‘தரமணி’, ‘ஜெயிலர்’ படங்களில் முத்திரை பதித்த வசந்த் ரவி, தற்போது ‘இந்திரா’ என்ற படத்தில் நடித்துள்ளார்.
அறிமுக இயக்குநர் சபரீஷ் நந்தா இயக்கத்தில் உருவாகியுள்ள அந்தப் படம், தொடர் கொலைகளைப் பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ளது.
தலைப்பைக் கேட்டதும், கதாநாயகியை முன்னிலைப்படுத்தும் படமா எனக் கேட்கிறார்களாம். ஆனால், இயக்குநர் தரப்பு இதை மறுக்கிறது.
“கதைப்படி, கதாநாயகன் பெயர் இந்திரன். அதனால்தான் இந்தத் தலைப்பு. கண் பார்வை பறிபோன முன்னாள் காவல்துறை அதிகாரியாக வசந்த் ரவி நடித்துள்ளார். அவர் வில்லனை எவ்வாறு கண்டுபிடிக்கிறார் என்பதுதான் கதை.
“முதலில் ‘ராஜாவின் பார்வையிலே’ என்றுதான் தலைப்பு வைக்க நினைத்தோம். அது சாத்தியமாகவில்லை என்பதால் இந்தத் தலைப்பை வைத்தோம்,” என்கிறார் சபரீஷ் நந்தா.
தெலுங்கில் பிரபல நகைச்சுவை, வில்லன் நடிகராகப் பெயர் வாங்கிய ‘புஷ்பா’ படப் புகழ் சுனில்தான் இந்தப் படத்திலும் வில்லனாக மிரட்டப் போகிறார்.
“இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளேன். ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களைப் பார்த்துள்ளேன். ஆனால், இதுபோன்ற ஒரு கதையை இதுவரை பார்த்ததோ, கேட்டதோ இல்லை,” என்று பாராட்டுகிறார் சுனில்.
மெஹ்ரீன் பிர்சாடா நாயகியாக நடிக்கும் இந்தப் படத்தில், அனிகா சுரேந்திரனுக்கு முக்கியமான கதாபாத்திரம் அமைந்துள்ளது.
கடந்த 1995ஆம் ஆண்டு அனுஹாசன், அரவிந்த்சாமியின் நடிப்பில் ‘இந்திரா’ என்ற தலைப்பில் ஒரு படம் வெளியானது.

