ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியரான திருவாட்டி மங்கையர்க்கரசிக்கு, 71 வாய்ப்பு கிடைக்கும்போது மீண்டும் கற்பித்தலில் ஈடுபட எவ்வித வற்புறுத்தலும் தேவைப்படவில்லை. “ஓர் ஆசிரியர் தம் வாழ்நாள் முழுதும் ஆசிரியராகவே இருப்பார்” - எனும் உணர்வு இவருக்குள் ஆழமாக வேரூன்றியுள்ளது.
கடந்த மே மாதம் ‘=ட்ரீம்ஸ் சிங்கப்பூர்’ எனும் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்குக் கல்வி ஆதரவுளிக்கும் அமைப்பு இவரை அணுகியது. கடந்த 2023 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இவ்வமைப்பு தனது வாரநாள் உறைவிடத் திட்டத்தின்மூலம் மாணவர்களுக்கு விரிவான கல்வி, வளப்பயிற்சி உள்ளிட்ட ஆதரவுகளை வழங்கி வருகிறது. கல்வி அமைச்சின் பள்ளிகளில் உயர்நிலை 1, 2 ஆம் வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு இத்திட்டம் ஆதரவளிக்கிறது. இதில் சேர்க்கப்படும் மாணவர்களுக்கு ஆறு ஆண்டுகள் வரையிலான முழு உதவித் தொகை வழங்கப்படுகிறது.
“இதற்கு முன்பு இங்கு ஒருவர் பாடம் நடத்திக்கொண்டிருந்தார். இரண்டாம் பருவத் தேர்வுகளுக்குச் சற்று முன்பாக அவர் விடைபெற்றதால் என்னை அணுகினர். நான் கல்வித்துறைப் பின்னணியிலிருந்து வந்ததால் உடனடியாக ஒப்புக்கொண்டேன்,” என்றார் திருவாட்டி மங்கை.
தொடக்கத்தில், தற்போது உயர்நிலை 2 ஆம் வகுப்பில் பயிலும் 11 மாணவர்களுக்கு ஆங்கிலப்பாடம் எடுத்தார் திருவாட்டி மங்கை. இப்போது உயர்நிலை 1, 2 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கு ஆங்கிலப்பாடம் எடுக்கிறார். ஒவ்வொரு புதன், வியாழக்கிழமையும் ‘=ட்ரீம்ஸுக்குச்’ சென்று பாடமெடுத்து வருகிறார் இவர். தொடக்கத்தில் எந்தவித எதிர்பார்ப்புகளுமின்றி பணியைத் தொடங்கினாலும், அவரது போக்குவரத்து உள்ளிட்ட செலவுகளைச் சமாளிக்க ஏதுவாக அமைப்பு அவருக்கு ஊதியமளித்து வருகிறது.
மாணவர்களுடன் ஏற்பட்ட பிணைப்பு, மாணவர்களுக்கு மட்டுமின்றி, திருவாட்டி மங்கைக்கும் நன்மையளித்துள்ளது. ‘=ட்ரீம்ஸில்’ இணைவதற்கு முன்பு நீரிழிவு, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களை இழந்த சோகத்தில் இருந்தார் மங்கை. “=ட்ரீம்ஸில் இணைந்து வகுப்பெடுப்பது என் துயரிலிருந்து மீளவும், என்னால் இயன்ற வரை சமூகத்திற்கு நன்மை செய்யவும் வாய்ப்பளித்துள்ளது,” என்றார் அவர்.
ஆசிரியர் மங்கையர்க்கரசிக்குச் சொந்த வீடு இருந்தாலும், குடும்பத்தினரை இழந்த துக்கம் ஏற்படுத்திய பாதிப்பின் காரணமாகத் தமது 89 வயது தாயாருடன் வசித்து வருகிறார். “அவருக்கு இது கடினமான சூழல். அதனால், அவர் உணவு உட்கொள்வது, தொலைக்காட்சி பார்ப்பது என என்ன வேலை செய்துகொண்டிருந்தாலும் யாரவது ஒருவர் உடனிருப்பதை விரும்புகிறாரென நினைக்கிறேன்,” என்றார்.
