சின்னத்திரையில் தனி முத்திரை பதித்த ரியோ ராஜுக்கு இன்னும் பெரிய வெற்றி கிடைக்கவில்லை.
எனினும், காதலைப் பற்றிப் பேசிய அவரது ‘ஜோ’, ‘ஸ்வீட் ஹார்ட்’ ஆகிய படங்கள் வசூல் ரீதியில் சோடை போகவில்லை எனலாம்.
இந்நிலையில், ‘ஆண்பாவம் பொல்லாதது’ படத்தின் மூலம் வரும் தீபாவளிப் பண்டிகையின்போது ரசிகர்களைச் சந்திக்க உள்ளார் ரியோ.
தீபாவளி முடிந்து இரண்டு வாரங்களுக்குப் பிறகுதான் இந்தப் படம் வெளியாகிறது. எனினும், இப்போதே தீபாவளியை உற்சாகத்துடன் கொண்டாடத் தயாராகிவிட்டாராம். ரியோ நாயகனாக நடித்துள்ள ஐந்தாவது படம் இது.
“இந்த சினிமா பயணம் கடினமானதுதான். எனினும், நான் ஆசைப்பட்ட துறை என்பதால் முடிந்தவரை அனைத்தையும் ரசித்து செய்யப் பார்க்கிறேன்.
“என்னுடைய ஒவ்வொரு படமும் அறிமுக இயக்குநரின் படம்தான். என் ஒவ்வொரு முயற்சியையும் முதல் கனவு என்பதாகவே நினைக்கிறேன். எனவே, எனது பத்தாவது படம்கூட முதல் படமாகவே மனத்துக்குத் தோன்றும்.
“ஒரு வெற்றி நம்மை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச் செல்லும். ஆனால் அது எல்லாருக்கும் சாத்தியமாகாது என்பது பிறகுதான் தெரியவரும்.
“இப்படி இதுவரையான அனுபவங்கள் நிறைய கற்றுத் தந்துள்ளன. அடுத்தடுத்த முயற்சிகள் சரியாக அமைய வேண்டும். ஆனால், ஒவ்வொரு படத்தையும் முதல் படமாகவே நினைத்து உழைக்கிறேன்,” என்கிறார் ரியோ ராஜ்.
தொடர்புடைய செய்திகள்
‘ஆண்பாவம் பொல்லாதது’ எப்படி இருக்கும்?
“இயக்குநர் கலையரசன் தங்கவேல் இந்தக் கதையை என்னிடம் சொல்லும்போதே கவர்ந்துவிட்டது. நல்ல வாய்ப்பை தவறவிடக் கூடாது என நினைத்தேன்.
“காதல் அல்லது குடும்பத்தார் நிச்சயித்த திருமணம் என எதுவாக இருந்தாலும், திருமணமான புதிதில் தன்னிடம் உள்ள நல்ல பக்கத்தை மட்டுமே ஒருவருக்கொருவர் காட்டுவார்கள். அவர்களின் மற்றொரு பக்கத்தை மறைத்துவிடுகிறார்கள். ஆனால், உண்மை தெரியும் போதுதான் ஏமாற்றங்கள் பெரிதாக வந்து தாக்கும். பிரச்சினையை உடனே தீர்க்காவிட்டால் விவாகரத்தில் போய் நிற்கும்.
“இருதரப்பிலும் என்னென்ன தவறுகள் உள்ளன, ஆண்கள் எப்படியெல்லாம் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை உணர்த்தும் படம் இது. பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட ஒரு ஜோடியின் பிரச்சினைகள்தான் படத்தின் கதை.
“கதை, வசனத்தை சிவகுமார் முருகேசன் எழுதியுள்ளார். ஓர் ஆணாகப் பிறந்து இந்த உலகத்தில் யாரும் சிரமப்படக் கூடாது என்பதை கலகலப்பாக, ஜாலியாக, கேலியாகச் சொல்லும் வகையில் ஒவ்வொரு காட்சியும் சுவாரசியமாக இருக்கும்,” என்கிறார் இயக்குநர்.
இப்படத்தில் ரியோவுக்கு ஜோடியாக மாளவிகா மனோஜ் நடித்துள்ளார். மேலும், ‘மண்டேலா’ ஷீலா ராஜ்குமார், விக்னேஷ்காந்த், ஜென்சன் திவாகர், இயக்குநர் ஏ.வெங்கடேஷ் ஆகியோரின் கதாபாத்திரங்கள் முழுக் கதையையும் சுமந்து செல்லும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாம்.