ஹைதராபாத்தில் ‘குபேரா’ படத்தின் முன்னோட்டக் காட்சி நிகழ்ச்சி ஜூன் 15ஆம் தேதி மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
அதில், படத்தில் நடித்த தனுஷ், நாகார்ஜூனா, ராஷ்மிகா மந்தனா, இயக்குநர் சேகர் கம்முலா ஆகியோருடன் இயக்குநர் எஸ் எஸ் ராஜமௌலி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சி தொடக்கத்தில் இயக்குநர் ராஜமௌலி தெலுங்கு முன்னோட்டக்காட்சியை வெளியிட்டார். அதனைத்தொடர்ந்து நீண்ட நேரத்திற்கு பிறகு இணையத்தில் அனைத்து மொழிகளிலும் முன்னோட்டக் காட்சிகள் வெளியாயின.
‘குபேரா’ படத்தின் முன்னோட்டக் காட்சியில் பணமும் பவரும்தான் வேலை செய்யும். நீதி, நியாயம் எடுபடாது. இதுதான் சரித்திரம் என்று நாகர்ஜூனா வசனம் பேசுவதும் தொடர்ந்து இந்த உலகம் அவர்களுடையது மட்டுமில்லை. என்னுடைய உலகமும் இதுதான். வாழ்வதற்குத்தான் உழைக்க வேண்டும் என்று தனுஷ் வசனம் பேசுவதும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.
அதுமட்டுமின்றி ஒரு பிச்சைக்காரனாக வரும் தனுஷால் அரசாங்கத்திற்கு ஏற்பட்ட சிக்கலை இந்தப் படம் பட்டியலிட்டு காட்டுகிறது. அதோடு பணமும் பவரும் இருந்தாலும்கூட ஒருவரால் எல்லாமே செய்துவிட முடியாது என்பதற்கு இந்தப் படம் ஒரு சிறந்த உதாரணமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிச்சைக்காரனாக இருக்கும் தேவாவை நாகார்ஜுனா கதாபாத்திரம் எப்படி குபேரனாக சீவி சிங்காரித்து உட்கார வைக்கிறது என்பதும் எதற்காக அவர் அப்படி செய்கிறார் என்பதும்தான் ‘குபேரா’ படத்தின் கதை.
இந்நிகழ்ச்சியில் தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா, மற்ற பிரபலங்கள் குறித்து பலரும் ஏகப்பட்ட விஷயங்களைப் பேசி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தினர்.
முன்னதாக ‘வாத்தி’ படத்தின் முன்னோட்டக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றபோது தனுஷ் அடுத்த முறை தெலுங்கில் பேசுவதாக அறிவித்திருந்தார். ஆனால், இறுதியாக மேடையேறிய நடிகர் தனுஷ், இந்த முறையும் ஆங்கிலம், தமிழ் கலந்தே பேசினார்.
முதலில் அப்பாவுக்கு தந்தையர் தினத்தை முன்னிட்டு நன்றி சொல்லிவிட்டு, அதன் பின்னர், சேகர் கம்முலாவின் உடல்நிலை குறித்தும் மேடையில் விசாரித்தார் தனுஷ்.
நிகழ்ச்சியில் பேசிய தனுஷ், “சேகர் கம்முலா உடல்நலம் இல்லாதபோதும் தனக்குத் தேவையான விஷயம் வரும் வரை பிடிவாதமாக இருந்து இந்தப் படத்தை முடித்தார். நல்ல விஷயத்துக்காக அந்தப் பிடிவாதம் இருக்க வேண்டும். அதை நான் பாராட்டுகிறேன்.
“ராஷ்மிகா மந்தனாவுக்கு அண்மைக்காலமாக ரூ.1,000 கோடி, ரூ.2,000 கோடி நாயகி என்ற பட்டம் கொடுக்கப்பட்டுள்ளது. அதையெல்லாம் மறந்துவிடுங்கள். ஒவ்வொரு படத்திலும் ‘குபேரா’ படத்தில் கடுமையாக உழைத்ததுபோல் மற்ற படங்களிலும் கடுமையாக உழைப்பைக் கொடுங்கள். வசூல் அதிர்ஷ்டம் எல்லாம் தானாகவே உங்களைத் தேடிவரும்.
“தோட்டா தரணி பெயர் சிறு வயதில் பத்திரிகைகளில் வரும்போதெல்லாம் அதைப் பார்த்துவிட்டு, ஏதோ அவர் தோட்டா செய்பவர் என்றும் துப்பாக்கி செய்பவர் என்றும் நினைத்துக் கொண்டிருந்தேன்.
“அப்படியொரு பெரிய மனிதருடன் பணியாற்றும் அனுபவம் கிடைத்ததை நினைத்து கர்வம் அடைகிறேன். இந்தப் படத்தில் இயக்குநர் சேகர் கம்முலா, தோட்டா தரணி ஸ்ரீதேவி பிரசாத், உதவி இயக்குநர்கள் பட்ட சிரமங்களை நினைத்தால், நாங்கள் சிரமப்பட்டோம் என்று சொல்வதற்கே கூச்சமாக இருக்கிறது.
“மூன்று ஆண்டுகள் உழைத்து, ரூ.120 கோடி செலவில் இப்படம் எடுக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில், படக்குழுவின் ஒட்டுமொத்த உழைப்பும் ஜூன் 20ஆம் தேதி திரையில் தெரியும்,” என்றார்.
நடிகை ராஷ்மிகா பேசியபோது, “விமான விபத்தைக் கேள்விப்பட்டதும் நான் நடுங்கிப் போனேன். எதுவும் உலகில் நிரந்தரம் இல்லை என்று புரிந்தது.
“நமக்கு இன்னும் எத்தனை நாள்கள் உள்ளன? எதுவரை வாழ்க்கை செல்லும் என்று தெரியவில்லை. எனவே கவனமாக இருங்கள். மகிழ்ச்சியாக இருங்கள். மற்றவரிடத்தில் கருணையோடு இருங்கள்,” என்றார்.