இயக்குநர் எழிலின் 25வது படமாக உருவாகி உள்ளது ‘தேசிங்குராஜா 2’.
இப்படத்துக்காக அவருடன் மீண்டும் கூட்டணி அமைத்துள்ளார் நடிகர் விமல். வித்யாசாகர் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.
விமல், நடிகை பிந்து மாதவி நடிப்பில் 2013ஆம் ஆண்டு வெளியான படம் ‘தேசிங்கு ராஜா’. இது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
தற்போது, நடிகர் விமல், `விஜய் டிவி’ புகழ், ரவி மரியா, லொள்ளுசபா சுவாமிநாதன், சிங்கம் புலி உள்ளிட்ட நடிகர்கள் பட்டாளத்துடன் ‘தேசிங்கு ராஜா 2’ உருவாக்கியிருக்கிறார் எழில்.
இசை வெளியீட்டு விழாவில் நகைச்சுவையாகப் பேசிய விமல், இயக்குநர் எழில், வித்யாசாகர் ஆகிய இருவரையும் வெகுவாகப் புகழ்ந்தார்.
“வித்யாசாகர் இசையில் நான் இரண்டேகால் படங்களில் நடித்துள்ளேன். எப்படி என்கிறீர்களா? ‘கில்லி’ படத்தில் இடம்பெற்ற ‘கொக்கர கொக்கரக்கோ’ பாடலுக்கு நான் நடனமாடி இருக்கிறேன். அதற்கும் வித்யாசாகர்தான் இசை,” என்று நினைவூட்டிச் சிரித்தார் விமல்.
இவரும் எழிலும் ஏறக்குறைய 13 ஆண்டுகளுக்குப் பிறகு இணைகிறார்கள். இதற்கு முன்பு விமல் நடப்பில், ‘போகும் இடம் வெகு தூரம் இல்லை’ படமும், ‘விலங்கு’ இணையத் தொடரும் வெளிவந்தன. இரண்டிலும் சீரியஸ் ஆன கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.
“எழில் ‘தேசிங்கு ராஜா 2’ படத்துக்கு அழைத்ததும் உடனே ஒப்புக்கொண்டேன். அவருடைய படப்பிடிப்பு தளத்தில் நுழைந்த உடனேயே மனதுக்கு அவ்வளவு இதமாக, உற்சாகமாக இருக்கும்.
“இது இயக்குநருக்குத் திரையுலகில் வெள்ளி விழா ஆண்டு. அவர் மேலும் பல நகைச்சுவை நடிகர்களுக்கு வாய்ப்பு தர வேண்டும். நிறைய உயரங்களைத் தொட வேண்டும்.
“இந்தப் படத்தில் நகைச்சுவை நன்றாக வந்துள்ளது. அந்தக் காட்சிகளில் நடித்த அனைவரும் நன்றாகப் பங்களித்துள்ளனர்,” என்கிறார் விமல்.
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட திரைப்படத் தொழிலாளர் சம்மேளனத்தின் (ஃபெப்ஸி) தலைவரும் இயக்குநருமான ஆர்கே செல்வமணி, “நகைச்சுவைப் படம் எடுப்பது 10 மனைவியைச் சமாளிப்பது போன்று கடினமான பணி,” என்று பேசத் தொடங்கி கலகலப்பூட்டினார்.
“எல்லா நடிகர்களும் தங்களை நிரூபிக்க வேண்டும் என முயன்றுகொண்டே இருப்பார்கள். இதனால் ஒரு காட்சியைக்கூட எளிதில் படமாக்க முடியாது. இதுபோன்ற சங்கடங்களை எல்லாம் சிறப்பாகச் சமாளித்து தொடர்ந்து நகைச்சுவைப் படங்களை இயக்குகிறார் எழில்.
“வித்யாசாகர் இசையமைப்பாளர் மட்டுமல்ல, நல்ல இலக்கிய கவிஞரும் கூட. அவர் பாடலில் எந்த வேற்றுமொழி சொற்களும் இருக்கக்கூடாது என்பதில் கவனமாக இருப்பார்.
“இப்போதெல்லாம் சாதாரண வார்த்தைகளையே பாடலாக மாற்றி விடுகிறார்கள். இளையராஜாவுக்குப் பிறகு இசையை அதிகம் நேசிக்கக்கூடிய இசையமைப்பாளர் வித்யாசாகர்.
“திருவிளையாடல்’ படத்தில் தருமி நகைச்சுவையைப் போன்று, `வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்தில் ஆறு மணி நகைச்சுவை இருக்கும். என்னுடைய மன அழுத்தத்தைப் போக்கும் நகைச்சுவை அது,” என்றார் ஆர்.கே.செல்வமணி.
இயக்குநர் ஆர்பி உதயகுமார் பேசும்போது, “நான் இந்தப் படத்தில் நடித்திருக்கிறேன். அது ஒரு முக்கியமான கதாபாத்திரம். எனக்குக் கீழ்தான் எல்லோரும் இந்தப் படத்தில் இயங்குவார்கள்.
“நடிகர் விஜயகாந்துக்கு அடுத்து வெள்ளந்தியாகப் பேசக்கூடியவர் விமல்தான். நடிப்பதே தெரியாமல் யதார்த்தமாக நடிக்கக்கூடியவர்,” என்று பாராட்டி, படம் வெற்றிபெற வாழ்த்தினார்.