நடிகர் விஜய்யின் ‘ஜன நாயகன்’ திரைப்படமும் சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ திரைப்படமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ள நிலையில், இத்திரைப்படங்களுக்கு இடையேயான மோதல் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது.
2026ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு இன்னும் இரண்டு மாதங்கள் இருக்கும் நிலையில், இந்த இரு பெரிய படங்களின் மோதலுக்கான களம் தயாராகிவிட்டது.
பொங்கல் பந்தயத்தில் முதல் ஆளாகக் களத்தில் குதித்த திரைப்படம் விஜய்யின் ‘ஜன நாயகன்’தான். இப்படம் வருகிற ஜனவரி மாதம் 9ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.
அதேநாளில் மோதினால் திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என்பதால், சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் ‘பராசக்தி’ திரைப்படத்தை ஒரு வாரம் கழித்து ஜனவரி 14ஆம் தேதி வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.
‘ஜன நாயகன்’ திரைப்படம் விஜய்யின் கடைசிப் படமாக இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுவதால், படத்திற்குக் கடுமையான எதிர்பார்ப்பு உள்ளது. இப்படத்தை இயக்குநர் எச். வினோத் இயக்கியுள்ளார்.
கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில், விஜய்யுடன் மமிதா பைஜு, பூஜா ஹெக்டே, கெளதம் மேனன், பிரகாஷ் ராஜ், பிரியாமணி எனப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்திருக்கிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
அண்மையில் வெளியான ‘ஜன நாயகன்’ படத்தின் முதல் பாடலான ‘தளபதி கச்சேரி’ பாடல், ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்று, கோடிக்கணக்கான பார்வைகளைப் பெற்று சாதனை படைத்தது.
இந்நிலையில், சுதா கொங்கரா இயக்கி, சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் ‘பராசக்தி’ படத்திற்காகவும் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இது சிவகார்த்திகேயனின் 25வது படமாகும்.
தொடர்புடைய செய்திகள்
இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஸ்ரீலீலா நடித்துள்ளார். மேலும் அதர்வா முரளி, ரவி மோகன், பேசில் ஜோசப் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்துள்ளார்.
இப்படத்தின் முதல் பாடலான ‘அடி அலையே’ அண்மையில் வெளியானது.
‘அடி அலையே’ பாடல் வெளியாகி 5 நாள்கள் ஆன நிலையில், அது 15 மில்லியன் பார்வைகளை மட்டுமே பெற்றிருக்கிறது.
ஆனால், 3 நாட்களுக்கு முன் வெளியான விஜய்யின் ‘தளபதி கச்சேரி’ பாடல் 35 மில்லியன் பார்வைகளைப் பெற்று, வலைத்தளங்களில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
இந்த அதிகப்படியான பார்வைகளைக் கேள்விக்குள்ளாக்கும் விதமாக, ‘பராசக்தி’ படக்குழு ஒரு குறுஞ்செய்தியைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, ‘அடி அலையே’ பாடல் 15 மில்லியன் ஆர்கானிக் (Organic) பார்வைகள் பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
அதில் ‘ஆர்கானிக்’ என்ற வார்த்தை மிக முக்கியமாக, பெரிய அளவில் பதிவிடப்பட்டிருந்தது. (‘ஆர்கானிக் பார்வை’ என்பது உண்மையான, ஆர்வமுள்ள பார்வையாளர்களைக் குறிக்கும்).
இதனைக் கண்ட விஜய் ரசிகர்கள், “அப்படியென்றால் ‘தளபதி கச்சேரி’ பாடல் ‘ஆர்கானிக்’ பார்வை பெறவில்லை என்று குத்திக்காட்டுகிறீர்களா?” எனக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதனால் விஜய் - சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு இடையே எக்ஸ் தளத்தில் (முன்பு டுவிட்டர்) கடும் மோதல் வெடித்துள்ளது.

