தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தடுமாறிய பாலாஜி, கைதூக்கிவிட்ட சிவாஜி

3 mins read
c3b09d19-46b4-4d23-ab57-313ec505ae52
‘தங்கை’ படக் காட்சி. - படம்: இந்திய ஊடகம்

தமிழ்த் திரைப்பட நடிகர் பாலாஜி கைதேர்ந்த படத் தயாரிப்பாளரும்கூட. ஆனால், படத் தயாரிப்பில் அவர் தொடக்கத்தில் சந்தித்தது தோல்வி, ஏமாற்றம், தடுமாற்றம். 

அவர் ஆரம்பத்தில் ஜெமினி கணேசன், சாவித்திரி, தான் (பாலாஜி) ஆகியோரின் நடிப்பில் சுஜாதா சினி ஆர்ட்ஸ் நிறுவனத்தின் மூலம் ‘அண்ணாவின் ஆசை’ படத்தை எடுத்தார். 

அந்தப் படத்தின் கதை, தமிழ்த் திரையுலகைப் பொறுத்தவரை ஓரளவு புதுமையானதே. வேலையிழக்கும் ராமநாதன் (ஜெமினி கணேசன்) என்பவர் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறார். தனது தம்பியின் (பாலாஜி) படிப்புக்காகக் காப்புறுதித் திட்டம் எடுத்து பின் பணம் பெறும் நோக்கில் இறந்ததுபோல் நாடகமாடுகிறார். ஆனால், பணம் வந்த பின் தம்பி பாலாஜி படிப்பில் கவனமின்றி சூதாட்டத்தில் ஈடுபடுகிறார். பல திருப்பங்களுக்கு இடையே இறுதியில் ராமநாதன் உயிருடன் இருப்பது தெரியவர அவர் செய்த மோசடிக்காகச் சிறைத்தண்டனை அனுபவிக்கிறார். 

படம் வசூலில் தோல்வியடைந்ததால், பாலாஜி கடன் நெருக்கடிக்கு ஆளானார். என்ன செய்வதென்று தெரியாத நிலையில், அவருக்கு ஜெமினி கணேசனே ஒரு வழி சொன்னார். அன்றைய நிலையில் திரைப்பட உலகில் மிகுந்த செல்வாக்கு உடையவர்களாக விளங்கியவர்கள் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், மக்கள் திலகம் எம்ஜிஆர் ஆகிய இருவர். அதனால், சிவாஜியை வைத்துப் படம் எடுப்பதாக உடனே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டால் கடன் கொடுத்தவர்கள் பொறுமை காப்பர் என்று அறிவுரை வழங்கினார். அது தொடர்பான விளம்பரத்தை உடனே கொடுக்கும்படியும் கூறினார். 

பாலாஜி உடனே சிவாஜியைத் தேடிப்போய் உதவி வேண்டினார். சிவாஜியும் என்ன செய்ய வேண்டும், என்ன படம் தயாரிப்பதாக உத்தேசம் என்று கேட்டார். பாலாஜி இந்திப் படம் ஒன்றை தமிழில் எடுக்கப்போவதாகவும் அதற்குரிய விளம்பரத்தை பிரபல பத்திரிகைகளில் மறுநாளே வரும் வகையில் கொடுத்து சிவாஜி உதவ வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். சிவாஜியும் அதற்கு இணங்க பாலாஜியின் அடுத்த படத்தில் சிவாஜி, கேஆர் விஜயா நடிப்பில் படம் தயாராகும் என்று பிரபல பத்திரிகைகளில் விளம்பரம் வந்தது. 

ஜெமினி கணேசனின் அறிவுரையை ஏற்று பாலாஜி கொடுத்த விளம்பரம் அன்றைய தினம் அவரைக் காப்பாற்றியது என்றே சொல்ல வேண்டும். கடன் கொடுத்தவர்களின் நெருக்கடி குறைந்தது. கடனை அடைக்க கால அவகாசம் வழங்கப்பட்டது. 

அப்படி அவசர கதியில் அறிவிக்கப்பட்டு, தயாராகி வெளிவந்த படம்தான்  சிவாஜி, கேஆர் விஜயா நடிப்பில் வெளிவந்த ‘தங்கை’ என்ற படம். படத்தில் உடல் இளைத்து புதிய பாத்திரத்தில் வந்த சிவாஜி, சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாகப் பாராட்டுப் பெற்றார். படத்தில் ஒலித்த பாடல்களில், ‘கேட்டவரெல்லாம் பாடலாம்...’, ‘சுகம், சுகம் அது துன்பமான இன்பமானது...’, ‘தண்ணீரிலே தாமரைப் பூ, தள்ளாடுதே அலைகளிலே...’, ‘இனியது இனியது உலகம், புதியது புதியது இதயம்,’ ஆகிய பாடல்கள் ரசிகர்களின் மனங்களைத் தொட்டன. படமும் வசூலில் வெற்றிப் படமாக அமைந்தது.

பிறகு என்ன, நடிகர் பாலாஜி, சிவாஜியை வைத்து திருடன், நீதி, ராஜா, என் மகன், என் தம்பி, எங்கிருந்தோ வந்தாள், உனக்காக நான், தியாகம், நல்லதொரு குடும்பம், தீர்ப்பு, தீபம், நீதிபதி, பந்தம், மருமகள் என பல வெற்றிப் படங்களைத் தயாரித்து திரைப்படத் தயாரிப்பில் மீண்டெழுந்தார்.  

இதில் பல படங்களில் வரும் பாடல் காட்சிகள் இன்றளவும் ரசிக்கக்கூடியவை. குறிப்பாக நீதி படத்தில் ‘நாளை முதல் குடிக்க மாட்டேன் சத்தியமடி தங்கம் இன்னைக்கு ராத்திரிக்கு தூங்க வேண்டும்...’, பாடல். இதோடு ‘என் தம்பி’ படத்தில் வரும் சதாரம் தெருக்கூத்து பாடலான, ‘நான் பொறந்தது தஞ்சாவூரு சூரக்கோட்டையிலே, வளர்ப்பு மேலக் கோட்டையிலே, இருப்பு கீழுக்கோட்டையிலே...’ படக்காட்சியைப் பார்த்தால் சிவாஜியால் இந்த அளவு துள்ளிக் குதித்து நடனமாடி நகைச்சுவை உணர்வுடன் எப்படி நடிக்க முடிந்தது என நமக்கே வியப்பு மேலோங்கும். 

குறிப்புச் சொற்கள்