பொதுமக்களுக்குக் காவல்துறையினரால் ஏற்படும் தொந்தரவுகளுக்கு முதல்வர் நேரடியாகத் தலையிட்டுத் தீர்வுகாண வேண்டும் என்று நடிகை குஷ்பு கூறியுள்ளார்.
சட்டம், ஒழுங்கு ஆகியவை முதல்வரின் பொறுப்பில் உள்ள துறைகள் என்பதை அவர் சுட்டினார்.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பு, தமிழ்நாட்டில் காவல் நிலைய மரணங்கள் அதிகரித்துக்கொண்டே போவதாகக் கூறினார்.
இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதால் முதல்வர் இதற்குப் பொறுப்பேற்று பதில் சொல்லவேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
மேலும், மாநிலத்தில் வரதட்சணைக் கொடுமையால் பெண்கள் பலர் உயிரை மாய்த்துக்கொள்ளும் சம்பவங்கள் வருத்தமளிப்பதாகவும் குஷ்பு குறிப்பிட்டார்.
வரதட்சணை வாங்குவது மட்டுமல்லாமல் கொடுப்பதும் தவறுதான் என்று சொன்ன அவர், மாப்பிள்ளை வீட்டார் வரதட்சணை கேட்டால் அந்த மணமகனுக்குப் பெண்ணைத் திருமணம் செய்துதர வேண்டாம் என்றும் கூறினார்.
காவல் நிலைய மரணங்கள், வரதட்சணைக் கொடுமை போன்றவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்று குஷ்பு கூறினார்.
போதைப் புழக்கம் குறித்தும் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
தொடர்புடைய செய்திகள்
சினிமாவில் நடிப்பதால் எல்லாரும் பெருமைக்குரியவர்கள் அல்லர் என்றும் அவர்களும் சராசரி மனிதர்களே என்பதால் போதைப்பொருள் புழக்கத்துக்கு அடிமையாகும் வாய்ப்பு இருக்கிறது என்றும் கூறிய குஷ்பு, போதைக்கு அடிமையானோரை மீட்கும் வழிகளை ஆராயவேண்டும் என்றார்.