கடந்த சில ஆண்டுகளாகவே நல்ல கதைகள், தரமான படைப்பு என்ற முடிவுடன் செயல்பட்டு வருகிறார் நடிகர் சித்தார்த்.
இளம் இசைக் கலைஞர்கள், இயக்குநர்களை உற்சாகப்படுத்துவதில் சித்தார்த்துக்கு மிகுந்த ஆர்வம் உண்டு.
இசை நிகழ்ச்சிகளில் சித்தார்த்தை சர்வசாதாரணமாகப் பார்க்க முடியும்.
இவரது நடிப்பில் அடுத்து வெளியாகும் படம் ‘3BHK’.
‘சித்தா’ படத்துக்குக் கிடைத்த அங்கீகாரமும் வரவேற்பும் தனக்கான பொறுப்பை அதிகரித்து, நம்பிக்கையூட்டி உள்ளதாகக் கூறுகிறார் சித்தார்த்.
“ரசிகர்கள் எனக்குக் கொடுத்திருக்கும் இடம் பெரியது. ஒவ்வொரு படத்தில் பணியாற்றும்போதும் நடிப்பில் அடுத்த கட்டத்துக்குப் போக வேண்டும் என நினைப்பேன். அதற்காக என்னை நானே தொடர்ந்து மெருகேற்றி வந்துள்ளேன். இதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை.
“ஒவ்வொரு படத்துக்காகவும் நான் அதிகமாகச் சிந்தித்து, தீவிரமாகச் செயல்படுவேன். என்னைப் பொறுத்தவரை, ஒரு படத்தின் கதை இந்த மண்ணில் நடக்கும் கதையாக இருக்க வேண்டும். அதன் அனுபவச் சாயலை அனைவரும் உணரும்படி இருக்க வேண்டும்,” என்று அண்மைய பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் சித்தார்த்.
‘3BHK’ படம் நடுத்தர வர்க்க மக்களின் கனவுகளை விவரிக்கும் கதைக்களத்துடன் உருவாகி உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
ஒரு வீட்டில் உள்ள உறுப்பினர்களை அறிமுகம் செய்வது போன்ற ‘டீசர்’ ஒன்றை இவர் பார்க்க நேர்ந்ததாம்.
“வீடு கட்டுவது என்பது எல்லாருக்கும் பெரும் கனவு. ஒரு குடும்பத்தில் உள்ள அனைவருக்குமே இந்த எதிர்பார்ப்பு இருக்கும். சொந்தமாக வீடு வேண்டும் என விரும்பாத தம்பதியர் இருக்க முடியாது. இந்தப் படத்தில் இத்தகைய அம்சங்கள் அழகாக திரையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
“8 தோட்டாக்கள்’ படத்தை இயக்கிய ஸ்ரீகணேஷ்தான் இப்படத்தின் இயக்குநர். ஸ்ரீகணேஷ் கதை சொல்லும் விதமும், நமது நிஜ வாழ்க்கையில் நடப்பதும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும்.
“இந்தப் படத்தில் அவர் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் நேர்மறையாகவும் தன்னம்பிக்கையாகவும்தான் பார்ப்பார். கதை சொல்லும் போதுகூட சிரித்துக்கொண்டே சொல்வார். எல்லா வார்த்தைகளையும் பேசி முடிக்கும்போதும் மீண்டும் சிரிப்பார். அவரால் மட்டுமே இப்படிச் சிரிக்க முடியும்.
“ஒரு நல்ல குடும்பத்தின் உறவுகளை, அதன் அழகை, அருமையாக திரையில் வெளிப்படுத்தியிருக்கிறார் என்பதற்காக அவரைப் பாராட்டத்தான் வேண்டும்.
“நன்றாக உழைப்பவர்களை, மக்களை நேசத்துடன் அணுகுபவர்களை, சாமி நம்மை எப்போதும் கைவிடாது என மாறாத நம்பிக்கை உடையவர்களை, யாரையும் குற்றம் குறை சொல்லாமல் தினமும் உறங்கும் மக்களை, காலையில் கண் விழிக்கும்போது யாருக்கும் கெடுதல் நினைக்காத தன் வேலையுண்டு, உழைப்புண்டு, தன் கனவுகள் உண்டு என இருக்கும் மக்களை ஒரு குடும்பத்தில் பிணைத்து, அருமையான கதையைப் படமாக்கியுள்ளார்.
“இயக்குநர் ஸ்ரீகணேஷ் ஒரு கதையை சாதாரணமாக இயக்காமல், தன் மனதுக்குள் இருந்து ஒவ்வொரு காட்சியாக நன்கு செதுக்கி இயக்குகிறார். கடைசியாக எந்த படத்தில் ஒரு முழுமையான குடும்பத்தைக் கண்டு ரசித்தீர்கள் என சிலர் என்னைக் கேட்டபோது, எந்தப் படமும் நினைவுக்கு வரவில்லை. இந்தப் படம் அந்தக் கேள்விக்கு நல்ல பதிலாக அமையும்,” என்று சித்தார்த் கூறியுள்ளார்.
சைத்ரா நாயகியாக நடிக்கும் இந்தப் படத்தில் சரத்குமார், தேவயானி, மீதா ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கர்நாடக இசைப் பாடகி பாம்பே ஜெயஸ்ரீயின் மகன் அம்ரித் இசையமைத்துள்ளார்.