சென்ற வாரம் மக்கள் திலகம் எம் ஜி ஆர், எப்படி 1947ஆம் ஆண்டு வெளிவந்த ஜூப்பிட்டர் பிக்சர்ஸ் திரைப்படமான ராஜகுமாரி மூலம் தமிழ்த் திரையுலகில் தனக்கென ஒரு தனியிடம் பிடித்தார் என்று பார்த்தோம். ராஜகுமாரி படத்துக்கு முன் எம் ஜி ஆர், 14 படங்களில் நடித்திருந்தாலும் முன்னணிக் கதாநாயகனாக அவரை அடையாளப்படுத்தியது ராஜகுமாரி படம்தான்.
அது அவரது திரையுலக வாழ்க்கைக்கு வழி வகுத்தாலும் அந்தப் படத் தயாரிப்பின்போது அவர் எத்துணை பெரிய சவாலைச் சந்தித்தார் என்பது அவருக்கு மட்டுமே தெரியும்.
அந்தப் படத்தைத் தயாரித்த ஜூப்பிடர் நிறுவனத்தார் படம் கிட்டத்தட்ட 5,000 அடி நீளம் தயாரிப்பான நிலையில் அதைத் திரையிட்டுப் பார்த்தனர். அவர்கள் மனதுக்கு சிறிதும் திருப்தி ஏற்படவில்லை. குழம்பிய நிலையில், அன்றைய காலத்தில் பிரபலமாக வாள்வீச்சுப் படங்களில் வலம் வந்த பி யு சின்னப்பாவைக் கதாநாயகனாகவும் அவருக்கு ஜோடியாக டி ஆர் ராஜகுமாரியைப் போட்டு படத்தை மீண்டும் ஆரம்பத்திலிருந்து எடுக்க எண்ணினர். அதை படத்தின் இயக்குநர் ஏ எஸ் ஏ சாமியிடமும் தெரிவித்து ஆலோசனை கேட்டனர்.
ஆனால், அவரோ இந்த யோசனைக்கு இசையவில்லை. படம் நன்றாகவே வரும், எம் ஜி ஆரே கதாநாயகனாக இருப்பார் என்று பிடிவாதமாகக் கூறிவிட்டார். இதன் பின்னணியில் ஒரு காரணமும் இருக்கிறது. எம் ஜி ஆரை திரையுலகில் பிரகாசிக்க வைக்க எம் ஜி ஆரின் அண்ணன் எம் ஜி சக்கரபாணிக்கு ஏ எஸ் ஏ சாமி வாக்குறுதி அளித்திருந்தார். அதற்கேற்ப அந்தப் படத்தை வைத்து எம் ஜி ஆரை முன்னிலைப்படுத்த அவர் முடிவு செய்திருந்தார். இத்தனைக்கும் இயக்குநராக ஏ எஸ் ஏ சாமிக்கும் அதுவே முதல் படம். தனது முதல் படம் எம் ஜி ஆரையும் உயர்த்தி தனக்கும் திரையுலகில் ஒரு நிரந்தர இடம் பிடிக்க ஏ எஸ் ஏ சாமி தீவிரமாகச் செயல்பட்டார்.
இப்படி முதல் சவாலைச் சமாளிக்க இயக்குநர் ஏ எஸ் ஏ சாமி உதவி புரிந்த நிலையில், படப்பிடிப்பிலும் எம் ஜி ஆரின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலையில் அடுத்த சவால் அவருக்குக் காத்திருந்தது. ஒரு காட்சியில் எம் ஜி ஆர் தூக்கில் தொங்கவிடப்படுவது போலவும் பின்னர் உத்தரத்தில் இருந்து எம் ஜி ஆர் தொங்கும்போது உத்தரம் சரிந்து விழுந்து அவர் உயிர் பிழைப்பதாகக் காட்சியமைப்பு. ஆனால், தூக்குக் கயிறு கழுத்தை இறுகத் தொடங்கி எம் ஜி ஆரின் உயிருக்கு ஆபத்து நேரும் சூழல் ஏற்பட்டது. அனைவரும் பதறிப்போக நல்லவேளையாக உத்தரம் சரியான நேரத்தில் சரிந்து விழ எம் ஜி ஆர் உயிர் பிழைத்தார்.
பின்னர் படமும் நல்ல விதமாக முடிந்தது. அது மட்டுமல்ல எம் ஜி ஆரின் வாள்வீச்சு படத்தில் அற்புதமாக அமைந்தது. அதுவே அவரைத் தேடி ராஜா-ராணிக் கதைகள் கொண்ட பட வாய்ப்புகள் காரணமாகவும் அமைந்தன. அந்நாட்களில் வாள்வீச்சு படங்களில் பி யு சின்னப்பா, ரஞ்சன் போன்ற நடிகர்கள் பெயர் போட்டு பிரபலமாக இருந்து வந்துள்ளனர். இப்படிப்பட்ட சவாலான காலகட்டத்தில்தான் எம் ஜி ஆர் தன்னை முன்னணி வாள்வீச்சு நடிகராக ராஜகுமாரி படத்தின் வழி நிலைநிறுத்திக் கொண்டார்.
படமும் ஏ எஸ் ஏ சாமியின் தன்னம்பிக்கைக்கு ஈடுகொடுக்கும் வகையில் மிகச் சிறப்பாக அமைந்தது. ராஜகுமாரி படம் அந்த ஆண்டு திரையிடப்பட்ட தமிழ்ப் படங்களில் பெரும் வெற்றி பெற்றதுடன் பண வசூலை அள்ளிக் கொட்டி முதலிடம் பிடித்தது. எம் ஜி ஆரை பட நாயகனாகவும் படத்தின் இயக்குநர் ஏ எஸ் ஏ சாமியை முதல் நிலை இயக்குநராகவும் உயர்த்திப் பெருமைப்படுத்திய படம் ராஜகுமாரி என்றால் அது மிகையாகாது.