“எங்கள் தாயரைத் தனியே விட முடியாது. நானும் என் உடன்பிறந்தோரும் மாறி மாறி அவருடன் வசிக்கிறோம். ‘=ட்ரீம்ஸ்’ அல்லது இதர வேலைகளுக்காக நான் வெளியே செல்லும்போது அவர்கள் தாயரைப் பார்த்துக்கொள்வார்கள்.”
கண்களுக்குத் தெரியாத பணிகள்
‘=ட்ரீம்ஸ்’ வகுப்பில் ஒருமுறை குடும்பம்குறித்த விவாதம் எழுந்ததையும், அப்போது ஒரு மாணவர் தொலைக்காட்சிக்குப் பின் சென்று ஒளிந்து கொண்டதையும் நினைவுக்கூர்ந்தார்.
தொடர்புடைய செய்திகள்
“ஏதோவொரு ஆழமான பாதிப்பு அவருக்குள் இருப்பதை உணர்ந்தேன். அவர் குடும்பம்குறித்துப் பேசவோ எழுதவோ மனமில்லை.”
அப்போது தான் மாணவர்களைச் சற்றே மாறுபட்ட விதத்தில் அணுக வேண்டியதன் அவசியத்தைப் புரிந்து கொண்டார் ஆசிரியர் மங்கை.
“பல மாணவர்கள் நெருக்கடியான, அதிக இடம் இல்லாத வீடுகள், ஆதரவற்ற நிலைகளிலிருந்து வருகின்றனர். ஓரறை வீடுகளில் உணவுக்கும், பொருள்களுக்கும் ஒரே மேசையைப் பகிர்ந்துகொண்டு, அமர இடமற்ற நிலையில் வசிக்கின்றனர். எனவே, ‘=ட்ரீம்ஸில்’ அதிக இடம் இருப்பது அவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது. பெரிய இடம், அவர்களது மனதையும் நெருக்கடியிலிருந்து மீட்க உதவுகிறது. சிந்தனைகளுக்கு வித்திடுகிறது.”
வலுவான பிணைப்பு
“மாணவர்களுடன் நல்ல பிணைப்பை ஏற்படுத்திக்கொள்வதில் கவனமாக இருந்தேன். கல்வி பயிற்சியைத் தாண்டி அவர்கள் சொல்வதைக் காதுகொடுத்துக் கேட்பதையும், அவர்கள்மீது நம்பிக்கை வைத்து அவர்களை ஊக்குவிப்பதையும் விரும்புகிறார்கள் என்பதை உணர்ந்தேன்,” என்றார் ஆசிரியர் மங்கை.
“என்னிடம் பயில வரும் மாணவர்களிடம், குறைந்தது முன்று அமர்வுகளுக்கு அவர்கள் யார் என்பதை எனக்குக் காட்டும் விதமாக அமைந்த தலைப்புகளைக் கொடுத்து எழுதச் சொல்வேன். பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபடுத்துவேன். அவற்றை மேற்கொள்ளும்போது அவர்களின் நடவடிக்கைகளையும் கவனிப்பேன்,”
“மாணவர்களிடம் இலக்கு நிர்ணயத்தை வலியுறுத்துவேன். இலக்கு நிர்ணயிக்கும்போது அங்குமிங்கும் கேள்விகள் கேட்பதன் மூலம் அவர்களின் சிரமங்கள் என்ன, அவர்கள் யார், அவர்களின் இலக்குகள் என்ன ஆகியவற்றைத் தெர்ந்துகொள்வேன். பின்னர், பொதுவான தலைப்புகள்மூலம் அவர்களின் எண்ணங்களை ஆழமாகத் தெர்ந்துகொள்வேன். சில நேரம் பேசும்போது மேலோட்டமாகப் பகிர்ந்தாலும் எழுத்தில் ஆழமான உணர்வுகள் வெளிப்படும்.”
