தென்னிந்தியாவின் முக்கிய நடிகைகளில் ஒருவராக வலம் வரும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், தனது நடிப்புத் திறனுக்கேற்ற கதைகளாகத் தேர்வு செய்து நடித்து வருகிறார்.
இரண்டு குழந்தைகளின் தாயாக இவர் நடித்திருந்த ‘காக்கா முட்டை’ படத்திற்கு மாநில அரசின் விருது கிடைத்தது.
இதேபோல், தெலுங்கில் எடுக்கப்பட்ட ‘சங்கராந்திகி வஸ்துன்னம்’ படத்திலும் நான்கு குழந்தைகளின் தாயாக நடித்திருந்தார்.
அண்மையில், அமெரிக்காவில் நடைபெற்ற திரைத்துறை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஐஸ்வர்யா ராஜேஷ், “சங்கராந்திகி வஸ்துன்னம்’ படத்தில் நான்கு குழந்தைகளுக்குத் தாயாக நடித்துள்ளேன். ‘சங்கராந்திகி வஸ்துன்னம் 2’ எடுத்தால் ஆறு குழந்தைகளுக்குக்கூட தாயாக நடிப்பேன்.
“குழந்தைகளின் தாயாக நடிப்பதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும். அம்மா வேடம் எனக்கு மிகவும் பிடிக்கும். ஒரு நல்ல நடிகையெனில் எந்த வேடத்திலும் நடிப்பதற்குத் தயாராக இருக்க வேண்டும். அத்தகைய வேடங்களில் நடிப்பதற்கு வயது ஒரு தடை இல்லை. தமிழிலும் பல படங்களில் குழந்தையின் அம்மாவாக நடித்து இருக்கிறேன்,” என்றார்.
இந்தக் காணொளி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் ‘கருப்பர் நகரம்’, ‘மோகன்தாஸ்’, ‘தீயவர் குலைகள் நடுங்க’ ஆகிய தமிழ்ப் படங்களிலும், ‘உத்தரகாண்டம்’ என்ற கன்னடப் படத்திலும் நடித்து வருகிறார்.