என் வாழ்க்கையை மாற்றிய கதாபாத்திரம்: லிஜோமோல்

2 mins read
4be78e3b-a10d-4012-9ea2-618c1d22d562
லிஜோமோல். - படம்: ஊடகம்

பல நடிகர்களின் சிறப்பான நடிப்பு தம்மைக் கவர்ந்திருந்தாலும் மணிகண்டன், மலையாள நடிகர் பேசில் ஜோசஃப் ஆகிய இருவரது நடிப்பையும் தாம் கூடுதலாக ரசித்ததாகச் சொல்கிறார் நடிகை லிஜோமோல்.

“இதற்கு முன்பு ‘ஜெய் பீம்’ படத்தில் மணிகண்டன் அண்ணனின் நடிப்பைப் பார்த்து பிரமித்திருக்கிறேன். தற்போது வெளியான ‘பொன்மேன்’ படத்தில் நடிகர் பேசில் ஜோசஃப் அருமையாக நடித்திருந்தார். அவரது கதாபாத்திரமும் நடிப்பும் சிறப்பாக இருந்தன. நான் எதிர்பார்த்ததைவிட அவர் அருமையாக நடித்திருந்தார் என்பதுதான் உண்மை,” என்று விகடன் ஊடகப் பேட்டியில் லிஜோமோல் குறிப்பிட்டுள்ளார்.

மலையாளத் திரையுலகத்தில் இருந்து தமிழுக்கு இறக்குமதியான திறமையான நடிகைகளில் இவரும் ஒருவர்.

‘ஜெய் பீம்’ படத்தில் இவர் ஏற்று நடித்த ‘செங்கேணி’ கதாபாத்திரம் அப்படத்தைப் பார்த்தவர்களின் மனதை உலுக்கி எடுத்துவிட்டது. தற்போது சசிக்குமாரின் ‘ஃப்ரீடம்’ படத்தில் நடித்துள்ளார் லிஜோமோல். வழக்கம்போல் இதிலும் மிக எதார்த்தமான நடிப்பால் அசத்தி இருப்பதாகத் தகவல்.

“நான் ஏற்று நடித்த ‘செங்கேணி’ கதாபாத்திரம்தான் என் திரை வாழ்வையே மாற்றியதாக நினைக்கிறேன். காரணம், அது அவ்வளவு கனமான கதாபாத்திரம்.

“இப்போது நடித்துள்ள ‘ஃப்ரீடம்’ படம் உண்மைக் கதை என்று சொன்ன பிறகு ஆர்வம் அதிகரித்தது.

“ஒரு திரைப்படக் கதை நமக்குத் தெரிந்திருந்தாலும், அதில் இடம்பெற்றுள்ள உணர்ச்சிமிகுந்த திரைக் காட்சிகளில் நடிக்கும்போது நம் மனத்தில் இருந்து உணர்வுகள் தானாகவே வெளிப்படும். ஒவ்வொரு காட்சியில் நடிக்கும்போதும் என் மனம் அப்படித்தான் இருந்தது.

“ஒவ்வொரு கதாபாத்திரம் குறித்து ஆராய்ச்சிகள் பல செய்து நடிக்கத் தயாரானாலும், அந்தந்தத் தருணத்தில் உணர்வு எப்படி வெளிப்படுகிறதோ, அதுதான் இறுதியான நடிப்பு என உறுதியாகச் சொல்ல முடியும்,” என்கிறார் லிஜோமோல்.

எவ்வளவு பெரிய இயக்குநராக இருந்தாலும், கதை கேட்காமல் எந்தப் படத்திலும் நடிக்க மாட்டாராம்.

“கண்ணை மூடிக்கொண்டு கதையைக்கூட கேட்காமல் நடிப்பீர்களா என்று ஒருமுறை என்னிடம் கேட்டனர். அதற்கு வாய்ப்பே இல்லை. நிச்சயம் கதை கேட்டுத்தான் முடிவு செய்வேன்,” என்று திட்டவட்டமாகச் சொல்கிறார் லிஜோமோல்.

நடிகைகள் தயாரிப்பாளர்களுக்கு வீண் செலவுகளை ஏற்படுத்தக் கூடாது என்று சொல்பவர், இதைத் தமது கொள்கையாகக் கடைப்பிடித்து வருவதாகக் கூறுகிறார்.

“நான் ஒரு இணையத் தொடரில் நடித்திருந்தேன். அதில் நான் அணிந்த உடை மிகவும் பிடித்திருந்தது. அந்த உடையை மட்டுமே நான் கேட்டு எடுத்துச் சென்றிருக்கிறேன். இதுவரை உரியவர்களிடம் கேட்[Ϟ]காமல் படப்பிடிப்பில் இருந்து எதையும் எடுத்துச் சென்றதில்லை.

“அது ஒரு சுடிதார். அது எனக்குப் பிடித்துப் போனதற்கு ஒரு காரணமும் இருக்கிறது. அந்த இணையத் தொடரில் நடிக்கும்போது பெரும்பாலான நாள்கள் அந்தச் சுடிதாரைத்தான் அணிந்திருந்தேன். அதன் நினைவாக அதைக் கேட்டு வாங்கிச் சென்றேன்,” என்று பேட்டியில் கூறியுள்ளார் லிஜோமோல்.

குறிப்புச் சொற்கள்