ஒரு பக்கம் பத்ம விருது பெற்றது, மற்றொரு பக்கம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘துடரும்’ மலையாளப் படத்தில் நாயகியாக நடித்தது என இரட்டிப்பு மகிழ்ச்சியில் உள்ளார் நடிகை ஷோபனா.
அண்மைய பேட்டி ஒன்றில், தனது திரையுலக அனுபவங்கள் குறித்து பல சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்துகொண்டுள்ள அவர், அமிதாப் பச்சன் குறித்து மிக உயர்வாகப் பேசியுள்ளார்.
“ஒருமுறை அமிதாப் பச்சன் நடித்த ஒரு படத்தில் கௌரவ வேடத்தில் நடித்தேன். இதற்கான படப்பிடிப்பு அகமதாபாத் நகரில் நடைபெற்றது. ஒருநாள் படப்பிடிப்பின்போது அமிதாப் பச்சனைப் பார்க்க ஏராளமான ரசிகர்கள் திரண்டுவிட்டனர்.
“அந்நேரம் நான் உடைமாற்ற வேண்டியிருந்தது. எங்கே மாற்றலாம் என்று படக்குழுவைச் சேர்ந்த ஒருவரிடம் நான் கேட்டேன்.
“அதற்கு அவர், ‘மலையாளத் திரையுலகைச் சேர்ந்தவர் எப்படிப்பட்ட இடமாக இருந்தாலும் ‘அனுசரித்துப்’ போவார். அதோ, அந்த மரத்தின் பின்னே சென்று உடைமாற்றச் சொல்,’ என்று இன்னொருவரிடம் கூறினார்.
“ஆனால், அருகே இருந்த கேரவேனுக்குள் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த அமிதாப் பச்சன், இந்த உரையாடலை தாம் வைத்திருந்த ‘வாக்கி டாக்கி’ கருவி மூலம் கேட்பார் என யாருமே எதிர்பாக்கவில்லை.
“திடீரென கேரவேனில் இருந்து வெளியே வந்த அவர், ‘யார் அப்படிச் சொன்னது’ எனக் கம்பீரக்குரலில் கேட்க, ஒட்டுமொத்த படக்குழுவும் மிரண்டு போனது.
“அதன் பிறகு அவர், என்னிடம் தனது கேரவேனுக்குள் சென்று உடைமாற்றச் சொன்னார். ஒரு நாற்காலியை இழுத்துப்போட்டு கேரவேனுக்கு முன்பு அமர்ந்தார்.
தொடர்புடைய செய்திகள்
“அன்று பார்த்த அதே மனிதாபிமானத்தை இப்போதும் அவரிடம் காண்கிறேன்,” என்று கூறியுள்ளார் ஷோபனா.
இவர் ‘கல்கி’ படத்தில் அமிதாப் பச்சனுடன் நடித்திருக்கிறார்.

