தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அனுபவங்கள்தான் மனிதர்களைப் பக்குவப்படுத்தும்: பாயல்

3 mins read
afa94aed-7224-48c4-88ec-9638a978a57b
பாயல் ராதாகிருஷ்ணா. - படம்: ஊடகம்
multi-img1 of 2

‘குமார சம்பவம்’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகுக்கு கிடைத்த புது நாயகி பாயல் ராதாகிருஷ்ணா.

ஏற்கெனவே தெலுங்கில் சில படங்களில் நடித்து முடித்திருப்பவர், தமிழில் சாதிக்கும் ஆசையுடன் கோடம்பாக்கத்துக்கு வந்துள்ளார்.

பாயலுக்குச் சொந்த ஊர் மங்களூர். இவரது குடும்பத்துக்கும் சினிமாவுக்கும் ரொம்ப தூரமாம். ஆனாலும் அத்துறை மீதான ஆர்வத்தால் நடிக்கத் தொடங்கியதாக கூறுகிறார்.

நயன்தாராதான் தனது முன்மாதிரி என்கிறார் பாயல். திரிஷாவையும் மிகவும் பிடிக்கும் என்கிறார்.

“நயன்தாரா தன்னம்பிக்கை நிறைந்தவர். மிகச் சிறந்த நடிகையும்கூட. அதனால்தான் தனது திறமையால் திரையுலகில் வெற்றிநடை போட்டு வருகிறார். திரிஷாவும் அப்படிப்பட்ட நடிகைதான். இருவரையும் பார்த்து பலமுறை வியந்திருக்கிறேன்.

“நான் சிறிய நாயகன், நட்சத்திர நாயகன் என்றெல்லாம் பாகுபாடு பார்ப்பதில்லை. எல்லா கதாநாயகர்களுடனும் நடிக்கவே விரும்புகிறேன். என்னைப் பொறுத்தவரை எனக்கான கதாபாத்திரம் நன்றாக இருக்க வேண்டும், அவ்வளவுதான்.

“எனவே எல்லா மொழிகளிலும் நடிப்பதும் எல்லா கதாநாயகர்களுடனும் நடிப்பதுதான் எனது இலக்கு. அப்போதுதான் நிறைய அனுபவங்களைப் பெற முடியும். அனுபவங்கள்தான் மனிதர்களைப் பக்குவப்படுத்தும்,” என்று சொல்லும் பாயலுக்கு, செல்லப் பிராணிகள் என்றால் கொள்ளைப் பிரியமாம்.

இவரது குடும்பத்தார் மங்களூரில் உள்ள சொந்த எஸ்டேட்டில் பசு மாடுகளையும் நிறைய பறவைகளையும் வளர்க்கிறார்கள். படப்பிடிப்பு இல்லாத நாள்களில் பாயலை அங்குதான் பார்க்க முடியும்.

போதாத குறைக்கு, ஒரு சின்ன நாய்க்குட்டியும் இவர் வீட்டில் வளர்ந்து வருகிறது. அதனுடன் விளையாடி பொழுதைக் கழிப்பது இவருக்குப் பிடித்தமானது.

பாயலுக்கு ஒரு தம்பியும் இருக்கிறார்.

“நான் ‘குமார சம்பவம்’ படத்தில் நடித்தபோது தமிழில் எனக்குத் தெரிந்த ஒரேயொரு வார்த்தை ‘வணக்கம்’ என்பது மட்டும்தான். மொழி தெரிந்தால்தான் சிறப்பாக நடிக்க முடியும் என்று பலரும் அறிவுரை கூறிய போதுதான் அதன் முக்கியத்துவம் எனக்கும் புரிந்தது. அன்று முதல் யாரைப் பார்த்தாலும் தமிழில்தான் பேசுவேன். அப்படியே தமிழில் சரளமாகப் பேசக் கற்றுக்கொண்டேன்.

“கன்னடமும் ஆங்கிலமும் நன்றாகத் தெரியும் என்பதால் அதை வைத்துச் சமாளித்துவிடலாம் என்பதுதான் என் திட்டமாக இருந்தது. ஆனால், நிஜத்தில் அது அவ்வளவு எளிதல்ல என்பது பிறகு புரிந்தது.

“இப்போது அடுத்த படத்தில் நானே பின்னணிக் குரல் கொடுக்கும் அளவுக்கு தமிழில் தேறிவிட்டேன்,” என்று தலையைக் கோதியபடி சிரிக்கிறார் பாயல்.

இவரது தந்தை ராதாகிருஷ்ணன் கொங்கனி. அம்மா சேத்தனா துளு. மைசூரில் பட்டப்படிப்பை முடித்தவர், பிறகு நடனத்திலும் நன்கு தேர்ச்சி பெற்றார்.

“என் அம்மா சிறந்த நடனக் கலைஞர். மங்களூர், மாண்டியா, மைசூர் ஆகிய பகுதிகளில் நடனப்பள்ளி நடத்தி வருகிறார். அவர் நடனமாடுவதை நாள் முழுக்கப் பார்த்துக்கொண்டே இருக்கலாம். அவரைப் போன்று நானும் நடனக் கலைஞராக உருவாக வேண்டும் என்ற ஆசையில்தான் பரதம் கற்றேன். ஆனால், காலம் என்னைத் திரைப்பட நடிகையாகிவிட்டது.

“நடிப்பின் மீது ஏற்பட்ட ஆர்வத்தால் மும்பை சென்று அங்கு நடனப்பயிற்சி பெற்றேன். இடையிலேயே ‘மாடலிங்’ செய்வது, விளம்பரங்களில் நடிப்பது என நாள்கள் நகர்ந்தன.

“விளம்பரங்களில் நடிப்பதற்காக பலமுறை சென்னைக்குச் சென்றிருக்கிறேன். நடிகைகள் திரிஷா, ஊர்வசி ஆகியோருடன் விளம்பரங்களில் இணைந்து நடித்த அனுபவம் உண்டு. விளம்பரங்கள் மூலமாகத்தான் தெலுங்கில் உருவான இணையத் தொடர் ஒன்றில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது,” என்கிறார் பாயல்.

குறிப்புச் சொற்கள்