தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

என் மகன் சினிமாவில் சாதிப்பான்: விஜய் சேதுபதி

3 mins read
8389c300-86d1-4697-a3da-fea65093e978
நடிகர் விஜய் சேதுபதி. - படம்: ஊடகம்
multi-img1 of 2

தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி.

இவர், நாயகனாக நடிக்க வந்திருக்கும் தனது மகன் சூர்யா சேதுபதி திரைத்துறையில் நல்ல பெயர், புகழைச் சாதித்துக் காட்டுவார் என்ற நம்பிக்கை தனக்கிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே விஜய் சேதுபதியுடன் இணைந்து ‘சிந்துபாத்’ படத்தில் அறிமுகமான சூர்யா சேதுபதி, இப்போது ‘பீனிக்ஸ்’ படத்தில் நாயகனாகக் களமிறங்குகிறார்.

பிரபல சண்டைப் பயிற்சியாளரான அனல் அரசு இயக்கியுள்ள இப்படம் வரும் ஜூலை மாதம் 4ஆம் தேதி வெளிவர உள்ளது.

படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தச் சூழலில், படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியீட்டு விழாவில் விஜய் சேதுபதி பேசியபோது, “என் மகன் சூர்யாவைப் பொறுத்தவரை, முடிவுகளை அவனே எடுப்பதற்கு விட்டுவிடுவேன். அவனது விஷயங்களில் நான் அதிகம் தலையிடுவது கிடையாது.

“அதனால்தான் இந்தப் படத்தின் பூஜை, படப்பிடிப்புகளில்கூட நான் கலந்துகொள்ளவில்லை. என் மகனுக்கு இப்படியொரு அனுபவம் கிடைத்திருப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி.

“எனது முதல் படத்தில் எனக்கு ஏற்பட்ட அதே படபடப்பு, இப்போதும் தொடர்கிறது. சூர்யா சாதிப்பான் என்று நம்புகிறேன். அவனை ஆளாக்குவது இனி ரசிகர்கள் கையில்தான் உள்ளது,’’ என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “2019ல் எனக்கு அனல் அரசு இந்தக் கதையைச் சொன்னார். ஆனால், அப்போது அந்தக் கதையில் நடிக்க என்னால் முடியவில்லை.

“அதன்பின்னர், சூர்யா இந்தக் கதைக்கு பொருந்துவாரா என்று கேட்டார். எனக்கு ஒருபுறம் மகிழ்ச்சியாகவும் மற்றொருபுறம் பயமாகவும் இருந்தது. எனக்காகத் தயாரிக்கப்பட்ட கதையில்தான் இப்போது என் மகன் நடித்து வருகிறார்.

“நடிப்பதும் மறுப்பதும் உனது விருப்பம், நீயே முடிவுகளை எடு. நடிப்பதற்கு விருப்பம் இருந்தால் கதை கேள் என்று கூறிவிட்டேன். அதன்பிறகு அதைப்பற்றி நான் எதுவும் கண்டுகொள்ளவில்லை.

“எனது படம் சம்பந்தப்பட்ட அனுபவங்களை அவ்வப்போதும் என் குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்வேன்.

“சூர்யாவிடம் அவ்வப்போது மகிழ்ச்சியாக உள்ளாயா என்று கேட்பேன், அவரும் ஆமாம் என்பார். அவ்வளவுதான். இதற்கு மேல் ஒரு தந்தைக்கு வேறு என்ன வேண்டும்?

“அவருக்கு இப்படி ஒரு வாய்ப்பைத் தந்த அனைவருக்கும் நன்றி . அனல் அரசு மூலமாக அவர் சினிமாவில் அறிமுகமானதை ஒரு பாக்கியமாக நினைக்கிறேன். படம் நன்றாக வந்துள்ளது. இது என்னைவிடவும் என் மனைவிக்குத்தான் மிகப் பெரிய மகிழ்ச்சியான தருணம்,” என்றார்.

சூர்யா சேதுபதி பேசும்போது, ‘’பல பிரச்சினைகளைச் சந்தித்து, ஒவ்வொன்றையும் பாடமாக ஏற்றுக்கொண்டிருக்கிறேன். எனக்கு உறுதுணையாக இருந்த அத்தனை பேருக்கும் நன்றி.

“நிறைய தடுமாற்றங்களை எதிர்கொண்டாலும் யாரிடமும் சொன்னதில்லை. எல்லாவற்றையும் தாண்டி வந்திருக்கிறேன். ரசிகர்களின் கருத்துகளை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன்,’’ என்றார்.

இதனிடையே, இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் விஜய் சேதுபதியின் 52வது படத்திற்கு ‘தலைவன் தலைவி’ எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் நித்யா மேனன், யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

குடும்பக் கதையாக உருவாகியுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு அண்மையில்தான் நிறைவடைந்தது.

இந்தப் படத்தில் விஜய் சேதுபதி பரோட்டா போடுபவராக நடித்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.

‘தலைவன் தலைவி’படத்தின் ‘பொட்டல முட்டாயே’ பாடல் வெளியாகியுள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்து, சுப்லாஷினியுடன் இணைந்து இப்பாடலைப் பாடியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்