காஸா நகரம்: அமெரிக்க ராணுவம், காஸா வட்டாரத்தில் தற்காலிகத் தளமொன்றை அமைக்கும் சாத்தியத்தை ஆராய்ந்து வருகிறது.
பத்தாயிரம் பேரை அங்குத் தங்கவைக்க அது திட்டமிடுகிறது. இஸ்ரேலுக்கும் ஹமாஸ் குழுவுக்கும் இடையில் சண்டை நிறுத்த உடன்பாடு சென்ற மாதம் (அக்டோபர் 2025) எட்டப்பட்டது. அதனை வெளிநாட்டுப் படைகள் கண்காணிப்பதில் புதிய தளம் உதவக்கூடும் என்று அமெரிக்க ராணுவம் கருதுகிறது.
தற்காலிக ராணுவத் தளம் 12 மாதத்திற்குச் செயல்படுவதற்குத் தேவையான வசதிகளை அமைத்துக்கொடுக்க எவ்வளவு செலவாகும் என்பதை அமெரிக்கக் கடற்படை மதிப்பிட முனைகிறது. அந்தத் தளம் 10,000 பேர் தங்கக்கூடிய வசதிகளையும் 10,000 சதுர அடி பரப்பளவைக் கொண்ட அலுவலக இடத்தையும் கொண்டிருக்கும் என்று நம்பப்படுகிறது. குத்தகைதாரர்கள் சிலருக்கு அனுப்பப்பட்ட குறிப்புகளில் அந்தத் தகவல் இடம்பெற்றிருந்ததாகக் கூறியது புளூம்பெர்க் செய்தி ஊடகம்.
உத்தேசக் கட்டுமானத் தளம், இஸ்ரேலுக்கும் காஸாவுக்கும் அருகில் இருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
குறிப்புகள் அக்டோபர் 31ஆம் தேதி அனுப்பப்பட்டன.
காஸாவுக்கு வெளிநாட்டுப் படையினரை அனுப்புவதற்கான பரிந்துரைக்கு அனைத்துலக அளவில் ஆதரவு நாடுகிறது அமெரிக்கா. இஸ்ரேலுக்கும் ஹமாசுக்கும் இடையிலான சண்டை நிறுத்தத்தை நீட்டிப்பது நோக்கம்.
வெளிநாட்டுப் படைகள், ‘அனைத்துலக நிலைத்தன்மைப் படை’ என்று ஒட்டுமொத்தமாக அழைக்கப்படுகின்றன. அது வட்டாரத்தைப் பாதுகாத்து அங்கு மறுநிர்மாண முயற்சிகளை மேற்கொள்ள இஸ்ரேலுடனும் எகிப்துடனும் சேர்ந்து பணியாற்றும்.
“வெளிநாட்டுப் படையினரைத் தங்கவைப்பதற்கான உத்தேசத் தளங்களை முடிவுசெய்வதில் அனைத்துலக ராணுவத்தினருடன் அமெரிக்கா தற்போது பணியாற்றுகிறது,” என்று அமெரிக்க மத்திய தளபத்தியத்தின் பேச்சாளர் டிம் ஹாக்கின்ஸ் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
“காஸாவில் அமெரிக்கப் படையினர் பணியமர்த்தப்படமாட்டார்கள்,” என்றும் அவர் தெளிவாகச் சொன்னார்.