இதில் திருத்தும் பணிகள் அதிகம். “ஒரு வரிக் கேள்விகள், பல பதில்களிலிருந்து தேர்வு செய்யும் கேள்விகளைத் திருத்துவதும், மதிப்பிடுவதும் எளிது. ஆனால், அவர்களைக் குறித்து ஆழமாகத் தெரிந்துகொள்ள எழுத்துப் பயிற்சி தான் சிறந்தது.”
‘=ட்ரீம்ஸில்’ அவரது பணி 5 மணிக்குத் தொடங்கினாலும், விரைவாகச் செல்வதை வழக்கமாக வைத்துள்ளார் மங்கை. “சீக்கிரம் வரும் சில மாணவர்களிடம் பேசவும், பிணைப்பை ஏற்படுத்தவும் அந்த நேரம் உதவுகிறது,” என்றார்.
திருவாட்டி மங்கையால் அவரது உழைப்பின் பலனைக் காணமுடிகிறது. “இவ்வாண்டு, அவர்கள் நன்கு பழகிவிட்டதுடன், என்னிடமும் நெருங்கியுள்ளனர். நான் சற்றே கடினமான ஆசிரியர் என்றாலும் என்னைத் தோழமையாகக் கருதத் தொடங்கியுள்ளனர், அவர்கள் அனைவரும் அன்புமிக்கவர்கள்.”
கனவுகளை ஊக்குவித்தல்
திருவாட்டி மங்கை போன்ற ஆசிரியர்களால் பயனடைந்த மாணவர்களில் ஒருவர் ஜானி டான், 16. இவர் கடந்த மூன்று ஆண்டுகளாக =ட்ரீம்ஸில் பயின்று வருகிறார்.
டன்மன் உயர்நிலைப்பள்ளி மாணவர் ஜானி பொதுக் கல்விச் சான்றிதழ் சாதாரண நிலை தேர்வெழுதவுள்ளார். தமது தாயார் மூளைக்கட்டியால் பாதிக்கப்பட்டதைப் பார்த்த அவருக்கு, நரம்பியல் சிகிச்சை நிபுணராக வேண்டும் எனும் கனவு பிறந்தது. “அவரது எண்ணம் எனக்குப் புரிகிறது. தம்மைப் போன்று சிரமப்படுவோர்க்கு உதவ விரும்புகிறார்.அவரது கனவை நனவாக்கும் விதமாகத் தொடர்ந்து அதிக மதிப்பெண்கள் பெறுகிறார்.”
“தொடக்கத்திலிருந்தே எந்தவித துணைப்பாட வகுப்புமின்றி நானே படித்தேன். =ட்ரீம்ஸ் வந்தபோது அங்கு ‘படிப்பு நண்பர்’, ‘வீட்டுப்பாடச் சாலை’ ஆகிய திட்டங்கள் குறிந்து தெரிந்துகொண்டேன். பிற்பகல் நேரத்தில் தொண்டூழியர்கள் வந்து வகுப்பெடுப்பார்கள். அதிலிருந்து எனது மதிப்பெண்கள் அதிகரித்துள்ளன.”
ஜானி ஆசிரியர் மங்கையிடம் தாயுள்ளத்துடன் கூடிய ஆதரவு கிட்டியதை உணர்ந்தார். “அவரது வகுப்பில் ஒரு வீடு போன்ற உணர்வு கிடைக்கும். சொந்தப் பிள்ளைபோலப் பார்த்துக்கொள்வார். ஒருமுறை ஆங்கிலத் தேர்வைச் சரிவரச் செய்ய முடியவில்லை. அதனைத் தொடர்ந்து அவரிடம் சில ஆலோசனைகளையும் கருத்துகளையும் கேட்டேன். உணவுண்ணும் நேரமாக இருந்தாலும், அதனை ஒதுக்கி, எனக்காக நேரம் செலவிட்டார். அது அவரது அர்ப்பணிப்பைக் காட்டியது.”
