஏற்கெனவே, ‘ஒருநாள் கூத்து’, ‘மான்ஸ்டர்’, ‘ஃபர்ஹானா’ படங்களை இயக்கிய அனுபவம் உள்ளவர்.
நிமிஷா சஜயன் நாயகியாக நடித்திருக்கிறார். இது குடும்பத் கதையாக உருவாகியுள்ள படைப்பு.
சமூகத்தில் புறக்கணிக்கப்படும் இரண்டு பேர், ஒரு வாழ்க்கையை நம்பிக்கையுடன் தொடங்குகிறார்கள். அப்போது அவர்களுக்கு என்ன மாதிரியான பிரச்சினைகள் ஏற்படுகின்றன என்பதுதான் இப்படத்தின் கதையாம்.
அண்மைய பேட்டி ஒன்றில் இயக்குநர் நெல்சன் வெங்கடேசனை வெகுவாகப் பாராட்டி உள்ளார் அதர்வா.
“கதை சொல்வதிலும் அதைப் படமாக்குவதிலும் சில இயக்குநர்கள் மட்டும் தனித்துவமாகத் தெரிவார்கள். அதில் இயக்குநர் நெல்சன் வெங்கடேசனையும் சேர்த்துக்கொள்ளலாம்.
“படப்பிடிப்பின்போது அவர் என்ன திட்டமிட்டுள்ளார், என்ன செய்கிறார் என்பதைக் கணிக்க முடியவில்லை. ஆனால் முழுப் படத்தையும் பார்க்கும்போது ஒவ்வோர் காட்சியும் அருமையாக உள்ளது,” என்கிறார் அதர்வா.
முதன்முறையாக இப்படத்தில் ஒரு குழந்தைக்குத் தந்தையாக நடித்துள்ளாராம். மொத்த படக்குழுவும் இவரது நடிப்பைப் பாராட்டியுள்ளது.
“கதைக்குத் தேவையாக இருந்தது என்பதைக் கடந்து, எனக்கும் ஏதாவது வித்தியாசமாகச் செய்யலாமே எனத் தோன்றியது. இந்தப் படத்துக்காக நிறைய குழந்தைகளுடன் சேர்ந்து நடித்ததும்கூட எனக்குப் புதிய அனுபவம் என்பேன். வீட்டில் என் அக்காவின் குழந்தைகளுடன் பேசி, விளையாடி, கொஞ்சிய அனுபவத்தை வைத்து இயல்பாக நடிக்க முடிந்தது.
“படத்தின் நாயகி நிமிஷா விஜயனும் அருமையாக நடித்துள்ளார். சரியாகச் சொல்வதானால் அவர் ஏற்று நடித்த திவ்யா எனும் கதாபாத்திரமாகவே மாறிவிட்டார் எனலாம்,” என்று நாயகிக்கும் அதர்வாவின் பாராட்டுச் சான்றிதழ் கிடைக்கிறது.
‘டிஎன்ஏ’ படத்தில் மொத்தம் ஐந்து இசையமைப்பாளர்கள் பணியாற்றி உள்ளர். ஒவ்வொரு பாடலுக்கும் ஓர் இசையமைப்பாளர் என்று பிரித்துள்ளார் இசையமைப்பாளர்.
ஐந்து பேரும் வித்தியாசமான பாடல்களைத் தந்துள்ளனர். பாடல்களும் பின்னணி இசையும் சிறப்பாக இருக்கும்,” என்கிறார் அதர்வா.