வித்தியாசமான படங்களில் நடிக்க ஆவலுடன் காத்துக்கிடக்கும் நடிகர்களில் விதார்த்துக்கு நிச்சயம் இடம் உண்டு.
விவசாயம் குறித்து அதிகம் பேசும் தமிழ் சினிமாவில் இதுவரை யாரும் வைக்காத ‘மருதம்’ என்ற தலைப்பில் திரைப்படம் ஒன்று உருவாகிறது. இதில் விதார்த் நாயகன். அறிமுக இயக்குநர் கஜேந்திரன் இயக்குகிறார்.
“ஐந்திணைகளில் வயலும் வயல் சார்ந்த பகுதிகளுமே மருதம் எனப்படும். ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடந்த விவசாயம் சார்ந்த ஓர் உண்மைச் சம்பவத்தை பின்னணியாகக் கொண்டு இந்தப் படம் உருவாகி உள்ளது.
“விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு வங்கி சார்ந்த பிரச்சினை ஏற்படுகிறது. அதிலிருந்து வெளிவர அவர் என்ன செய்தார், என்னென்ன முடிவுகளை எடுத்தார் என்பதுதான் படம்.
“கதையை எழுதும்போதே விதார்த்தின் பெயர்தான் மனத்தில் தோன்றியது. ஐந்து வயது குழந்தைக்கு விவசாயி அப்பாவாக நடிப்பதற்கேற்ற கதாபாத்திரத்துக்கு மிகப் பொருத்தமாக இருந்தார். அவருக்கு ஜோடியாக நடித்துள்ள ரக்ஷனா இதற்கு முன்பு, மனோஜ் பாரதிராஜா இயக்கத்தில் ‘மார்கழி திங்கள்’ படத்தில் நாயகியாக நடித்தவர்.
“மேலும், இயக்குநர் சரவண சுப்பையா, அருள்தாஸ், மாறன், மேத்யூ வர்கீஸ் ஆகியோரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்,” என்று சொல்லும் கஜேந்திரன், தனியார் திரைப்படக் கல்லூரியில் திரைப்படத் தொழில்நுட்பப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். ‘மருதம்’ படத்தை இயக்குவதற்காக மூன்று மாத காலம் விடுப்பு எடுத்தாராம்.
இப்படத்துக்கு ரகுநந்தன் இசையமைக்க, அருள் சோமசுந்தரம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
“இதுவரை ராணிப்பேட்டை மாவட்டத்தைக் கதைக்களமாக வைத்து, திரைப்படங்கள் வந்ததில்லை. நான் பார்த்து வளர்ந்த ஊர், அங்கே இருக்கும் சமூகப் பிரச்சினைகள் குறித்துப் பேசுகிற படம் இது. குடும்பத்துடன் சேர்ந்து பார்க்கலாம்,” என்கிறார் கஜேந்திரன்.

