முழுக்க முழுக்க வில்லன் கதாபாத்திரம்: ரஜினி

2 mins read
655183c0-a94b-49da-9011-e8e01708107f
நடிகர் ரஜினிகாந்த் - கோப்புப் படம்: ஊடகம்

’கூலி’ படத்தின் பாடல், முன்னோட்டக்காட்சி வெளியீட்டு விழாவில் ரஜினியின் பேச்சு சமூக ஊடகங்களில் தீயாகப் பரவி வருகிறது.

ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘கூலி’ படத்தின் இசை, முன்னோட்டக் காட்சி வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இதில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்றுப் பேசினார்.

“நான் முதன்முதலில் லோகேஷிடம் கதை சொல்லுங்கள் என்று சொன்னபோது நான் ஒரு கமல் ரசிகன் என்றார். யாருடைய ரசிகர் என்று நான் கேட்டேனா? இந்தப் படத்தில் ‘பஞ்ச்’ வசனம் எல்லாம் இல்லை என அவர் மறைமுகமாக என்னிடம் சொல்கிறார்.

“இது முழுக்க முழுக்க ஒரு வில்லன் கதாபாத்திரம் என்று என்னிடம் அவர் சொன்னார். எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் ஒரு மாதம் கழித்து மீண்டும் வந்து அந்த கதைக்கு நிறைய நடிகர்கள் தேவைப்படுகிறார்கள் என்றார்.

“என்னவோ இந்தக் கதையில் குறைவான நடிகர்கள் இருப்பதுபோல! முதலில் இந்தப் படத்துக்கு ‘தேவா’ என்று பெயர் வைத்தோம்.

“இந்தப் படத்தில் சத்யராஜ் நடிப்பதாக லோகேஷ் என்னிடம் கூறியபோது, முதலில் சத்யராஜ் நடிக்கிறாரா என்று கேளுங்கள் என்று சொன்னேன்.

“‘சிவாஜி’ படத்தில் நான் வாங்கிய சம்பளம் அளவுக்கு அவருக்கும் கொடுக்கிறோம் என்று சொன்னோம். ஆனால், அப்போதும் நடிக்க மாட்டேன் என்று மறுத்துவிட்டார். சத்யராஜுக்கும் எனக்கும் கருத்து ரீதியாக வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், அவர் மனத்தில் பட்டதைப் பேசக்கூடியவர். மனத்தில் பட்டதைப் பேசுபவர்களை நம்பிவிடலாம். ஆனால், உள்ளேயே வைத்திருப்பவர்களை நம்ப முடியாது.

“‘மங்காத்தா’ படத்தில் அஜித்துக்கு வெங்கட் பிரபு ஒரு வசனம் எழுதியிருப்பார். ‘நானும் எவ்ளோ நாள்தான் நல்லவனாவே நடிக்கிறது’ என அப்படி ஒரு கதாபாத்திரத்தில் நாகர்ஜுனா நடித்திருக்கிறார்,” என்று ரஜினி கூறினார்.

ரஜினியின் 171வது படமான ‘கூலி’யில் சத்யராஜ், நாகர்ஜுனா, ஸ்ருதி ஹாசன், உபேந்திரா, சவுபின் சாஹிர் என பலர் நடித்துள்ளனர். இந்தி நடிகர் அமீர் கான் கௌரவ வேடத்தில் நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் ஆகஸ்ட் 14 வெளியாகிறது.

இதே நிகழ்ச்சியில் பேசிய நாகார்ஜுனா, ஒரு கூலி 100 பாட்ஷாக்களுக்குச் சமம் என்றும் ரஜினிகாந்தை இந்தியத் திரைப்படத் துறையின் ஓஜி சூப்பர் ஸ்டார் என்றும் கூறினார்.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திரஜினிதிரைப்படம்