வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கே. கணேஷ் தயாரிக்கும் புதிய திரைப்படம், ‘அன்கில்_123’.
சமூக ஊடகப் புகழின் பேராசை எவ்வாறு ஒருவரது வாழ்க்கையையும் மனத்தையும் மாற்றுகிறது என்பதை ஆராயும் ஒரு புதிய மனோதத்துவ திகில் படமாக இது உருவாகிறது. இந்தப் படத்தை சாம் ஆண்டன் இயக்குகிறார்.
சாம் ஆண்டன், சவரிமுத்து இருவரும் இணைந்து இப்படத்திற்கான கதையை எழுதியுள்ளனர்.
முதன்மைக் கதாபாத்திரத்தில் புகழ்பெற்ற இந்தி இயக்குநர் அனுராக் காஷ்யப் நடிக்கிறார். அவருடன் ‘பிதாமகன்’ சங்கீதா ஓர் உணர்ச்சிகரமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இப்படத்துக்கு ஜெரார்ட் ஃபெலிக்ஸ் இசையமைக்க, கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்கிறார். சவுந்தர்ராஜ் அரங்கம் அமைக்க, கோட்டீஸ்வரன் சண்டைப் பயிற்சி அளிக்கிறார்.
இன்ஃப்ளூயன்சர்களின் வாழ்க்கை எவ்வாறு மனநிலை மாற்றம் மற்றும் அழிவுக்கு வழிவகுக்கிறது என்பதைப் படம் சொல்கிறது.
சமூக ஊடகத் தளங்களில் வலுவான, தொடர்ச்சியான செயல்பாட்டைக் கொண்டிருப்பவர்களையே இன்ஃப்ளூயன்சர்கள் என்பார்கள். இந்தப் படத்தில், அதிகமான புகழைப் பெறும் கனவுடன் தொடங்கும் ஓர் இன்ஃப்ளூயன்சரின் கதை பேசப்படுகிறது.
புகழின் அழுத்தம், தனிமை, அடையாள இழப்பு ஆகியவை எவ்வாறு ஒருவரது உண்மையான உலகத்தைப் பாதிக்கிறது என்பதையும் இக்கதை பேசுகிறது.
தொடர்புடைய செய்திகள்
இன்றைய டிஜிட்டல் உலகில் ஒவ்வொரு பதிவுக்குப் பின்னாலும் மறைந்திருக்கும் உணர்ச்சிகரமான போராட்டங்களையும், ஒப்பீடு, பொறாமை, தன்னம்பிக்கைக் குறைபாடு ஆகியவற்றின் மோதல்களையும் தெளிவாகச் சித்திரிக்கும்படி படம் உருவாக்கப்பட்டிருக்கிறது என்று கூறுகிறார் படத்தின் இயக்குநர்.

