தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வாழ்க்கைத் திறன்களை வளர்க்கும் விடுமுறைக்காலப் பயிலரங்குகள்

2 mins read
83bc9e07-db28-4fe4-99be-d300608b87b3
சதுரங்கப் பயிலரங்கில் கலந்துகொண்ட சிறுவர்கள். - படம்: செஸ் அட் திரீ, யுனைடெட் ஸ்குவேர் கடைத்தொகுதி
multi-img1 of 2

சிறுவர்கள் தங்கள் திறமைகளை மேம்படுத்திக்கொள்ளவும் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளவும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பயிலரங்குகள் உதவுகின்றன.

எந்திரனியல் (Robotics) முதல் சதுரங்கம் வரை, இசை முதல் தற்காப்புக் கலைகள் வரை, ஒவ்வொருவரின் ஆர்வத்திற்கு ஏற்றவாறு பற்பல விடுமுறைக்கால முகாம்கள் மே 30 முதல் ஜூலை 6 வரை நடைபெற்று வருகின்றன

யூஓஎல் கடைத்தொகுதிகள் (UOL Malls) குழுமம் முதன்முறையாக நடத்திவரும் யூ-கேம்ப் (U-Camp) விடுமுறைப் பயிலரங்குகள், பாய லேபாரிலிருக்கும் கினெக்ஸ் (KINEX) கடைத்தொகுதி, நொவீனாவில் இருக்கும் வெலாசிட்டி கடைத்தொகுதி, யுனைடெட் ஸ்குவேர் கடைத்தொகுதி என மூன்று கடைத்தொகுதிகளில் இடம்பெற்று வருகின்றன.

இக்கடைத்தொகுதிகளில் 60 வெள்ளிக்கும்மேல் செலவிடும் வாடிக்கையாளர்கள் இரு பயிலரங்குகளுக்குப் பதிவுசெய்யலாம்.

பதிவிடும் ஒவ்வொரு பயிலரங்குக்கும் குறைந்தது பத்து வெள்ளி கட்டணம் செலுத்த வேண்டும்.

மாணவர்களின் புத்தாக்கத்திறன், ஆளுமை வளர்ச்சி, வாழ்க்கைத் திறன்கள் ஆகியவற்றையும் மேம்படுத்த இவ்விடுமுறை முகாம்கள் துணைபுரிகின்றன.

பெரும்பாலும் சிறுவர்களுக்காக மட்டும் இப்பயிலரங்குகள் வடிவமைக்கப்பட்டுள்ளன என்றாலும், தங்கள் பிள்ளையுடன் இணைந்து சில பயிலரங்குகளில் பெற்றோரும் கலந்துகொள்ளலாம்.

தங்கள் வழக்கமான வாழ்க்கைமுறையிலிருந்து வெளிவந்து, புதிய நடவடிக்கைகளில் கலந்துகொண்டு, தன்னடையாளத் தேடலில் ஈடுபட சிறுவர்களுக்கு இது ஓர் அருமையான வாய்ப்பு.

ஜூன் 24ஆம் தேதி யுனைடெட் ஸ்குவேர் கடைத்தொகுதியில் நடந்த அப்படிப்பட்ட ஒரு சதுரங்கப் பயிலரங்கில் 10 சிறுவர்கள் கலந்துகொண்டனர்.

6 முதல் 12 வயதுக்கு உட்பட சிறுவர்களுக்கான இப்பயிலரங்கில், சுவாரசியமான விதத்தில் சதுரங்கத்தின் அடிப்படைகள் கற்றுக்கொடுக்கப்பட்டன.

‘செஸ் அட் திரீ’ என்ற சதுரங்கம் கற்பிக்கும் நிறுவனத்தைச் சேர்ந்த பயிற்றுவிப்பாளர்கள் இப்பியிலரங்கை நடத்தினர்.

“சதுரங்கத்தைத் தாண்டி, நேரத்தை நிர்வகித்தல், சாமர்த்தியமான முடிவுகளை எடுத்தல், விட்டுக்கொடுக்கும் பண்பு போன்ற நற்பண்புகளையும் பங்கேற்பாளர்கள் கற்றுக்கொள்வர்,” என்றார் பயிற்றுவிப்பாளர் போப் ஜுலா வில்லியம்ஸ், 24.

சிறுவர்களின் கற்பனைத் திறனை வளர்க்க, கதைகள் மூலம் சதுரங்க ஆட்டத்தின் விதிகளைப் பயிற்றுவிப்பாளர்கள் விவரித்தனர்.
சிறுவர்களின் கற்பனைத் திறனை வளர்க்க, கதைகள் மூலம் சதுரங்க ஆட்டத்தின் விதிகளைப் பயிற்றுவிப்பாளர்கள் விவரித்தனர். - படம்: விஷ்ருதா நந்தகுமார்

எடுத்துக்காட்டாக, சதுரங்கப் பலகையில் இருக்கும் ராஜா, அதிகமாக உணவு சாப்பிடுவதால், அவரால் ஓர் இடம் மட்டுமே நகர்ந்து வர முடியும் என்ற கதை சொல்லப்பட்டது.

விடுமுறையில் வீட்டில் தனியாக உட்கார்ந்து தொலைக்காட்சி பார்ப்பதைவிட இப்பயிலரங்கில் பங்கேற்றது சுவாரசியமாக இருந்தது என்று சொன்னார் சதுரங்கப் பயிலரங்கில் கலந்துகொண்ட எட்டு வயது கிஷன்.

“இன்றைய பிள்ளைகள் அலட்சியமாக முடிவெடுத்து வேகமாகச் செயல்படுகின்றனர். அப்பழக்கத்திலிருந்து விடுபட்டு, பொறுமையாகச் சிந்தித்து செயல்பட இவ்வகுப்புகள் உதவுகின்றன,” என்று அவரின் தந்தை சுரேஷ், 43, குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்