இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் தென்னிந்தியாவின் பரபரப்பான, முன்னணி இயக்குநராக இருந்தவர் ஆர்.கே.செல்வமணி. நடிகை ரோஜாவைத் திருமணம் செய்த பின்னர், படங்கள் இயக்குவதைக் குறைத்துக் கொண்டு, திரைத்துறை சார்ந்த சில சங்கங்களில் முக்கியமான பொறுப்புகளை வகித்து வருகிறார்.
இந்நிலையில், சென்னையில் நடைபெற்ற ‘வள்ளுவன்’ பட விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட அவர், தமிழ்த் திரையுலகில் தற்போது தயாரிப்பாளர்களின் நிலை, பரிதாபத்துக்குரியதாக இருக்கிறது என்று கவலையை வெளிப்படுத்தினார்.
“கடந்த பத்து ஆண்டுகளில் தமிழ்த் திரையுலகிற்கு 2,500 தயாரிப்பாளர்கள் வந்திருக்கிறார்கள். இது நல்ல விஷயம். ஆனால், வந்தவர்களில் 2,100 பேர் ஒரு படத்தைத் தயாரித்த பின்னர் மாயமாகிவிட்டனர். எஞ்சியிருந்தவர்கள் மட்டுமே இரண்டாவது படம், அடுத்தடுத்த படைப்புகள் எனப் பயணத்தைத் தொடர்ந்தனர். காரணம், சினிமாவில் வெற்றி வாய்ப்பு குறைவு.
“நானும்கூட 1991 தொடங்கி பல ஆண்டுகள் தயாரிப்பாளராக இருந்தேன். எப்போதும் பரபரப்பாக இருப்பேன். தென்னிந்தியாவில் அதிக பொருட்செலவில் படமெடுத்தவர்களில் நானும் ஒருவன். ஒரு கட்டத்தில் என்னிடம் 16 புதுக் கார்கள் இருந்தன. ஆனால், சில ஆண்டுகளுக்குப் பிறகு என்னிடம் இருந்த கார்களுக்கு பெட்ரோல், டீசல் போடுவதற்குக்கூட பணமில்லை.
“சினிமா என்பது எப்போதும் மாறிக்கொண்டே இருக்கும். பணமில்லாத சமயங்களில் ஆட்டோவிலும் பேருந்திலும் பயணம் செய்யப் பழகிக்கொண்டேன்,” என்றார் செல்வமணி.
இவரது இயக்கத்தில், விஜயகாந்த் நடித்த ‘கேப்டன் பிரபாகரன்’ பெருவரவேற்பைப் பெற்றது. பல ஆண்டுகளுக்குப் பின்னர் அண்மையில் அந்தப் படத்தை மின்னிலக்கப் பதிப்பாக மறுவெளியீடு செய்தனர்.
விஜயகாந்த் ரசிகர்கள், தொண்டர்கள் திரையரங்குகளுக்குத் திரளாகச் சென்று படம் பார்த்ததால் மீண்டும் பல கோடி ரூபாய் வசூல் செய்து சாதித்துள்ளது ‘கேப்டன் பிரபாகரன்’.

