விருது மகுடமல்ல, பெரும் பொறுப்பு: ‘கலைமாமணி’ சாய் பல்லவி

2 mins read
424c5252-c2eb-455d-80f1-98a423442646
சாய் பல்லவி. - படம்: ஊடகம்

இயல்பான நடிப்பு, திரையில் ஒப்பனையின்றி தோன்றும் தைரியம், பார்வையாளர்களைக் கட்டிப்போடும் நடனம். இந்த மூன்றின் கலவைதான் சாய் பல்லவி.

இவருக்கு அண்மையில் தமிழக அரசின் உயரிய விருதான ‘கலைமாமணி’ விருது கிடைத்தது.

அவர் அளித்துள்ள பேட்டியில், “முதலில் இந்தச் செய்தியை நான் கேட்டபோது என்னால் நம்பவே முடியவில்லை. பல ஜாம்பவான்கள் பெற்ற ஒரு விருதை, என் கலைப் பயணத்திற்குத் தமிழக அரசு வழங்கியிருப்பது நான் செய்த பாக்கியம். இந்த விருதை நான் தனியாகப் பெறவில்லை. என் திறமையை நம்பி எனக்கு வாய்ப்பளித்த இயக்குநர்கள், என் மீது பேரன்பு காட்டும் ரசிகர்கள், என் குடும்பம் என அனைவருக்கும் இந்த விருதை சமர்ப்பிக்கிறேன்.

“பலரும் விருதுகளை, நாம் அடைந்த வெற்றிச் சின்னமாகவும், மகுடமாகவும் பார்க்கிறார்கள். ஆனால் நான் இதை ஒரு மிகப்பெரிய பொறுப்பாகவே பார்க்கிறேன். இந்த விருது, ‘சாய் பல்லவி, நீ சரியான பாதையில் பயணிக்கிறாய், ஆனால் இனி உன் பயணம் இன்னும் கவனமாக இருக்க வேண்டும்,” என்று எனக்கு நினைவூட்டுகிறது.

இனி நான் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு கதையும், ஒவ்வொரு கதாபாத்திரமும் இந்த விருதுக்கு நியாயம் செய்வதாக இருக்க வேண்டும். என் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை நான் ஒருபோதும் சிதைத்துவிடக் கூடாது. முன்பைவிட இப்போது என் பொறுப்பு பன்மடங்கு அதிகரித்துவிட்டது. இந்த அங்கீகாரம், என் கலைப் பயணத்தின் முற்றுப்புள்ளியல்ல, இன்னும் கவனமாகவும், அர்ப்பணிப்புடனும் செயல்படுவதற்கான ஒரு புதிய தொடக்கப் புள்ளி என்று கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்