நகைக்கடை திறப்பு விழா ஒன்றில் பங்கேற்பதற்காக மதுரை வந்த நடிகை ஐஸ்வர்யா ராஜேசிடம் அரசியலில் ஈடுபட விருப்பம் உள்ளதா எனக் கேள்வி எழுப்பப்பட்டது.
“அதற்கு, விஜய்யே அழைத்தாலும் நான் அரசியலுக்கு வரமாட்டேன். மேலும், எனக்கு அதில் நாட்டம் கிடையாது. என்னுடைய முழு கவனமும் தற்போது திரைத்துறைமீது தான் உள்ளது,” என்றார் அவர்.
மதுரை குறித்து பேசும்போது, தமிழகத்திலேயே எனக்கு மிகவும் பிடித்த மாவட்டங்களில் ஒன்று மதுரை எனக் கூறிய அவர், க/பெ ரணசிங்கம், பண்ணையாரும் பத்மினியும் போன்ற படங்களின் படப்பிடிப்பின்போது அப்பகுதிக்கு அடிக்கடி வந்துள்ளதாகக் கூறினார்.
மேலும், “மீனாட்சியம்மன் எனக்குப் பிடித்த கடவுள். மதுரைக்கு எப்போது வந்தாலும் மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் செல்வேன். மதுரை உணவு மிகவும் பிடிக்கும்,” என்றார் ஐஸ்வர்யா.
திறப்பு விழா நிகழ்ச்சியில் ரசிகர் ஒருவர் அருகிலிருந்த பெண்ணைத் தள்ளிவிட்டு ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் தற்படம் எடுப்பதற்காக முண்டியடித்தார். அவருடைய செயலுக்குக் கண்டனம் தெரிவித்த ஐஸ்வர்யா, இதுபோன்ற செயலில் ஈடுபடக் கூடாது என அவரிடம் எடுத்துரைத்தார்.

