தமிழ்த் திரையுலகில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி படத்தின் நாயகர்களாக மாறியவர்கள் பலருண்டு.
அந்த வகையில் நடிகர் சூரி, ரசிகர்களின் மனங்கவர்ந்து, தொடர்ந்து வெற்றிப் படங்களைக் கொடுத்துவருகிறார் என்றால் அது மிகையில்லை.
அண்மைக்காலமாக அவரது ஐந்து படங்களை ரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர்.
இயக்குநர் வெற்றிமாறனின் ‘விடுதலை’ படத்தில் காவல்துறையைச் சேர்ந்த குமரேசனாக நடித்திருந்த சூரியின் நடிப்பு பெருவரவேற்பைப் பெற்றது. அது அவரது வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது.
சூரிக்குள் இப்படியொரு நடிப்புத் திறமையா என்று பலரையும் வியக்க வைத்த படம் அது.
அடுத்ததாக, சசிகுமார் நடிப்பில் வெளியான ‘கருடன்’ படத்தில் சூரி முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இந்தப் படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
இதைத் தொடர்ந்து வெளியான படம் சூரியின் ‘கொட்டுக்காளி’. பி.எஸ். வினோத் ராஜ் இயக்கத்தில் உருவான இப்படம் அனைத்துலகத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.
பின்னர், ராம் இயக்கத்தில் ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தில் நடித்திருந்தார் சூரி. இதில் நிவின் பாலி கதாநாயகன் என்றாலும் சூரியும் நடிப்பில் முத்திரை பதித்திருந்தார்.
தொடர்புடைய செய்திகள்
இறுதியாக, ‘மாமன்’ படம். உணர்வுபூர்வமான உறவுப் பிணைப்பை வெளிப்படுத்திய படமாக அது அமைந்திருந்தது. நல்ல வசூலை அள்ளிய இந்தப் படம் ஜி5 ஓடிடி தளத்தில் வெளியாகவிருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.
அடுத்தடுத்த வெற்றிப் படங்கள் வாயிலாக, ஒருகாலத்தில் நகைச்சுவை நடிகராக இருந்து கதாநாயகனாக மாறிய நடிகர் சந்தானத்தை சூரி ஓரங்கட்டிவிட்டார் என்கிறது கோடம்பாக்க வட்டாரம்.
சூரியின் படம் என்றால் போட்ட பணம் திரும்பி வந்துவிடும் என்கிற நம்பிக்கை விநியோகிப்பாளர்களிடையே ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.