தொழிலதிபர் விஜய் மல்லையாவைப் பார்த்து தாம் மதுப்பழக்கத்தை விட்டொழித்ததாகக் கூறியுள்ளார் இயக்குநர் ராஜு முருகன்.
அறிமுக இயக்குநர் அரவிந்தன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘குட் டே’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு பேசிய ராஜு முருகன், அந்தப் படம் மதுப்பழக்கம் உள்ள ஒருவரின் வாழ்க்கையை திரையில் சரியாக எடுத்துக் காட்டுவதாகப் பாராட்டினார்.
மதுப்பழக்கத்துக்குப் பின்னால் உள்ள சமூகம், உளவியல், பொருளியல் வேர்கள் என்னென்ன என்று இந்தப் படம் கேள்வி எழுப்புகிறது. எனக்கும் இத்தகைய அனுபவம் இருந்ததால் இதன் அழுத்தம் புரிகிறது.
“தொழிலதிபர் விஜய் மல்லையாவுடன் தொடர்புடைய ஒரு காணொளியைப் பார்த்த பிறகே நான் மதுப்பழக்கத்தைக் கைவிட்டேன். இதுபோன்ற படங்கள்தான் நாம் மீண்டு வரக்கூடிய அனுபவங்களை நினைவூட்டுகின்றன.
“போதையிலிருந்து மீளக்கூடிய ஒரு மனிதனின் பயணம் தவிர்க்க முடியாத சமூக அழுத்தங்களால் உருவாகிறது. இந்தப் படம் இதுபோன்ற உண்மைகளை அழகாகச் சொல்கிறது. படம் பார்ப்பவர்களில் யாராவது ஒருவர் இதயத்தையாவது மாற்றக் கூடிய ஒரு படத்தைத்தான் பெரிய படம் என்பேன். ‘குட் டே’ படமும் அப்படிப்பட்ட ஒரு பெரிய படைப்புதான்,” என்றார் இயக்குநர் ராஜு முருகன்.