ஜானி, பிறருக்கு உதவுவதன் மூலம் இந்த ஆதரவினைத் திருப்பிச் செலுத்துகிறார். ‘=ட்ரீம்ஸ்’ தலைமைத்துவத் திட்டத்தின் செயற்குழுவில் பங்காற்றுகிறார். “இத்திட்டங்களின் மூலம் பல்வேறு மாணவர்களுடன் பேசி அவர்களது உணர்வுகளை அறிந்துகொள்வேன்.”
‘=ட்ரீம்ஸ்’ அளித்த அனுபவம் ஒற்றையாகத் தம்மை வளர்க்கும் தாயாரின் தியாகத்தை உணர்த்தியுள்ளது. “ =ட்ரீம்ஸ் ஒரு பிள்ளையை வளர்ப்பதில் உள்ள சிரமத்தை உணர்த்தியது. வீட்டில் பிள்ளைகளாக மட்டும் இருக்கும் எங்களால் இங்கு வழிகாட்டியாகவும் செயல்படும் வாய்ப்பு கிடைக்கிறது.”
அவரது தாயாரைப் பெருமைப்படுத்தியுள்ளார் ஜானி.
“தனித்திச் செயல்படக்கூடிய, பொறுப்பான ஒருவராக என்னை =ட்ரீம்ஸ்’ மாற்றியுள்ளதாக எனது தாயார் கருதுகிறார். தொடக்கத்தில் பெரும் விருப்பம் இல்லை என்றாலும் =ட்ரீம்ஸ் தரும் நடவடிக்கைகள்மூலம் நான் பொறுப்பையும், கழிவிரக்கத்தையும் கற்றுக் கொண்டுள்ளதை என் தாயார் உணர்கிறார்.”
திறமையை வெளிக்கொணர்தல்
ஜானியைப் போலவே சகிராவும் =ட்ரீம்ஸில் பயில்பவர். ஜனவரி 2023 ஆம் ஆண்டின் தொடக்க வகுப்பில் இணைந்தோரில் ஒருவர். “என் தாயார் இவ்விடம் குறித்துச் சொன்னபோதே எனக்குப் பிடித்துப்போனது. இங்கு நேரம் செலவிடுவது பிடித்திருக்கிறது,” என்றார். இவரது சகோதரியும் =ட்ரீம்ஸில் பயில்கிறார்.
=ட்ரீம்ஸ் துணைப்பாட வகுப்புகளில் சேர்ந்தபின் அவரது மதிப்பெண்கள் அதிகரித்துள்ளது. வேதியியல் பாடத்தில் முதல்நிலைத் தேர்ச்சியும் பெற்றார். “இங்குள்ள ஆசிரியர்கள் கனிவானவர்கள். எங்களுக்குத் தேவைப்படும்போதெல்லாம் உதவத் தயாராகவுள்ளனர்.”
திருவாட்டி மங்கை நடத்திய மேடைப்பேச்சு வகுப்பை நினைவுக்கூர்ந்த அவர், அது தமக்கு நம்பிக்கையுடன் பேச உதவியதாகச் சொன்னார். “உயர்நிலை 1 ஆம் வகுப்பில் நான் மிகவும் அமைதியாக இருந்தேன். இங்குள்ள ஆசிரியர்களும் நண்பர்களும் எனக்கு உதவினர். தற்போது நான் தன்னம்பிக்கையுடன் பேசுவதாக என் ஆசிரியர் கூறுகிறார். எனக்கு அது பெருமையளிக்கிறது.”
“திருவாட்டி மங்கையர்க்கரசி மிகவும் கனிவானவர். பேசும்போது அவரது முகத்தில் புன்னகை தவழும்.”
