‘சர்வர்’ வேலை கேட்ட பாக்யராஜ்; அறிவுரை கூறிய உணவக உரிமையாளர்

2 mins read
fdf4c0ce-1325-4e58-920e-345bcf010e13
பாக்யராஜ். - படம்: ஊடகம்

‘மாண்புமிகு பறை’ என்ற புதுப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் கே.பாக்யராஜ், தாம் சினிமாவில் வாய்ப்பு தேடி அலைந்த காலத்தில் எதிர்கொண்ட அனுபவங்களை சுவாரசியமாக விவரித்தார்.

ஒருமுறை பசி தாங்காமல் ஓர் உணவகத்துக்குச் சென்று வேலை கேட்டிருக்கிறார். உணவக முதலாளியோ, ‘முதலில் சாப்பிடு.. வேலையைப் பற்றி பிறகு பேசலாம்’ என்றாராம்.

“சினிமா வாய்ப்பு தேடி சென்னைக்கு வரும்போது என் ஊர்க்காரர் ஒருவர் எனக்கு முக்கியமான அறிவுரை கூறினார்.

“எவ்வளவு சிரமப்பட்டாலும் பசி, பட்டினி என்று வாடினாலும் தயவுசெய்து உணவகத்தில் ‘சர்வர்’ வேலைக்கு மட்டும் போய்விடாதே,” என்பதுதான் அந்த அறிவுரை.

“ஏன் அப்படிச் சொன்னார் என்பது அப்போது புரியவில்லை. அவர் சொன்னதை மீறி உணவகத்தில் வேலை கேட்டு நின்றேன்.

“உரிமையாளர் சொன்னதுபோல் சாப்பிட்ட பிறகு அவரைச் சந்தித்தபோது, கையில் 2 ரூபாய் கொடுத்து, ‘எந்த ஊருக்குப் போக வேண்டுமோ இப்போது கிளம்பிவிடு... நீ நினைப்பதுபோல் சர்வர் வேலை எளிதானதல்ல’ என்றார்.

“சினிமாவில் வாய்ப்பு கிடைப்பதற்கு முன்பு ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு எனப் பல இடங்களில் சுற்றித் திரிந்திருக்கிறேன். சாதிக்க வேண்டும் என்று வந்த எனக்கு ஊர் திரும்ப மனம் இல்லை.

“அந்த உணவகத்திலேயே வேலை பார்ப்பதாகக் கூறினேன். எனினும், பிறகுதான் அவர் ஏன் பணம் கொடுத்து ஊருக்குப் போகச் சொன்னார் என்பது புரிந்தது.

“சர்வர் வேலை கிடைத்துவிட்டால் தங்குவதற்கு இடமும் உணவும் இலவசமாகக் கிடைத்திடும். எனவே, நன்றாகச் சாப்பிடுவோம், தூங்குவோம். பிறகு வேலை தேட வேண்டும் என்கிற முனைப்பே இருக்காது. அதனால்தான் அப்படிப்பட்ட அறிவுரையை எனக்குத் தெரிந்த இருவரும் கூறினர் என்பதைப் புரிந்துகொண்டேன்.

“இப்படி வாழ்க்கை பல நல்ல அனுபவங்கள் மூலம் பல பாடங்களைக் கற்றுத்தந்தது,” என்றார் பாக்யராஜ்.

பட்டிமன்ற நடுவர் திண்டுக்கல் லியோனியின் மகன் லியோ சிவக்குமார் நடித்துள்ள படம் ‘மாண்புமிகு பறை’. இதை சுபா & சுரேஷ் ராம் திரைக்கதை எழுத, விஜய் சுகுமார் இயக்கியுள்ளார்.

தேவா இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். கடந்த மே மாதம் நடந்த கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்று கவனம் ஈர்த்த இந்தத் திரைப்படம் வரும் டிசம்பர் 12ஆம் தேதி வெளியாகிறது.

குறிப்புச் சொற்கள்