தென்னிந்திய திரைக் கலைஞர்கள் பாலிவுட்டில் சாதிக்க வேண்டும் என விரும்புவதும் அங்கு வாய்ப்புகளைப் பெறுவதும்தான் வழக்கம்.
ஆனால், ஒன்றிரண்டு இந்திப் படங்களில் நடித்துள்ள இளம் நாயகி சினேகா பால், இந்த விஷயத்தில் தலைகீழாக உள்ளார்.
எப்படியாவது, தமிழ்த் திரையுலகில் அறிமுகமாக வேண்டும், கோடம்பாக்கத்தில் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்பதுதான் இவரது ஆசை.
சினேகா பால் கோல்கத்தாவில் பிறந்தாலும், திரையுலகில் கொண்ட ஆர்வம் காரணமாக, மும்பையில் குடியேறிவிட்டார். அங்கு கிடைத்த நாடக வாய்ப்புகளில் நடித்தபடி, ‘மாடலிங்’கும் செய்து வந்துள்ளார்.
சமூக ஊடகங்களில் தீவிரமாக இயங்கி வந்தவருக்குப் பலனாக, ‘சார்ம்சுக்’ இணையத் தொடரில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்தத் தொடர் மூலம் பிரபலமான நிலையில், டிஸ்னி ஹாட்ஸ்டார் தயாரித்த ‘தி சிட்டி அண்ட் எ கேர்ள் ஷோ’ நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்ததாம்.
அதன் பிறகு, ‘ஃபூல் கே பத்லே ஃபத்தர்’ படத்தில் நடித்த பிறகு இளையர்களின் கனவுக்கன்னி ஆகிவிட்டார்.
இந்தி உள்ளிட்ட வடமாநில மொழிகளில் பல வாய்ப்புகள் தேடி வந்தாலும், சினேகாவின் கவனம் என்னவோ, தமிழ்த் திரையுலகத்தின் மீதுதான் பதிந்துள்ளது.
“சிறு வயதில் இருந்தே ‘மாடலிங்’ துறையில் எனக்கு ஆர்வம் அதிகம். அதனால்தான் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன், என் படிப்பை முடித்த கையோடு, குடும்பத்துடன் மும்பைக்கு குடிபெயர்ந்தோம்.
தொடர்புடைய செய்திகள்
“அங்கு ஓர் உடற்பயிற்சிக் கூடத்தின் விளம்பரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் நல்ல பெயர் கிடைத்ததால் மேலும் பல விளம்பரப் படங்களில் நடித்தேன். பின்னர் வங்க மொழியில் உருவான படத்தில் நாயகியாக நடிக்கும் வாய்ப்பு அமைந்தது.
“என் மனத்திலும் சாதிக்க முடியும் என்ற எண்ணம் அதிகமானது. ‘சார்ம்சுக்’, ‘லால் லிஹாஃப்’, ‘சால் ஹவுஸ்-3’ உள்ளிட்ட பல இணையத் தொடர்களில் அடுத்தடுத்து நடித்தேன்,” என்று சொல்லும் சினேகா பாலுக்கு, பள்ளியில் படிக்கும்போதே தமிழ் சினிமா மீதான ஈர்ப்பு ஏற்பட்டுவிட்டதாம்.
தமிழில் வெற்றி பெற்ற பல படங்களை பலமுறை பார்த்து ரசிப்பதுதான் அப்போது அவரது பொழுதுபோக்காக இருந்துள்ளது.
“ஆங்கில மொழிபெயர்ப்புடன் வசனங்கள் திரையில் தோன்றுவதால் சிரமம் ஏற்பட்டதில்லை. தமிழ்ப் படங்கள் உண்மைச் சம்பவங்கள் போல் மிக அழகான கதைகளைக் கொண்டவையாக இருக்கும். அதனால் படம் முடியும் வரை சுவாரசியம் குறையாது.
“எனக்கு எப்போதுமே பிடித்தமான நடிகர் என்றால் அது ரஜினிகாந்த்தான். தெலுங்கில் அல்லு அர்ஜுன், மகேஷ் பாபு ஆகிய இருவரையும் மிகவும் பிடிக்கும்.
“தமிழ்ப் பட வாய்ப்புக்காக காத்திருக்கிறேன். நல்ல கதையம்சம் உள்ள படங்கள் அமைந்தால் எது குறித்தும் யோசிக்காமல் நடிக்க சம்மதிப்பேன்,” என்று கண்களில் எதிர்பார்ப்புகள் மின்னப் பேசும் சினேகா பால், நாள்தோறும் தவறாமல் ஒரு மணி நேரமாவது உடற்பயிற்சி செய்கிறார்.
மேலும், நடனத்துக்கும் யோகாவுக்கும் கணிசமான நேரம் ஒதுக்கவும் தவறுவதில்லை. இதுதான் அவர் தன் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருப்பதற்கான ரகசியம்.
“எனக்கு எல்லா வகையான தென்னிந்திய உணவுகளும் பிடிக்கும். காப்பி பைத்தியம் என்றுகூட சொல்லலாம். தென்னிந்தியாவில் எந்த ஊருக்குச் சென்றாலும், மறக்காமல் உள்ளூர் ‘ஃபில்டர் காஃபி’யை ருசித்துவிடுவேன். பயணங்களின்போது மடிக்கணினிதான் எனது உற்ற தோழி. அதில் ஏதாவது ஓர் இணையத் தொடரை பார்த்தபடி பயணம் செய்வதிலும் மிகுந்த ஆர்வம் உண்டு,” என்கிறார் சினேகா பால்.