வகுப்பறை தண்டிய வாழ்க்கைப் பாடம்
இவ்வாண்டு =ட்ரீம்ஸ் தொடங்கிய புதிய வழிகாட்டுதல் பிரிவின் ஓர் பகுதியாக மாணவர்கள் தோட்டக்கலை பயின்றனர். “இது வாழ்க்கை ஓட்டத்தைப் போன்றது. ஓர் விதையை விதைத்து, கவனித்து வளர்ப்பது போலவே நமக்குள் நற்குணங்களை விதைத்து வளார்க்க வேண்டும் என்பதை மாணவர்களுக்கு நினைவூட்டுகிறோம். இவ்வகுப்பில் சில வகை விதைகளை நாங்கள் வளர்த்தோம்,” என்றார் திருவாட்டி மங்கை.
தோட்டக்கலைப் பயிற்சியாளர்கள் இன்னும் இணையாததால், ஆசிரியை மங்கை அவ்வௌப்பை வழிநடத்த முன்வந்தார். வீட்டில் தோட்டம் வைத்துள்ள, தோட்டக்கலை ஆர்வலரான இவர் முதற்பருவ மாணவர்கள் 14 முதல் 17 பேருக்கு வகுப்பை வழிநடத்தினார். இதற்காகத் தனியாக நடத்தப்படும் இரண்டு நாள் வகுப்பில் இணைந்து வகுப்புக்குத் தயார் செய்தார் இவர்.
மாலை 5 மணி முதல் 6.30 மணிவரை தோட்டக்கலை வகுப்பு நடக்கும். பின் இரவு உணவு இடைவேளையைத் தொடர்ந்து 5 முதல் 7 மாணவர்கள் கொண்ட துணைப்பாட வகுப்புகள் நடைபெறும்.
விடுமுறைக் காலங்களில் =ட்ரீம்ஸில் செறிவூட்டல் வகுப்புகள் நடைபெறும். “சென்ற ஆண்டு புகைப்படக் கலை வகுப்புகள் நடைபெற்றன. பிறரை நேர்காணல் செய்வது உள்ளிட்ட திறன்களையும் கற்பித்தேன். இவ்வாண்டு வலையொளியை அறிமுகம் செய்தேன்,” என்றார் திருவாட்டி மங்கை.
=ட்ரீம்ஸ் ஊழியரான திருவாட்டி மரிலின் ஆன், ஆசிரியை மங்கை மீது மிகுந்த மரியாதை கொண்டுள்ளார். “அவர் மாணவர்களுடன் இரவு உணவு சாப்பிட நேரம் ஒதுக்குவார். யாருக்காவது சிறு சிரமம் இருப்பது தெரிந்தாலும் உடனடியாக ஊழியர்களிடம் தெரியப்படுத்துவார்.”
வாழ்நாள் முழுவதும் ஆசிரியர்
“ஒரு ஆசிரியர் தம் வாழ்நாள் முழுதும் ஆசிரியராகவே இருப்பார்” என்றார் மங்கையர்க்கரசி. அவர் தமது 27 வயதிலிருந்து இப்பணியில் ஈடுபடுகிறார். ‘கிஃப்டட் ப்ரோக்கிராம்’ தொடங்கி பல்வேறு தன்னாட்டிப் பள்ளிகளில் கற்பித்துள்ளார். கடந்த பத்தாண்டுகள் முழுநேர ஆசிரியராகப் பயணித்த இவர், அரசுப் பள்ளியில் கற்பித்தார். அப்போது பல்வேறு சமூக, பொருளியல் பின்னணியைச் சார்ந்த மாணவர்களுடன் பணியாற்றும் அணுகல்முறை குறித்து அறிந்துகொண்டார்.
“நாம் எனிருக்கிறோம், என்னவாக இருக்கிறோம் என்பது முக்கியமல்ல. மாணவர்களின் மீதான அன்பே முக்கியம். யாருக்குப் பாடமெடுக்கிறோமோ அவர்கள்மீதான அன்பு, நம்மை மீறிச் சிந்திக்க வைக்கிறது,” என்றார் ஆசிரியை மங்கை.
