‘பிச்சைக்காரன்’ படத்தை மிஞ்சிய ஒரு படைப்பை உருவாக்க முடியவில்லை: விஜய் ஆண்டனி

2 mins read
6458f533-ffc3-431b-8cb8-e259d2c652ea
விஜய் ஆண்டனி, இயக்குநர் சசி. - படம்: ஊடகம்
multi-img1 of 2

அண்மையில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான ‘சக்தித் திருமகன்’ திரைப்படம் திரையரங்குகளிலும் ஓடிடியிலும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதையடுத்து, ‘பிச்சைக்காரன்’ படத்தை எடுத்த இயக்குநர் சசி இயக்கத்தில் ‘நூறு சாமி’ படத்தில் நடிக்கிறார்.

‘பிச்சைக்காரன்’ படத்தைப் போலவே இப்படமும் நல்ல வரவேற்பைப் பெறும் என படக்குழு எதிர்பார்க்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு இப்போது தமிழகத்தின் பல பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ‘நூறு சாமி’ திரைப்படம் குறித்தும் ‘ஏஐ’ எவ்வாறு விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும் என்றும் பேசியிருக்கிறார் விஜய் ஆண்டனி.

“இதற்கு முன்பு ‘பிச்சைக்காரன்’ கதையைக் கேட்டுவிட்டு மிகவும் உணர்ச்சிவசப்பட்டேன். ‘நூறு சாமி’ கதையைக் கேட்கும்போதும் எனக்கு அப்படித்தான் இருந்தது.

“இதுவும் அம்மாவைப் பற்றியக் கதைதான். இப்படமும் நல்ல வரவேற்பைப் பெறும் என்று நம்புகிறோம்.

“இயக்குநர் சசி, ‘டிஷ்யூம்’ படத்தில் என்னை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தினார். அப்போது சினிமாவில் எனக்கு முதலில் வாய்ப்பு கொடுத்து தூக்கிவிட்டவர் அவர்தான்,” என்று கூறியுள்ளார் விஜய் ஆண்டனி.

அதன்பிறகு ‘பிச்சைக்காரன்’ என்ற படம் மூலம் தம்மை ரசிகர்கள் மத்தியில் மீண்டும் பிரபலமாக்கியதாகக் குறிப்பிட்ட அவர், அந்தப் படத்தை மிஞ்சிய ஒரு படத்தை தம்மால் எடுக்க முடியவில்லை என்பதே உண்மை என்றார்.

“இப்போது மீண்டும் ‘நூறு சாமி’ கதையை என்னிடம் சொல்லி இருவரும் சேர்ந்து அப்படத்தைப் பண்ணிக்கொண்டிருக்கிறோம்,” என்றார் அவர்.

எங்கு திரும்பினாலும் செயற்கை நுண்ணறிவு பற்றிய பேச்சாகத்தான் உள்ளது. திரையுலகம் மட்டும் விதிவிலக்கா என்ன?

“ஏஐ கெட்டது என்கிறார்கள். ஆனால் அத்தொழில்நுட்பம் விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும்,” என்கிறார் விஜய் ஆண்டனி.

“ஏஐ தொழில்நுட்பத்தில் நல்லது கெட்டது இரண்டுமே இருக்கிறது. அதை நாம் எப்படி கையாளுகிறோமோ அதைப் பொறுத்துதான் நல்லது கெட்டது என்று மாறுகிறது. எல்ல தொழில்நுட்பத்திலும் நாம் கையாளுவதில்தான் நல்லது கெட்டது இருக்கிறது.

“ஏஐ தொழில்நுட்பத்தால் விவசாயிகள் நிறையபேர் பலனடைவார்கள் என்று நினைக்கிறேன். பருவநிலை மாற்றம், என்ன பருவத்தில் என்ன பயிர் செய்ய வேண்டும் என்பதில் தொடங்கி, விவசாயத்தில் பெரும் மனித வேலைகளை எளிதாக்கும் இயந்திரம் வரையில் ஏஐ தொழில்நுட்பம் பரவி விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும் என்று நினைக்கிறேன்,” என்கிறார் விஜய் ஆண்டனி.

குறிப்புச் சொற்கள்