மொத்த உலகத்தையும் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்த படம் ‘பாகுபலி’.
கடந்த 2015ஆம் ஆண்டு முதல் பாகம், 2017ல் இரண்டாம் பாகம் என இரு பாகங்களாக வெளியாகி, பெரும் வசூல் வேட்டை நடத்தியது ‘பாகுபலி’.
ராஜமௌலி இயக்கிய அப்படத்தில் பிரபாஸ், ரம்யா கிருஷ்ணன், அனுஷ்கா, தமன்னா, ராணா டகுபதி, நாசர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
இந்நிலையில், இரண்டு பாகங்களையும் இணைத்து ஒரே படமாக, ‘பாகுபலி தி எபிக்’ என்ற பெயரில் அக்டோபர் 31ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியிட உள்ளனர்.
மொத்தம் 220 நிமிடங்கள் ஓடக்கூடிய ‘பாகுபலி தி எபிக்’ படத்தை திரையரங்கில் பார்க்கும்போது புது அனுபவம் கிடைக்கும் என்று உறுதியாகச் சொல்கிறார் ஷோபு எர்லகட்டா.
இடைவெளிக்கு முன்பு வரை முதல் பாகம், அடுத்த பகுதியில் இரண்டாம் பாகம் எனக் காட்சிகள் இடம்பெற்றிருக்கும் என்றும் பாகுபலியை கட்டப்பா ஏன் கொன்றார் என்பது இடைவேளை காட்சியாக இடம்பெற்றுள்ளது என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
இரண்டு பாகங்களிலும் இடம்பெற்றுள்ள சில பாடல் காட்சிகளைச் சற்றே சுருக்கியும் மாற்றியும் அமைத்துள்ளனர்.
‘பாகுபலி’யின் இரண்டு பாகங்கள் வெளியானபோது இந்தியத் திரையரங்குகளில் நவீனத் திரையிடல் தொழில்நுட்பங்கள் இல்லை. இப்போது அனைத்து வசதிகளும் தொழில்நுட்பங்களும் உள்ளன. எனவேதான் ரசிகர்களுக்கு படம் பார்க்கும்போது கூடுதல் பரவசம் ஏற்படும் என்பதை இப்போதே உறுதியாகச் சொல்ல முடிகிறது என்றும் தயாரிப்பாளர் ஷோபு எர்லகட்டா தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
இந்தியத் திரையுலகில் இவ்வாறு ஒரு படத்தின் இரு பாகங்கள் இணைத்து ஒரே படமாக மறு வெளியீடு செய்வது இதுவே முதல் முறை.
படத்துக்கு ரசிகர்களிடம் எத்தகைய வரவேற்பு கிடைக்கும் என்பதை அறிய மூன்று வாரங்கள் காத்திருக்க வேண்டும்.