கடந்த 2024 ஆம் ஆண்டு ஐரோப்பிய மேலாண்மை, தொழில்நுட்ப நிறுவனத்தில் கல்வி தலைமைத்துவத் துறையில் முனைவர் பட்டம் பெற்ற இவர், “என் தாயாருக்கு அதில் அதீத பெருமை. அவரது வீட்டின் வரவேற்பில் அச்சான்றிதழைக் காட்சிப்படுத்தியுள்ளார்.”
அவர் தமது தனிப்பட்ட நேரத்தையும், நண்பர்கள், குடும்பத்தினருடன் செலவிடவேண்டிய நேரத்தையும் தியாகம் செய்து, கல்வியை ஒரு தொழிலாக மட்டுமன்றித் தமது வாழ்க்கைக் குறிக்கோளாகவும் ஏற்றுச் செயல்படுகிறார்.
தொடர்ந்து திருப்பிக் கொடுப்பதற்கான வழிமுறைகளை மேற்கொள்ளுதல்
இவ்வாண்டு நவம்பர் மாதம், திருவாட்டி மங்கை தமது முதுகலை ஆய்வறிக்கையை எழுதத் தொடங்குவார். ‘கேரிங் ஃபார் லைஃப்’ எனும் தற்கொலை தடுப்பு தொண்டு நிறுவனத்தின் தன்னார்வலரான இவர் தொடர்ந்து தற்கொலைகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த விரும்புகிறார். இது தமக்கு அத்துறையில் பணியாற்றும் வாய்ப்புகளை அதிகரிக்கும் எனவும் நம்புகிறார்.
முடிவுரை
“சிங்கப்பூர் மிகவும் முன்னேறி, அனைவரும் வசதியாக இருக்கிறார்கள் என நினைக்கிறோம், ஆனால் உண்மையில் அன்றாட அடிப்படைத் தேவைகளுக்காகப் போராடும் மக்கள் இருக்கிறார்கள். =ட்ரீம் உள்ளிட்ட மக்களின் ஆதரவுடன், ஒட்டுமொத்த சமூகத்தையும் நாம் உயர்த்த முடியும்,” என்றார் திருவாட்டி மங்கை.
திருவாட்டி மங்கையர்க்கரசி போன்ற ஆசிரியர்களின் உதவியுடன், =ட்ரீம்ஸ் மாணவர்கள் அவர்களது முழுத்திறனை அடைய வழியமைத்துத் தருகிறது.எடுத்துக்காட்டாக, இவ்வாண்டு ஜூன் மாதம் ‘ட்ரீம் ஃபெஸ்ட்’ எனும் விழாமூலம் பல்துறை நிபுணர்களை வரவழைத்துத் துறையில் உள்ள பல வாய்ப்புகள்குறித்து அறிய உதவியது. அது வேலைப் பயிற்சி வாய்ப்புகளுக்கும் உதவியது.
=ட்ரீம்ஸ் மாணவர்களுக்கு வெளிஉலகைப் பற்றி அறிய ஏதுவாகப் பல வேலைப்பயிற்சி வாய்ப்புகளையும் வழங்குகிறது. மாணவர் ஜானி, உடற்பயிற்சிக் கூடமொன்றில் 3 நாள்கள் வேலைப்பயிற்சி மேற்கொண்டதன் மூலம் பணத்தின் மதிப்பைக் கற்றார். “பணியாற்றுவது உண்மையில் எவ்வளவு கடினமானது என்பதைக் கற்றேன். பணம் சம்பாதிப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அதனைச் செலவிடும்போது, அது நம் கடின உழைப்பு எனச் சொல்லிக்கொள்வது தனி அனுபவம்.”
இந்த எஸ்ஜி 60 ஆண்டில், ‘எஸ்ஜி ஷேர்’ (SGSHARE) மூலம் =ட்ரீம்ஸ் உள்ளிட்ட அமைப்புகளும், ஆசிரியர் மங்கையர்க்கரசி போன்ற சமூக உறுப்பினர்களும் சமூக மேம்பாட்டிற்காக எவ்வாறு பங்களிக்கின்றனர் என்பதைக் குறித்து மேலும் அறிந்து கொள்ளுங்கள்.