‘அந்த 7 நாட்கள்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமாகிறார் ஸ்ரீசுவேதா மகாலட்சுமி.
மருத்துவம் படித்தவர்கள் நடிகைகளாக மாறிவரும் காலகட்டத்தில், தடகள வீராங்கனையாக இருந்த இவர், நாயகியாக உருவாகி உள்ளார்.
முதலில் விளம்பரங்கள், பின்னர் மலையாள தொலைக்காட்சித் தொடர்களில் நடித்த ஸ்ரீசுவேதா, நாயகியாக மாற கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி, ‘நல்ல நடிகை’ என அறிமுகப் படத்திலேயே பெயர் வாங்கிவிட்டார்.
“எனது சொந்த ஊர் கோவை மாவட்டத்தில் உள்ள சிறுமுகை. அங்கு பள்ளிப்படிப்பை முடித்த பிறகு, கல்லூரியில் சேர சென்னை வந்தோம்.
“சிறு வயதிலேயே எனக்கு சினிமா மீது ஆர்வம் அதிகமாம். சினிமா பைத்தியம் என்று சொன்னால்கூட சரியாகத்தான் இருக்கும். நான் மட்டுமல்ல, என் அம்மா, மாமா என குடும்பத்தில் பலருக்கும் சினிமா மீதான மோகம் அதிகம்தான்,” என்று சொல்லி சிரிக்கிறார் ஸ்ரீசுவேதா.
இதனால் ‘விஷுவல் கம்யூனிகேஷன்’ துறையைத் தேர்வு செய்து படிக்க முடிவு செய்திருக்கிறார்.
ஆனால், சினிமாவுக்கு உதவும் படிப்புக்குப் பச்சைக்கொடி காட்டிய இவரது குடும்பத்தார், உண்மையாகவே நடிக்க வாய்ப்பு கிடைத்தபோது, எதிர்ப்பு காட்டியுள்ளனர்.
இதையடுத்து, ஆடை வடிவமைப்புத் துறையில் கவனம் செலுத்தியுள்ளார் ஸ்ரீசுவேதா. இதுவும் திரைத்துறையுடன் சம்பந்தப்பட்டது என்பதால் ஒருவித மன ஆறுதல் கிடைத்ததாம்.
தொடர்புடைய செய்திகள்
“இந்த சமயம் பார்த்து எனது தோழி ஒருவர், சென்னையில் நடந்த தொலைக்காட்சித் தொடர் நடிப்புத் தேர்வுக்கு என் புகைப்படத்தை அனுப்பி வைத்தார்.
“அழைப்பு வரும் என்ற நம்பிக்கை அறவே இல்லை. ஆனால், என் நல்ல நேரம், அழைப்பு வந்தது மட்டுமல்லாமல், என் அம்மாவும் திடீரென மனம் மாறி தொடரில் நடிப்பதென்றால் பிரச்சினை இல்லை என்று வாழ்த்தி, அனுப்பிவைத்தார்,” என்று அண்மைய பேட்டியில் கூறியுள்ளார் ஸ்ரீசுவேதா.
நேரில் சென்ற போதுதான், அது மலையாளத்தில் உருவாகும் ‘மௌன ராகம்’ என்ற தொடர் என்பது தெரியவந்துள்ளது. ஆனாலும், முக்கியமான கதாபாத்திரம் என்பதால் நடிக்க ஒப்புக்கொண்டாராம்.
இந்தத் தொடர்தான் கேரளாவில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் தம்மைக் கொண்டுபோய் சேர்த்ததாகச் சொல்கிறார்.
“பள்ளியில் படித்தபோது, தடகள வீராங்கனையாக அசத்திய நான், கல்லூரியில் ‘பேட்மின்டன்’ விளையாடி பெயர் வாங்கினேன். இப்போதுகூட வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம், குறைந்தபட்சம் இரண்டு மணிநேரம் விளையாடுகிறேன். இல்லையெனில் உடற்பயிற்சிக்கூடம் செல்வேன்.
“எங்கள் வீட்டில் அனைவருமே சுத்த சைவம். என் உடல் கட்டுக்கோப்பாக இருக்கிறது எனில், அதற்கு உணவுப் பழக்கம், விளையாட்டு, உடற்பயிற்சி ஆகியவைதான் காரணம், எனச் சொல்லும் ஸ்ரீசுவேதா, நடிகர் சூர்யாவின் தீவிர ரசிகையாம்.
அண்மையில் இவர் பார்த்து ரசித்த படம் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’. தமக்கு இதுபோன்ற படங்கள் அமையவில்லையே என ஏங்குகிறார்.
“எனக்கு வயதாகிவிடவில்லை என்பதால் பொறுமையாக காத்திருப்பேன். ‘அந்த 7 நாட்கள்’ படம் மூலம் தமிழிலும் மலையாளத்திலும் நடிக்க கதை கேட்டு வருகிறேன். விரைவில் நல்ல தகவலை எதிர்பார்க்கலாம்,” என்று நம்பிக்கையுடன் சொல்கிறார் ஸ்ரீசுவேதா.
கொசுறு: ‘அந்த 7 நாட்கள்’ என்ற தலைப்பில் பாக்யராஜ் பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு படத்தை இயக்கி நடித்திருந்தார். இப்போது அதே தலைப்பில் உருவாகும் இந்தப் படத்தை பாக்யராஜின் உதவியாளர் சுந்தர் இயக்குகிறார் என்பது மற்றொரு சுவாரசியத் தகவல்.