கதாநாயகர்களுக்கு முழுச் சம்பளம் தர இயலாது: புலம்பும் தயாரிப்பாளர்கள்

2 mins read
0821c945-bb9d-4c8d-81ac-7c93955db548
தமிழில் ஒரு படத்தின் மொத்தத் தயாரிப்புச் செலவில் பெரும்பகுதி கதாநாயகனின் சம்பளத்துக்கே போய்விடுகிறது எனத் தயாரிப்பாளர்கள் புலம்புகின்றனர். - கோப்புப்படம்: ஊடகம்

தமிழ்த் திரையுலக நாயகர்கள் தங்களுடைய சம்பளத்தைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் வலுவாக எழுந்துள்ளது.

தமிழில் ஒரு படத்தின் மொத்தத் தயாரிப்புச் செலவில் பெரும்பகுதி கதாநாயகனின் சம்பளத்துக்கே போய்விடுகிறது என்றும் இதனால் பிற செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டியுள்ளது என்றும் தயாரிப்பாளர் தரப்பு புலம்புகிறது.

இதன் காரணமாக, படத்தின் தரத்தில் சமரசம் செய்ய வேண்டியிருப்பதாக இயக்குநர்கள் ஆதங்கப்படுகிறார்கள்.

ரஜினி, விஜய், அஜித் போன்ற நடிகர்கள் குறைந்தபட்சம் ஒரு படத்துக்கு ரூ.150 முதல் ரூ.200 கோடி சம்பளம் பெறுவதாகக் கூறப்படுகிறது. முன்னணி நடிகர்களின் படம் நன்றாக இருக்கும் பட்சத்தில், படத்தின் வியாபார மதிப்பும் கூடுகிறது என்பதால் சில தயாரிப்பாளர்கள் சம்பளம் குறித்தெல்லாம் கவலைப்படுவதில்லை.

சில ஆண்டுகளாக தொழில்நுட்பக் கலைஞர்களும் தங்களது ஊதியத்தை உயர்த்திவிட்டனர்.

படத்தின் தொழில்நுட்ப அம்சங்களுக்கு கூடுதல் தொகையை ஒதுக்கினால் படத்தின் தரம் மேம்படும். வியாபாரமும் சிறப்பாக இருக்கும்.

இதை கருத்தில் கொண்டு கதாநாயகர்கள் தங்கள் சம்பளத்தைக் குறைக்க முன்வர வேண்டும் என்பதே பெரும்பாலான இயக்குநர்கள், தயாரிப்பாளர்களின் கருத்தாக உள்ளது. இந்தப் பிரச்சினைக்கு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கமே ஒரு தீர்வை முன்வைத்துள்ளது.

சென்னையில் அண்மையில் நடந்த இச்சங்கத்தின் பொதுக் குழுக்கூட்டத்தில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், நடிகர்களின் சம்பளம் தொடர்பான தீர்மானமும் ஒன்று.

நடிகர்கள் ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா, சிம்பு, விஷால், தனுஷ், விக்ரம், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள், தங்கள் முழுச் சம்பளத்திற்குப் பதிலாக படம் வியாபாரமாகும் தொகையில் பங்கு பெற்று நடிக்க வேண்டும் என்று அத்தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டது.

அதாவது, ஒரு நடிகர் நூறு கோடி ரூபாய் சம்பளம் பெற்றால், முதல் கட்டமாக ரூ.60 கோடி முன்பணம் பெறுவார். படம் வியாபாரமான பிறகு லாபம் கிடைக்கும் பட்சத்தில், குறிப்பிட்ட விழுக்காடு பங்கையும் பெறுவார்.

அது மீதமுள்ள சம்பளத் தொகைக்கு ஈடாகவோ அல்லது அதிகமாகவோகூட இருக்கக்கூடும்.

இதை சம்பந்தப்பட்ட நடிகர்கள் ஏற்பார்களா, தமிழ்த் திரையுலகில் புதிய மாற்றம் ஏற்படுமா என்பதற்கு காலம்தான் பதில் சொல்லும்.

குறிப்புச் சொற்கள்