இது தமிழ்ச் சினிமா உலகில் மறு ஒளிபரப்புக்கான காலம். எங்கு திரும்பினாலும், ரசிகர்கள் மத்தியில் இந்தப் படங்கள் குறித்த பேச்சுதான்.
அண்மைய உதாரணங்களாக ‘3’, ‘புதுப்பேட்டை’, ‘கில்லி’ போன்ற படங்களின் மறுவெளியீட்டைக் குறிப்பிடலாம். இம்மூன்று படங்களும் மறுவெளியீட்டில் புதிய பாணியை உருவாக்கி இருப்பதாகக் கூறப்படுகிறது.
அப்படங்களுக்கு மக்கள் கொடுத்த ஏகோபித்த வரவேற்பைத் தொடர்ந்து, ரசிகர்கள் முன்பு கொண்டாடிய பல நல்ல படங்களையும் அடுத்தடுத்து மறுவெளியீடு செய்தனர்.
ஆனால், அதில் பல படங்கள் நினைத்ததுபோல சாதிக்கவில்லை. பழைய படத்தை மறுவெளியீடு செய்வதற்கு முன்பு அதை தற்போதைய தொழில்நுட்பத்திற்கு ஏற்ப மாற்ற (ரீ மாஸ்டரிங்) வேண்டும். அதற்கென குறிப்பிட்ட தொகை செலவாகும். ஆனால், இந்தத் தொகையைக்கூட வசூலில் எடுக்க முடியவில்லை என்கிற பேச்சும் இப்போது எழுந்திருக்கின்றது.
இந்த நவம்பர் மாதத்தில் மொத்தம் நான்கு படங்களை மறுவெளியீடு செய்யத் திட்டமிட்டிருந்தார்கள். அதில் ‘நாயகன்’, ‘ஆட்டோகிஃராப்’ படங்கள் கடந்த வாரங்களில் வெளியாகின.
அடுத்து, விஜய்யின் ‘ப்ரண்ட்ஸ்’ மறுவெளியீடு கண்டது. இம்மாத இறுதியில் சூர்யாவின் ‘அஞ்சான்’ திரைப்படமும் சிறு மாற்றங்களுடன் திரைக்கு வருகிறது. இதுமட்டுமல்ல, அஜித்தின் ‘அமர்க்களம்’, ‘அட்டகாசம்’ போன்ற படங்களையும் வெளியிடத் திட்டமிட்டு வருகிறார்களாம்.
இப்படியான சூழலில் தற்போதைய மறுவெளியீடு குறித்தும், முன்புபோல அவை எதிர்பார்த்த வரவேற்பைப் பெறாதது குறித்தும் தயாரிப்பாளர் தனஞ்செயன் விகடன் ஊடகத்திடம் கருத்து தெரிவித்துள்ளார்.
மறுவெளியீடு என்பது தங்க முட்டை போடும் வாத்து போன்றது, ஒரு முட்டையைத்தான் எடுக்க வேண்டும் என்கிறார் தனஞ்செயன்.
தொடர்புடைய செய்திகள்
“மொத்தமாக எடுக்க நினைத்தால் முழுமையாகவே அது போய்விடும். பழைய படத்தை எப்போதாவது மறுவெளியீடு செய்தால் மக்கள் கண்டிப்பாக அதை விரும்பிப் பார்ப்பார்கள்.
“ஆனால், ஒரே சமயத்தில் மொத்தமாகப் பல படங்கள் மறுவெளியீடு செய்யப்பட்டால் ரசிகர்கள் எப்படிப் பார்ப்பார்கள்? இப்போது புதுப் படங்களும் அடுத்தடுத்து வெளியாகின்றன. எனவே, புதுப் படங்கள் இல்லாத சமயங்களில்தான் மறுவெளியீடு காணும் படங்களை வெளியிட வேண்டும்,” என்கிறார் தனஞ்செயன்.
மறுவெளியீடு காணும் படங்களைத் தகுந்த இடைவெளிகளில் வெளியிட வேண்டும் என்பதும் கவனிக்கத்தக்கது. அப்போதுதான் மக்களிடம் எதிர்பார்க்கும் வரவேற்பும் நல்ல வசூலும் கிடைக்கும் என இத்துறையைச் சார்ந்த அனுபவசாலிகள் சொல்கிறார்கள். மறுவெளியீடு காணும் படங்களை மக்கள் கண்டுகொள்வதில்லை. அவற்றுக்கு மவுசு குறைந்துவிட்டது என்று கூறப்படுவதை தனஞ்செயன் ஏற்க மறுக்கிறார்.
மறுவெளியீடு காணும் படங்களை திரையிட முன்வரும் விநியோகஸ்தர்கள், அவற்றை சரியான நேரத்தில் வெளியிடத் திட்டமிட வேண்டும் என்று அறிவுறுத்துகிறார். ஒவ்வொரு வகையான படங்களுக்கும் ஒவ்வொரு வகையிலான ரசிகர்கள் இருப்பார்கள் என்றும் அதற்கு சரியான தேதியில் படம் திரைகாண்பது முக்கியம் என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
“ஒரே மாதத்தில் இத்தனைப் படங்கள் மறுவெளியீடு ஆனால், அவற்றின் மீதான ஆர்வமும் ஈர்ப்பும் போய்விடும். ‘இத்தனை புதுப் படங்கள் வந்திருக்கின்றன. அவற்றுள் நான் எதைப் பார்ப்பது’ என்று மக்களுக்கு ஒருவிதக் குழப்பம் ஏற்படக்கூடும்,” என்கிறார் தனஞ்செயன்.
மறுவெளியீடு காணும் படங்களை தொழில்நுட்ப ரீதியில் மாற்றுவதற்கு செலவிடப்படும் தொகையைக்கூட விநியோகிப்பாளர்களால் திரும்பப்பெற முடியவில்லை என்ற பேச்சுள்ளதே?
“அப்படிச் சொல்ல முடியாது. ‘ரீ மாஸ்டரிங்’ செய்வதற்கு செலவு செய்கிறார்கள் என்பது உண்மைதான். ஆனால், மக்கள் கூட்டம் அதிகமாக வேண்டும் என்றால் படத்தை வெளியிடுவதில் சரியான திட்டமிடல் இருக்க வேண்டும். அதனால் இப்போது மறுவெளியீடு காணும் படங்கள் மீதான ஆர்வம் அறவே குறைந்துவிட்டதாகக் கருத இயலாது. இந்தப் படங்களையும் பார்க்க நிச்சயம் திரையரங்குகளுக்கு வருவார்கள்.
“முதல் நாள், முதல் வெளியீட்டின்போது ரசிகர்கள் தவறாமல் திரையரங்கிற்கு வரக்கூடும். புதுப்படங்களுக்கு வெளியீட்டுத் தேதி எவ்வளவு முக்கியமோ, அதேபோன்று மறுவெளியீடு காணும் படங்களுக்கும் சில அம்சங்கள், விஷயங்கள், திட்டமிடுதல் அவசியமானவை. இதை மனத்திற் கொண்டு செயல்பட்டால் குழப்பங்களையும் புலம்பல்களையும் தவிர்க்கலாம்,” என்கிறார் தனஞ்செயன்.

