இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 11) நடைபெற்ற தற்கொலைத் தாக்குதலில் ஏறத்தாழ 12 பேர் மாண்டுவிட்டதாக அந்நாட்டு உள்துறை அமைச்சர் மோஷின் நக்வி தெரிவித்துள்ளார்.
சம்பவத்தில் மேலும் சிலர் காயமடைந்ததாகவும் அவர்களில் ஒருசிலரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் மருத்துவமனைத் தகவல்கள் கூறுகின்றன.
தாக்குதல்காரர் வெடிகுண்டுடன் இஸ்லாமாபாத் மாவட்ட நீதிமன்றக் கட்டடத்தினுள் நடந்துசெல்ல முயன்றதாகவும் ஆனால் அந்தக் கட்டடத்துக்கு வெளிப்புறத்திலேயே வெடிகுண்டை அவர் வெடிக்கச் செய்ததாகவும் கூறப்பட்டது. காவல்துறை வாகனம் ஒன்றின் அருகில் 10 முதல் 15 நிமிடங்கள் அவர் காத்திருந்ததாகத் திரு நக்வி செய்தியாளர்களிடம் கூறினார்.
“பல்வேறு கோணங்களில் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்கிறோம். இது மற்றொரு குண்டுவெடிப்புச் சம்பவம் மட்டுமன்று. இது தலைநகர் இஸ்லாமாபாத்திலேயே நடந்திருக்கிறது,” என்றார் அவர்.
இஸ்லாமாபாத் மாவட்ட நீதிமன்றத்தில் எப்போதும் வழக்குகள் தொடர்பில் பலர் கூடியிருப்பது வழக்கம்.
“எனது காரை நிறுத்திவிட்டு வளாகத்தினுள் நுழைந்தபோது வாசலுக்கு அருகே மிகப் பெரிய சத்தம் கேட்டது,” என்று சம்பவத்தை நேரில் பார்த்தோரில் ஒருவரான வழக்கறிஞர் ருஸ்தம் மாலிக், ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
மற்றொரு வழக்கறிஞரான முகமது ஷஸாத் பட், பிற்பகல் 12.30 மணியளவில் (சிங்கப்பூரில் பிற்பகல் 3.30 மணி) குண்டுவெடிப்புச் சம்பவம் நடந்ததாகக் கூறினார். “மிகப் பெரிய குண்டுவெடிப்பு. பீதியுடன் அனைவரும் வளாகத்திற்குள் ஓடினர். வாயிலுக்கு அருகே கிட்டத்தட்ட ஐந்து சடலங்கள் கிடந்ததைப் பார்த்தேன்,” என்றார் அவர்.
உள்ளூர் ஊடகங்களில் வெளியான காணொளிகள், படங்களில் காவல்துறை வேனுக்கு அருகே மக்கள் ரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் காண முடிந்தது.
தொடர்புடைய செய்திகள்
அரசாங்க அலுவலகங்கள் சில அமைந்துள்ள அந்த வட்டாரத்தில் காவல்துறை, துணை ராணுவ அதிகாரிகள் தடுப்புகளை அமைத்துள்ளனர்.

