ஒரேயாண்டில் மூன்று படங்களில் நடித்தது சாதனை: பாடினி உற்சாகம்

2 mins read
4003e823-954c-40f1-9d5c-2a1081f1ed1a
பாடினி குமார். - படம்: ஊடகம்

அண்மையில் வெளியான ‘சரண்டர்’ படத்தில் நாயகியாக நடித்துள்ளார் பாடினி குமார். அது மட்டுமல்ல, ஒரே ஆண்டுக்குள் இவர் நடித்த மூன்று படங்கள் அடுத்தடுத்து வெளியாகி உள்ளன.

அடிப்படையில் இவர் ஓர் இதய அறுவை சிகிச்சை நிபுணர். சினிமா மீதான காதலால் அந்த வேலையை உதறிவிட்டு, கேமரா, ஒப்பனை என்று எதிர்ப்பக்கம் சென்றுவிட்டார்.

“புதுமுகமாக அறிமுகமான ஓர் நடிகை, ஒரே ஆண்டில் மூன்று படங்களில் நாயகியாக நடித்திருப்பது பெரிய விஷயம் என்று பலரும் சொல்கிறார்கள். அதைக் கேட்கும்போது ஒருபக்கம் மகிழ்ச்சியாக இருந்தாலும், இன்னொரு பக்கம் பயமாகவும் உள்ளது.

“இனிமேல் நல்ல கதைகளாகத் தேர்வு செய்ய வேண்டும். நல்ல நடிகை எனப் பெயரெடுக்க வேண்டும்,” என்று அச்சமும் பொறுப்புமாகப் பேசுகிறார் பாடினி குமார்.

சங்க காலத்தில் நன்றாகப் பாடக்கூடிவர்களை ‘பாடி’ என்று குறிப்பிடுவார்களாம். மேலும், பாடியபடியே நடனமாடக் கூடியவர்களைப் ‘பாடினி’ என்று அழைப்பார்களாம்.

தன் மகளும் இவ்வாறு உருவாக வேண்டும் என்று ஆசைப்பட்டு, இவரது பெற்றோர் இந்தப் பெயரை வைத்தனர்.

பாடினியின் சொந்த ஊர் திருநெல்வேலி என்றாலும், பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னையில்தானாம். தந்தை சந்தன குமார், தாயார் சரஸ்வதி.

“சிறு வயதில் இருந்தே எனக்கு சினிமா மீது ஆசையும் ஆர்வமும் அதிகம். கொரோனா ஊரடங்கின்போது பொழுது போகாமல், வீட்டில் இருந்தபடியே ‘டிக் டாக்’ காணொளிகளை உருவாக்கி பலருடன் பகிர்ந்தேன்.

“ஆனால், அந்தப் பழக்கமே பின்னாள்களில் எனக்கான நல்ல பயிற்சியாக அமைந்துவிட்டது.

“நாமும்கூட ஓரளவு உருப்படியாக நடிக்கிறோம் என்ற நம்பிக்கை வந்தவுடன்தான் திரைத்துறைக்குள் நுழையலாம் என்ற உந்துதலும் ஏற்பட்டது,” என்கிறார் பாடினி.

சினிமா, நடிப்பு என்று வீட்டில் சொன்ன அடுத்த நிமிடமே கடுமையான எதிர்ப்பு கிளம்பியதாகச் சொல்லும்போதே, இவர் கண்களில் மீண்டும் பயம் எட்டிப்பார்க்கிறது.

பெற்றோர் அடிக்காத குறைதானாம். பதிலுக்கு இவரும் கோபித்துக்கொண்டு தன் மாமா வீட்டுக்குச் சென்றுவிட்டார்.

எல்லார் வீட்டிலும் நடப்பதுபோல், மாமா இவரது பெற்றோரைச் சமாதானம் செய்ய, சரியாக அந்த நேரம் பார்த்து, முதல் பட வாய்ப்பு தேடி வர, எல்லாம் நல்லவிதமாக அமைந்தது.

“எனக்கும் மருத்துவத் துறைக்கும் உள்ள பந்தமா என்று தெரியவில்லை. முதல் படத்திலேயே மருத்துவர் கதாபாத்திரத்தில் நடித்தேன். மருத்துவத் தொழில் உயிருடன் தொடர்புடையது. சற்று அலட்சியமாக இருந்தாலும் சிக்கலாகிவிடும்.

“நாம் ஆசைப்பட்டதை அடைய, சிலவற்றை விட்டுக்கொடுக்க வேண்டும் என்பார்கள். அப்படித்தான் நானும் மருத்துவர் என்பதற்கு பதிலாக, நடிகை என்பதைத் தேர்வு செய்துள்ளேன்.

“சாய் பல்லவி, ஸ்ரீலீலாவுடன் என்னை ஒப்பிடுவது சரியல்ல. இருவரும் என்னைப் போல் மருத்துவர்கள் என்றாலும், சினிமாவில் சாதித்துக் காட்டியவர்கள்.

“ஒரே ஆண்டில், ‘சீசா’, ‘திருக்குறள்’, இப்போது ‘சரண்டர்’ என மூன்று படங்கள் வெளிவந்துள்ளன. மேலும், ‘ஹார்ட் பீட்-2’ இணையத்தொடரையும் முடித்துவிட்டேன்.

“புதிய இணையத்தொடர் ஒன்றிலும் ஒப்பந்தமாகி உள்ளேன். அடுத்தடுத்த படங்கள் குறித்து உரிய நேரத்தில் அறிவிப்புகள் வெளியாகும்,” என்கிறார் பாடினி குமார்.

குறிப்புச் சொற்கள்