தமிழ் சினிமாவின் அடுத்த ‘சூப்பர் ஸ்டார்’ துருவ் விக்ரம் என்று சொல்கிறார் அனுபமா பரமேஸ்வரன்.
துருவ்வுடன் ‘பைசன்’ படத்தில் இணைந்து நடித்துள்ள இவர், அந்தப் படம் தொடர்பான அனுபவங்களை, தனது சமூகப் பதிவின் மூலம் பகிர்ந்துள்ளார்.
“இந்த ‘பைசன்’ வெறும் திரைப்படமல்ல. அது ஓர் உணர்வு; நமக்குள் ஏற்படும் மாற்றம்,” எனப் பாராட்டி உள்ளார். இந்தப் பதிவு இணைய வெளியில் பலரால் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.
“பைசன்’ படத்தில் 10 நாள்கள், படம் வெளியாகி 10 நாள்கள் என இரு விதமான உணர்வுகள் எனக்குள் சுழல்கின்றன. என் இதயம் இன்னும் எனக்குக் கிடைத்த அன்பை எப்படித் தக்கவைத்துக்கொள்வது என்பதைக் கற்றுக்கொண்டே இருக்கிறது.
“சில படங்கள் வெறும் ‘புராஜெக்ட்’களாக இருப்பதில்லை, அவை ஓர் உணர்வாக, ஒரு பருவமாக, நமக்குள்ளே ஒரு அமைதியான மாற்றமாக மாறிவிடுகின்றன. ‘பைசன்’ எனக்கு அப்படித்தான்,” என்று உணர்வுபூர்வமாகக் குறிப்பிட்டுள்ளார் அனுபமா.
தனது வாழ்நாள் முழுவதும், தான் போற்றும் வகையில் தன்னைப் பாதித்த ஒரு படம் என்றும் இந்த உலகத்தில் வாழ்வதற்கு தாம் ஆசீர்வதிக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் நெகிழ்ந்து போகிறார் அனுபமா.
தாம் மிகுந்த அதிர்ஷ்டசாலியாகவும் உணர்வதாகத் தெரிவித்துள்ள அவர், இந்தக் கதைக்கு தன்னைத் தேர்ந்தெடுத்ததற்காக இயக்குநர் மாரி செல்வராஜுக்கு நன்றிக்கடன் பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
படத்தின் நாயகன் துருவ் விக்ரம் பற்றி சொல்லாமல் இருப்பாரா என்ன?
தொடர்புடைய செய்திகள்
“நமது ‘சூப்பர் ஸ்டார்’ துருவ்வுக்கு வாழ்த்துகள். இந்த வெற்றிக்குக் காரணம் வெறும் அதிர்ஷ்டம் அல்ல. கடும் உழைப்பால் சம்பாதிக்கப்பட்டது. இந்த வெளிச்சத்தின் ஒவ்வொரு துளிக்கும் நீங்கள் தகுதியானவர் துருவ்,” என்று அனுபமா மனதாரப் பாராட்டியுள்ளார்.
மேலும், சக நடிகையான ரஜிஷா விஜயன், இசையமைப்பாளர் நிவாஸ் கே.பிரசன்னா ஆகியோரைப் பாராட்டவும் அவர் மறக்கவில்லை.
முக்கியமாக, ‘பைசன்’ தயாரிப்பாளர்களான அப்ளாஸ் சோஷியல், நீலம் ஸ்டுடியோஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களுக்கும் அனுபமா தெரிவித்த நன்றி இந்நேரம் அவர்களைச் சென்றடைந்திருக்கும். இறுதியாக ரசிகர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
“உண்மையுடன் உருவாக்கப்பட்ட ஒரு திரைப்படத்தை அரவணைத்து, அதை இவ்வளவு கொண்டாடி, திரையில் மட்டும் இல்லாமல் உங்கள் இதயங்களிலும் இடமளித்த ரசிகர்களுக்கு நன்றி. ‘பைசன்’ எப்போதும் ‘ஸ்பெஷல்’ படைப்பாக மனத்தில் நிலைத்திருக்கும்,” என்று இன்ஸ்டகிராமில் அனுபமா பதிவிட்டுள்ளார்.
நீண்ட நாள்களாக தமிழில் வெற்றிப் படத்தில் நடித்து ராசியான நடிகையாக வேண்டும் என நினைத்த அவருக்கு, தாம் நடித்த ‘டிராகன்’ பட வெற்றியைத் தொடர்ந்து ‘பைசன்’ படமும் வெற்றி பெற்றதால் உற்சாகத்தில் உள்ளார் அனுபமா.
‘டிராகன்’ வசூல் ரீதியில் சாதித்தது எனில், ‘பைசன்’ விமர்சன ரீதியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதையடுத்து, கூடுதல் கவனத்துடன் கதைகளைத் தேர்வு செய்கிறாராம் அனுபமா.
அண்மைக் காலமாக தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களில் மீண்டும் நல்ல வாய்ப்புகள் கிடைத்து வருவதாலும், அவற்றில் சில படங்கள் வசூலில் சாதித்திருப்பதும் அனுபமாவின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கி உள்ளது.
இந்நிலையில், நடிகர் துருவ் விக்ரமை இவர் காதலிப்பதாக வெளியான தகவல் சம்பந்தப்பட்ட இரு தரப்பினருக்கும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதனால் தன்னைச் சந்தித்துப் பேச வரும் செய்தியாளர்களிடம் தேவையற்ற கேள்விகளைக் கேட்கக்கூடாது என்று தொடக்கத்திலேயே நிபந்தனை விதித்துவிடுகிறார் அனுபமா.

