புது திரைப்படங்கள் வெளியாகும்போது அவற்றைக் கொலை செய்வது போன்று சமூக ஊடகங்களில் சிலர் விமர்சனம் செய்வதாக இயக்குநர் சுசீந்திரன் கூறியுள்ளார்.
லியோ ஜான் பால் இயக்கத்தில், விஜய் ஆண்டனி, பிரிகிடா, சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்த ‘மார்கன்’ படம் கடந்த 27ஆம் தேதி வெளியானது.
இப்படக்குழுவினர் பங்கேற்ற நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் ஜூலை 1ஆம் தேதி நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் சுசீந்திரன், யூடியூப் திரைப்பட விமர்சகர்களைக் கடுமையாக விமர்சித்தார்.
“எதைப் பார்க்க வேண்டும், வேண்டாம் என்பதை மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும். தயவுசெய்து ஒரு படத்தைக் கொலை செய்வதுபோன்ற விமர்சனம் செய்துவிடாதீர்கள்.
“அண்மையில் வெளியான ‘கண்ணப்பா’ திரைப்படத்தை யூடியூபர்கள் யாரும் விமர்சிக்கக்கூடாது என்று தடைகோரி அப்படக்குழுவினர் நீதிமன்றத்தை அணுகும் அளவிற்கு தற்போது நிலைமை இருக்கிறது.
“ஆனால் விமர்சனங்கள் இல்லையென்றாலும் சின்ன படங்கள் மக்கள் மத்தியில் சென்றடையாது. அதனால் தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படாத அளவிற்கு விமர்சனம் செய்யுங்கள்,” என்றார் சுசீந்திரன்.