தனது ஒவ்வொரு படத்தின் படப்பிடிப்பு நிறைவு நாளின்போதும் படக்குழுவில் உள்ள அனைவருக்கும் அறுசுவை உணவும் புத்தாடைகளும் வழங்கி கௌரவிப்பார் காலஞ்சென்ற நடிகர் விஜயகாந்த்.
தற்போது இந்த வழக்கத்தைப் பின்பற்றி, தான் நடிக்கும் ‘கொம்பு சீவி’ படத்தின் படப்பிடிப்பை முடித்து வைத்துள்ளார் விஜயகாந்தின் இளைய மகன் சண்முகபாண்டியன்.
‘கொம்பு சீவி’ படக்குழுவினர் அனைவருக்கும் புதிய உடைகள் வழங்கி,
பிரியாணி விருந்தளித்து கௌரவித்துள்ளார்.
“இயன்றதைச் செய்வோம் இல்லாதவர்க்கே என்பதை தனது வாழ்நாள் லட்சியமாகக் கொண்டு அனைவருக்கும் அள்ளிக் கொடுத்தவர் எனது தந்தையார். அவரது அடிச்சுவற்றைப் பின்பற்றி ‘கொம்புசீவி’ படம் உருவாக கடுமையாக உழைத்த குழுவினருடன் என்னால் முடிந்த சிறிய அன்பளிப்பாக உணவையும் உடைகளையும் பகிர்ந்துகொண்டேன்,” என்று கூறினார் சண்முகபாண்டியன்.
இப்படத்தை பொன்ராம் இயக்கியுள்ளார். தனது ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’, ‘சீமராஜா’, ‘எம்ஜிஆர் மகன்’, ‘டிஎஸ்பி’ ஆகிய வெற்றிப் படங்களின் வரிசையில் ‘கொம்பு சீவி’ படமும் நிச்சயம் இடம்பெறும் என்கிறார் பொன்ராம்.
இதில் முதன்முறையாக சண்முகபாண்டியனுடன் நடிகர் சரத்குமார் நடித்துள்ளார். பொன்ராம் இயக்கும் படத்துக்காக அவருடன் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா கைகோத்திருப்பதும் இதுவே முதல் முறை.
மேலும், புதுமுகம் தார்னிகா நாயகியாக நடிக்க, சுஜித் சங்கர், கல்கி, முனீஷ்காந்த், காளி வெங்கட், ஜார்ஜ் மரியான் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
கலகலப்பும் விறுவிறுப்பும் நிறைந்த, நகைச்சுவையும் சண்டை காட்சிகளும் சரிவிகிதத்தில் கலந்த வணிகப் படைப்பாக ‘கொம்பு சீவி’ அமையும் என்கிறது இப்படத்தைத் தயாரிக்கும் புதிய நிறுவனமான ஸ்டார் சினிமாஸ்.
தமிழகத்தின் தேனி, ஆண்டிபட்டி, உசிலம்பட்டி, அதைச் சுற்றியுள்ள கிராமப்புறங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.
மண்வாசனை மிகுந்த கிராமங்களில் வசிக்கும் வெள்ளந்தி மக்களின் வாழ்க்கை குறித்து இந்தப் படம் பேசுமாம்.
பொன்ராமுக்கே உரிய நகைச்சுவையும் அதிரடி சண்டைக் காட்சிகளும் படம் முழுவதும் இருக்கும் என இயக்குநர் தரப்பு இப்போதே உறுதியளிக்கிறது.